காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் ! கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில்  இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண  அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !

அசை போடுகிறேன் !    கவிஞர் இரா .இரவி .

நீயும் நானும்
பேசிய நிமிடங்களும்
சந்தித்த நாட்களும்
மிகவும் குறைவுதான் !
மூச்சு இருக்கும் வரை
நினைவு இருக்கும் !
பசுமையான நினைவுகள் அவை !
மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை!

சொல்வதில்லை !     கவிஞர் இரா .இரவி

பிரிந்து வருடங்கள்
பல கடந்தும்
மனதில் , நினைவில்
வருடி விட்டு செல்கிறாள் !
தனிமையான நேரங்களில்
நினைவில் வந்து செல்கிறாள் !
மறக்க நினைத்தாலும்
மறக்க முடிவதில்லை !
மூளையின் மூலையில் இருந்து
மூ்ழ்கடிக்கிறாள் !
மறந்து விட்டதாக
உதடுகள் சொன்னபோதும்
உள்ளம் ஒருபோதும்
சொல்வதில்லை !

மன்னிக்கட்டும் கலாம் ! கவிஞர் இரா  .இரவி .

தூங்கும்போது காண்பதல்ல கனவு !
தூங்கவிடாமல் செய்வதே கனவு !
படித்தேன் கலாம் வாசகம் !
தூங்கும்போது காணும் கனவில் அவள்  !
தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள்  !
கலாம் என்னை மன்னிக்கட்டும் !

இனிமை ! இளமை ! கவிஞர் இரா .இரவி .

உனக்கும் எனக்குமான
நட்பு காதலாகி
அடுத்தக் கட்டம்
அடைந்தபோது
சின்னச் சின்ன
தீண்டல் தொடங்கியது !
தீயாய் எரிந்தது !
எண்ணிக்கையில் குறைவு என்றாலும்
எண்ணங்களில் மிக நிறைவு !

உண்மை ! கவிஞர் இரா .இரவி .

பார்த்தும் காதலா ?என்று
பார்த்தவர்களிடம் கேலி பேசியவன் !
உன்னைப் பார்த்ததும் காதல் வந்தது
உன்னிடம் தாமதமாகத்தான் சொன்னேன் !
காதலை ஏற்றுக் கொண்ட நீயும் சொன்னாய் !
பார்த்த  அன்றே காதல் மலர்ந்த உண்மையை !

நம்பிக்கை !  கவிஞர் இரா .இரவி .

தூக்குத் தண்டனை கைதியிடம்
நிறைவேறாத ஆசை என்ன ?
என்பார்கள் !
முடிந்தால் நிறைவேற்றுகள் !
நானும் தூக்குத் தண்டனை கைதியாக
விரும்புகின்றேன் !
உன்னை ஒரு முறை பார்க்க ஆசை
நிறைவேற்றுங்கள் என்பேன் !
உன்னை அழைத்து வந்து
என்னிடம் காடு்வார்கள் !
இறக்கும் முன் ஒரு முறை
உன்னை பார்த்து விடலாம் !

என்னவள் !  கவிஞர் இரா .இரவி .

அங்கிருந்து என்னை
இங்கு இயக்குகின்றாள் !
எங்கிருந்தபோதும்
என்னுள் இருக்கின்றாள் !
எழுச்சி தருகின்றாள் !
மனக்கவலை வரும்போது
மனத்தெம்பு தருகின்றாள் !
சோர்வு வரும்போது
சுறுசுறுப்பு தருகின்றாள் !
துன்பம் வரும்போது
இன்பம் தருகின்றாள் !
தடுக்கி விழும்போது
திரும்ப எழ  வைக்கிறாள் !
விரக்தி வரும்போது
சக்தி தருகின்றாள் !
என்னுள் என் நினைவுள்
கலந்த இனியவள் !
அவள் என்னவள் !

பிடிக்காத புத்தர்    கவிஞர் இரா .இரவி .

புத்தரை எல்லோருக்கும் பிடிக்கும் !
ஆனால் எனக்குப் புத்தரைப் பிடிக்காது !
என்னவளே உன் மீது அளவற்ற
ஆசை வைத்திருக்கும் எனக்கு
"ஆசையை அறவே அழி " என்ற
புத்தர்  போதனை பிடிக்கவில்லை   .அதனால்
புத்தரையும் பிடிக்கவில்லை !

