தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் .

வெளியீடு மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன் . நாகர்கோவில்   விலை ரூபாய் 70.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நாகர்கோவில் கவிதை உறவு அமைப்பின் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு கலை மாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் , தமிழ்த்தேனீ  இரா .மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ,கவிஞர் திருநாவுக்கரசு மற்றும்  நானும் கலந்து கொண்டோம் .இந்த நூலை தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் அவர்கள் வெளியிட்டார்கள் .வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .விழா ஏற்பாட்டை மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன் செய்து இருந்தார்கள் .
நாகர்கோவில் மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன் அவர்கள் சேவைச் செம்மல் குற்றாலிங்கம் - மீனாட்சி அம்மாள்  அறக்கட்டளை நிறுவி , அதன் மூலம் இந்த நூலை வெளியிட்டு , "இந்தப் புத்தக விற்பனைத் தொகை அறக்கட்டளை நிதியுடன் ஏழை  மாணவர் கல்வி மேம்பட உதவும் " என்ற அறிவிப்பும் நூலில் பதிவு செய்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் அவர்களின் ஒப்பற்ற உழைப்பை உணர முடிகின்றது .குமரி மாவட்ட பெயர்கள் ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள் .தமிழின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .தமிழுக்கு உரம் சரக்கும் நூல் இது. தமிழருக்கு பெருமை சேர்க்கும் நூல் இது . ஊரின் ஒவ்வொரு பெயரும் காரண காரியங்களுடன் அமைத்துள்ளது என்பதை இலக்கியச் சான்றுகளுடன் எழுதி  உள்ளார் .

 " வேண்டுமென்றே  மறைக்கப்பட்டும்  உச்சரிப்புப் சோம்பலால் சிதைத்தும் ,அழித்தும்  மனம் போனவாறு திரித்தும் ,கற்பனைக் கதைகளின் அடிப்படையிலும் தொடக்க காலத்  தமிழ் பெயர்களை அறவே மாற்றினர்.      நடு +ஆலம் =  "நடுவாலம் "என்பதை "நட்டாலம்" என எழுதுகின்றனர் . ( NATALAM )என ஆங்கிலத்தில் எழுதி தமிழில் உச்சரிப்பதால் ஏற்பட்ட விளைவு .  

இந்த தகவலை நூலில் படித்தவுடன் மதுரையில் இதுபோன்று நிகழ்ந்துள்ள தகவல் என் நினைவிற்கு வந்தது .மழை நீர் எவ்வளவு வந்தாலும் வெளியே தள்ளாத குளம் என்பதால் தல்லாகுளம் என்று இருந்ததை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் ( TALLAKULAM ) என்று எழுதியதை உச்சரித்து இன்று தல்லாகுளம் என்று ஆகி விட்டது .

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தின்   பெயர் " ஊர் மெச்சிய குளம் " நல்ல தமிழ்ப்பெயர்  ஊமச்சிகுளம்   என்றாகி விட்டது .நூல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் ஊர்களில் நடந்த இது போன்று நினைவிற்கும் வரும் .
இடப் பெயர் ஆய்வை மிக நுட்பமாக நிகழ்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர்
ஆதி .பாலசுந்தரன்.


ஊர்ப் பெயர்கள் ; குறிச்சி ,ஊர் ,குடி ,பாடி ,சேரி , கோடு,பட்டினம் ,பாக்கம் ,காவு ,காடு ,கா என்றெல்லாம் ஊர்களுக்குப் பொதுப் பெயர் இட்டு வழங்கினர் .நிலங்களுக்கு ஏற்ற வகையில் இப்பெயர்கள் அமைத்தனர். இவை இடுகுறிச் சிறப்புப் பெயர்களாக அமைந்தன .நூல் முழுவதும் பல அரிய தகவல்கள் உள்ளது .

கல் + ஆலம் + குடி = "கல்லாலங்குடி" என்பது பேச்சு வழக்கில் கல்லாங்குடி என்றானது.
இடை + ஆலம் + குடி =  இடை ஆலக்குடி , "இடையாலக்குடி " என்பதை "இடலாக்குடி ","எடலாக்குடி" என்றானது .

ஆலமரப் பெயர் ஊர்கள் ; ஆலமரப் பெயர் கொண்ட பல ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளன .
ஆலம்பாறை ,ஆலங்கோடு ,ஆல
ஞ்சோலை ,ஆலம்பாடி , ஆலங்கானம் ,ஆலந்துறை ,ஆலவாய், ஆலம்பொழில் ,ஆலடியூர் ,ஆலடிப்பட்டி ,ஆலங்குளம் என்பன . இந்தத் தகவலைப் படித்ததும் உடன் என் நினைவிற்கு வந்தது . மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டு .மதுரை அருகே ஆலங்குளம் என்ற ஊர் இன்றும் உள்ளது .

