படித்ததில் பிடித்தது

வித்தகக் கவிஞர். பா.விஜய்: தேனீர் கடை நட்பு அணைக்கட்டில் உடைந்திடுமா?


தேனீர் கடைதான் சேட்டா
நம் நட்புக்கு பால் காய்ச்சிய இடம்

ஊணுகழிச்சோ என்பதுதான்
உன்னோடு நான் பேசிய
நட்பின் பிள்ளையார் சுழி


அடப்பிரதமனில் இருந்து
அரிகரசுதனே வரைக்கும்
எத்தனை பிராயங்கள் நாம்
எங்கெங்கிலும் கழிச்சிட்டுண்டு

தமிழன் - மலையாளி
நானும் பிரித்ததில்லை
மலையாளி - தமிழன்
நீயும் பிரிந்ததில்லை

தமிழ் மொழியின்
தொன்மைக் கிளை வடிவமே
மலையாளம் என்பதறிவோம்
நீயும் நானும்

‘புட்டும் வேட்டியும்’ என்ற
ஆதித் தமிழ் அடையாளங்களை
நான் விட்டுவிட்டேன்
நீ தொடர்கின்றாய்

வசந்த விழாவை நான்
வரலாற்றில் தொலைத்தேன் - அதை
விஷீக் கனியில் அகழ்ந்தெடுத்தாய்
வணங்குகின்றேன் சிரம்!

உலகில் எல்லா
இனக் குழுக்களுக்கு இடையிலேயும்
தீ மூட்டி பார்த்த அரசியல்தான்
உனக்கும் எனக்கும் இடையே..

மலையாளி என்னும்
இனப் பலகைக்குப் பின் இருக்கும்
மனிதம் என்ற உணர்வில் சொல்

அங்கே நடப்பது
அணை உடையும் பிரச்சனையா..?
ஆட்சி உடையும் பிரச்சனையா…?


வில் கொடி பறந்த நாட்டில்
தமிழன் புகக் கூடாதெனில்
தகர்கிறது சேவற்கொடியின்
தன்மான கல்லறைகள்

விரிந்த முல்லைப் பெரியாற்றில்
விரிக்கப்பட்ட வலை
மலையாள நாட்டுக்காக அல்ல..
மலையாளிகள்; ஒட்டுக்காக!

நீர் மட்டம் உயர்தல்
நீர் மட்டம் குறைத்தல்
என்ற நிலை நியாயம்;
யார் மட்டம் உயர்த்தல்
யார் மட்டம் குறைத்தல்
என்ற நிலை துரோகம்!

அணையில் விரிசல் விழுமென
அச்சப்படுகிறாய் நீ
உலக வரைபடம் எங்குமிருக்கும்
தமிழர் மலையாளிகளின்
அன்பில் விரிசல் விழுமோ என
அஞ்சுகிறேன் நான்!

சுமூகமாய் பாய்ந்து வந்தால்
அது நதி
கேரள அரசியல் சமூகமாய்
அது முடிந்துவிட்டால்
அது நதியல்ல.. சதி!

மத்திய அரசு சொல்வதென்ன?
மாநில அரசு சொல்வதென்ன?
மனிதம் என்ன சொல்கிறதோ
மலையாளிகளே அதைச் செய்யுங்கள்

ஒன்று உறுதி..
முல்லைப் பெரியாறு
அங்கேயே நின்றுவிட்டால்
அது சேறுக்கு உதவும்
இங்கே வந்ததென்றால்
அது சோறுக்கு உதவும்!

கேரள கரைவேட்டிகளே
நதிக்கு கரை
நாங்கள் செய்து கொள்கிறோம்..
நதிக்கு கறை
நீங்கள் செய்யாத வரை!




--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்