இதமான மனசு  !  கவிஞர் இரா .இரவி .

பேசும் போது  உன் விரல் பட்டு
என் கண்கள் கலங்கியது !
உடன் நீ உன் கைக்குட்டை எடுத்து
உன் வாயில் வைத்து ஊதி விட்டு
என் கண்ணில் ஒத்தினாய் !
இதமானது கண் மட்டுமல்ல
என் மனசும்தான் !
இப்படி ஒரு சுகத்திற்காக
எத்தனை முறையும்
விரல்கள் விழிகளில் படலாம் !
கல்வெட்டாகத் பதிந்தது
இந்த நிகழ்வும் நம்  உறவும் !

கண்டுபிடித்தாள் கள்ளி ! கவிஞர் இரா .இரவி .

சேலை ஒன்று என்னவளுக்கு
வாங்கித் தந்தேன் !
எனக்காக வாங்கியதா ? என்றாள் !
உனக்காக நெய்தது ! என்றேன் !
கைத்தறிச்சேலை என்பதை
உயர்வாகச் சொல்கிறாய் !என்றாள் !
கைத்தறி உயர்வானதுதான் !என்றேன் !
பட்டுச்சேலை வாங்கப் பணம்
இல்லை என்பது தெரியும் !என்றாள் !
மனதிற்குள் ! கண்டுபிடித்தாள் கள்ளி !
என்பதை நினைத்துக் கொண்டு
பட்டுச்சேலையை விட
கைத்தறிச்சேலைதான்
உனக்கு அழகு என்றேன் !
பட்டுக்கு எதற்கடி பட்டு
என்றேன் !
பட்டென சிவந்து நின்றாள் !

தண்ணீர் குடிப்பாயாக ! கவிஞர் இரா .இரவி .

நான் சாப்பிடும் போது
பொறை  ஏறியது !
என் அம்மா உடன்
தலையில் தட்டி
யாரோ நினைக்கிறார்கள்
என்றார்கள் !
நினைப்பது நீ என்பது
எனக்குத் தெரியும் !
உடன் நான் உன்னை நினைத்தேன் !
உனக்கும் பொறை  ஏறி இருக்கும் !
இங்கு நான் தண்ணீர் குடித்து விட்டேன்
அங்கு நீயும் தண்ணீர் குடிப்பாயாக

விழிப்படம் ! கவிஞர் இரா .இரவி

இருவரும் சேர்ந்து
ஒரே ஒரு திரைப்படம்தான்
பார்த்தோம் !
திரைப்படம் பார்த்த நேரத்தை விட
அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும்தான்
அதிகம் !
இதழ்களை விட
விழிகள்தான் அடிக்கடி பேசிக் கொண்டன !
காதலர்கள் ஏன் ?
திரைப்படம் செல்கிறார்கள் என்பது
அன்றுதான் விளங்கியது எனக்கு !

விலைமதிப்பற்ற பரிசு ! கவிஞர் இரா .இரவி .

அவளிடம் பல முறை
பரிசு வாங்கி இருக்கிறேன் !
நானும் அவளுக்கு பல முறை
பரிசு வழங்கி  இருக்கிறேன் !
உருவம் இல்லாத பரிசு !
உணர்ச்சி மிகுந்த பரிசு !
நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும் பரிசு !
சகாராவில் பாய்ந்த
நயாகராவாக
அவள் முத்தம்தான்
விலைமதிப்பற்ற பரிசு !

அறிவாளி அவள் !கவிஞர் இரா  .இரவி .

என்னவள் அழகை விட
அறிவில் சிறந்தவள் ! என்றேன் .
நண்பன் இருக்காதே ! என்றான் .
அறிவில் சிறந்தவள் எப்படியடா
உன்னை காதலிப்பாள்  !என்றான் .
பொறாமையில்  பேசும் நண்பனை
பொருட்படுத்தவில்லை நான் !
என்னவள் அழகி என்பதை விட
அறிவாளி என்பதால்தான்
எனக்குப் பிடித்தது அவளை !

--

கருத்துகள்