குமரி மாவட்டத்தில் ஆல் + ஊர் = ஆலூர்  என்பது   ஆளூர் ஆனது .
குறுமை + ஆலம்  = குற்றாலம் .

நூல் ஆசிரியர் ஆதி .பாலசுந்தரன் அவர்கள் தமிழ் அறிஞர் என்பதால் தொல்காப்பியம் , சங்க இலக்கியம் போன்றவற்றில் இருந்து பாடல்களின் சான்றுகளுடன் நூல் எழுதி பிரமிக்க வைத்துள்ளார் .

கள்ளியங்காடு   என்னும் சங்ககாலக் காட்டுப் பெயர் ,அப்படியே இங்கே சொல்லப்படுவது குமரியின் தொன்மைக்கு மேலும் ஒரு சான்றாகும் ." பரல் கல் 
விளை "  என்னும் ஊர்ப் பெயரை பேச்சுவழக்கில் "பறக்கை" எனச் சொல்கிறார்கள்  .

குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வகைகளில் ஒன்று இணையம் என்பது , சங்ககால
ப் பெயர் . (VEGITATION SURVEY, BIOMASS )என இப்போது தாவர அறிவியலில் கூறப்படும் செய்திகளை நம் முன்னோர், அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப அறிந்து இருந்தனர் .இப்படி பல அறிய தகவல்கள் நூலில் உள்ளது .

"ஊறல் வாய் பொழில்" என்ற நல்ல தமிழ்ப் பெயர் இன்று "ஊரல்வாய்மொழி " என்றானது .

குறும்பனை ,ஏழ்தெங்கு, அஞ்சுதெங்கு ,ஒற்றைத்தெங்கு ஆகிய குமரிக்கண்டம் சார்ந்த ஊர்கள் இப்போதும் குமரி மாவட்டத்தில் உள்ளன .

தமிழகத்தில் திருநின்றவூர் சென்னைக்கு அருகில் உள்ளது .
திருநின்றவூர் எனற இதே பெயரில் காஸ்மீரத்தில்  ஒரு ஊர் இருந்தது .வட மொழி வழக்கிற்கு ஏற்ப ஸ்ரீநகர் ஆனது .இமயம் முதல் குமரி வரை தமிழர்களே வாழ்ந்தார்கள் , ஆண்டார்கள் என்பதை உணர்த்தும் மிக நல்ல ஆய்வு .பாராட்டுக்கள் .
கேரளத்தின் கடற்கரையிலும் "அலை வாய் " என்னும் ஊர் உள்ளது .இதனை ( ALWAY ) என ஆங்கிலத்தில் எழுதியதன் விளைவாக ஆல்வே ,ஆல்வாய் என வழங்கப் பட்டு விட்டது .

ஆய்வில் குமரி மாவட்டம் மட்டும் ஊர்ப்  பெயர் எழுதி உள்ளார்கள் .விரைவில் தமிழகம் முழுவதற்குமான ஊர்ப்  பெயர்  ஆய்வு செய்து எழுத வேண்டும் .அந்த நூலையும் மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன் அவர்கள் வெளியிட்டு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கின்றேன் .இந்த நூல் படித்து முடித்தவுடன் எனக்கும் ஆய்வு உள்ளம் மலர்ந்தது .எள் + நெய் =  எண்ணை .எனவே எள்ளில் இருந்து வரும் எண்ணையைத்தான்   எண்ணை என்று சொல்ல வேண்டும் .தேங்காய் + நெய் = தேங்காய்நெய் ஆனால் நாம் தேங்காய் எண்ணை என்று சொல்கிறோம். கடலை + நெய் =கடலைநெய்.ஆனால் நாம் கடலைஎண்ணை என்று சொல்கிறோம்.
இனி வரும் காலங்களில் காரண காரியம் அறிந்து வைத்துள்ள நல்ல தமிழ்ப் பெயர்களை .அதன் உண்மையான பொருளிலேயே அழைப்போம் .எழுதுவோம் .பாராட்டுக்குரிய  நூல் .பயனுள்ள நூல் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் அவர்களுக்கும் , வெளியிட்டு உதவிய
 மருத்துவர்  கு .  சிதம்பர நடராஜன்
அவர்களுக்கும் பாராட்டுக்கள் .

கருத்துகள்