எதிர்கொள் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


எதிர்கொள்

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாஅவர்களின் ஆறாவது கவிதைத் தொகுதி .
பல்வேறு பாடு பொருள்களில் பாடி உள்ளார் .முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

சுரப்பு


கால மணல் தோண்டக் கிடைத்தது கவிதை நதி
அத நீர்மையாகவும் தண்மையாகவும் இருந்தது வாழ்க்கை
காலத்தின் வழியே கரை புரளும் வாழ்வென்பது வற்றாத கவிதை
காலக் கரைப்படுகையில் எப்போதும் காத்திருக்கும் .
ஈரவாழ்வு

காலம் தோண்டக் கவிதை சுரக்கும்
கவிதை தோண்ட வாழ்வு சுரக்கும்

இந்நூலில் ஹைக்கூ கவிதைகள் சில உள்ளது .

மரணத்தின் யாப்புகளை
மௌனமாய் இசைக்கிறது
பழுத்த இலையொன்று

இந்த ஹைக்கூ நம்மை சிந்திக்க வைக்கின்றது .
தத்துவம் சார்ந்த கவிதைகளும் நூலில் நிறைய உள்ளது .
அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்கு .

சமைத்தல்

முதலுணவைச் செடிகள் சமைக்க
இரண்டாமுணவை ஆடு மாடு சமைக்க
மூன்றாமுணவை சமைக்கிறது மண்

சில கவிதைகள் இரண்டாம் முறை படிக்கும்போதுதான் நன்கு புரிகின்றது .
புரிந்தவுடன் மீண்டும் ஒரு முறை படிக்க வைக்கின்றது கவிதை .இதுதான் படைப்பாளியின் வெற்றி .
சுவை என்ற கவிதை வாசித்து ருசிக்க மிகவும் சுவையாக உள்ளது .படித்துப் பாருங்கள் நீ ங்களே உணருவீர்கள் .

சுவை

புழு அறியும் மண்ணின் சுவை
மீன் அறியும் புழுவின் சுவை
கொக்கறியும்கொக்கின் சுவை
மனிதரறிவார் கொக்கின் சுவை
மண்ணறியும் மனிதச் சுவை
புழு அறியும் மண்ணின் சுவை

கவிதைத் தொடங்கிய வரியிலேயே முடிவது தனிச்சிறப்பாக உள்ளது. சுவை என்ற பொருளில் தொடர் வண்டி போல கவிதையை ஓட்டிச் செல்கிறார் .
நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா வாழ்வின் நிலையாமை பற்றி பழங்காலச் சித்தர்கள் போல் கவிதை எழுதி உள்ளார் .

இருப்பு

அப்போதிருந்ததெல்லாம் இப்போதிருக்கவில்லை
இப்போதிருப்பதெல்லாம் எப்போதுமிருப்பதில்லை
எப்போது இருப்பதென்று எப்போதும் எதுவுமில்லை .

எதிர்கொள்

எங்கே தப்பித்து எங்கே செல்வாயாம்
எதனையும் எபோதும் எதிர் கொள்ளாமல் ?

நூலின் தலைப்பில் உள்ள கவிதை நுட்பமானப் பதிவு .

இன்றைக்கு இலக்கியவாதிகள் ஒற்றுமையாக இருப்பதில்லை .நிறைய முரண்பாடுகள் கருத்து வேறுபாடுகள் உள்ளது என்பதை உணர்த்தும் கவிதை .

முற்றல்
வாய்கள் பேசும் இலக்கியம் சில சமயம் முற்றிக்
கைகள் பேசும் கருத்தரங்கம் சில சமயம்

சட்டசபை போல சில சமயம் கருத்தரங்கங்களிலும் கைகலப்பு நடந்து விடுவதை கவிதையால் உணர்த்துகின்றார் .
கவிதை பற்றி ஒரு கவிதை எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா.

யாரறிவார் ?
எந்நேரம் கருக்கொள்ளும் ?
எந்நேரம் உருக்கொள்ளும் ?
யாரறிவார் ? கவிதை

உண்மைதான் கவிதை எழுத வேண்டும் என்று உட்காரும்போது நல்ல கவிதை உடன் வந்து விடுவதில்லை .பயணப்படும்போது ஏதாவது பணியில் இருக்கும்போது ,சிந்தனையில் உதயமாகும்போது நல்ல கவிதை உருவாகும் .இக்கவிதையை உணர்ந்து ரசித்தேன் .

கட்டம்

கட்டம் போட்டு கட்டம் மேலே
கட்டம் மேலே கட்டம் கட்டமாய்க்
கட்டம் கட்டமாய்க் கட்டம் அடுக்க
கட்டம் அடுக்க கட்டடம்

கட்டடம் பற்றி கட்டம் என்ற சொல் வைத்து கவிதைக் கட்டடம் கட்டி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாவிற்கு பாராட்டுக்கள் .

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் உள்ள
நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாவிடமிருந்து இன்னும் முற்போக்கான
கவிதைகளை எதிர்பார்கின்றேன் .

மாதவம்

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்
மங்கையராக வாழ்வதற்கு மாபெரும் போரிட வேண்டும்
மங்கையரின் வாழ்க்கைப் பற்றி இரு வரியில் சிந்திக்க வைக்கின்றார் .

அதிகாரம்

அதிகாரம் என்பதையே கொட்பாடுகள் என்று
அமுல்படுத்த முயல்கிறார்கள்
அதிகாரம் நக்கியே பிழைத்துப் பழகியவர்கள் .

இப்படி சிந்திக்க வைக்கும் பல்வேறு கவிதைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது பாராட்டுக்கள்

கருத்துகள்