வைகை மீன்கள் நூல் ஆசிரியர்: கவிஞர் வெ.இறையன்பு இஆப நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

வைகை மீன்கள்

நூல் ஆசிரியர்: கவிஞர் வெ.இறையன்பு இஆப

நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

கடலைச் சேராத ஆறு வைகை. 'வைகை மீன்கள்' என்ற நூலின் பெயரே நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. நூல் ஆசிரியர் வெ.இறையன்பு பன்முக ஆற்றலாளர், சிறந்த சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், நாவல் ஆசிரியர், மிகச் சிறந்த நிர்வாகி என்பது யாவரும் அறிந்த ஒன்று. கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது. வைகை மீன்கள் வாசகர்களின் உள்ளக்குளத்தில் நீந்தும் கவிதை மீன்கள்.

கவிதை எழுதிய கவிஞரே வந்து விளக்கவுரை தந்தால் ஒழிய, புரிய இயலாத கவிதைகள் மலிந்துவிட்ட காலத்தில், தெளிந்த நீரோடை போன்ற நடையில், படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் எளிய நடையில் ஹைக்கூ கவிதைகளுக்குரிய சொற்சிக்கனத்துடன் கவிதைகள் உள்ளன. சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன் கவிதை வடித்துள்ளார். இக்கவிதைகளில் நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவம் பாதி, கற்பனை மீதி கலந்த சேதியாக உள்ளது. நூலில் நம்மைக் கவர்ந்த வரிகளைக் குறிப்பிடுவதற்கு வசதியாக நூலின் மேல் பகுதியை மடிக்கலாமா? என்று கருதினேன். நூலின் அனேகப் பகுதி மடித்தால், நூல் அழகு போய்விடும் என்று அடையாளமாக சிறுதாள்கள் வைக்கலாம் என்று முடிவெடுத்து, தாள்கள் வைத்து வந்தேன். கடைசியில் பார்த்தால் அத்தனை பக்கங்களிலும் தாள் வைத்துவிட்டேன். புகழ்ச்சிக்காக எழுதவில்லை. நடந்த உண்மை. எதை எடுக்க, எதை விடுக்க திகைப்படைந்தேன். பிடித்த வரிகளைப் பட்டியலிட்டால், நூல் முழுவதும் குறிப்பிட வேண்டும். எனவே திரும்பவும் வாசித்து மறுபரிசீலனை செய்து மனமின்றி பல தாள்களை அகற்றி விட்டேன்.

சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. நூலாசிரியர் கல்லூரி மாணவராக இருந்தபோது, சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் கவிதை பாடி இருக்கிறார். தலைமையேற்ற கவிஞர் மறந்துவிட்டார். ஆனால் பாடிய மாணவர் மிகப்பெரிய இடத்தை இலக்கிய உலகிலும், நிர்வாகத் திறனிலும் அடைந்திட்டபோதும் மறக்காமல், கவியரங்கத் தலைமையிடம் சொல்லி மகிழ்ந்தவர் நூலாசிரியர். மறக்காமல் அவரிடமே அணிந்துரை வாங்கிப் பெருமை சேர்த்து தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஹைக்கூ கவிதையை விரும்புவதில்;லை. ஆனால் அவர் எளிதில் யாரையும் பாராட்டமாட்டார். அவருடைய மனம் திறந்த பாராட்டாக அணிந்துரை உள்ளது.

இக்கவிதைகளைப் படிக்கும் போது ஆண், பெண் இரு பாலருக்கும் அவரவர் காதலின் மலரும் நினைவுகளை மகிழ்வித்து விடுகின்றது என்பது உண்மை.

தினசரி பார்த்தாலும் சிலருடைய முகம்

நம் மனத்தில் பாதரசமாய் படியாமல் இருக்கிறது

சிலருடைய முகமோ ஒருமுறை பார்த்தாலும்

சுவரோவியமாய் நிலைத்து நிற்கிறது.

இந்த வரிகளைப் படிக்கும்போது அவரவர் அன்புக்குரியவர்களின் முகம் உடன் நினைவிற்கு வந்துவிடுகின்றது. உரை என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்ல வைரவரிகள்:

பூங்காவின் அண்மையில் பூங்காயற்றாய்த் தவழ்ந்தது அவன் உரை

இசையாய்ச் சொற்களும் அபிநயமாய்ப் புருவ நேர்வுகளும்

நடனமாய்க் கையசைவுகளும், கவிதையாய் விழியசைப்பும்

அருவியாய் ஏற்ற இறக்கமும் அவன் சொற்பொழிவை

அழியாச் சிற்பமாய் அழகுபடுத்தின.

இன்றைய கல்வி குழந்தைகளை கிணற்றுத் தவளையாகவே வைத்து இருக்கின்றன. அதற்கான கண்டனத்தை மிக நேர்த்தியாக பதிவு செய்யும் வரிகள்.

பாடப்புத்தகமே வேதப் புத்தகமென நீங்கள் நினைத்தால்

நான் நாத்திகன்

பள்ளிக்கூடமே தேசமென உங்களுக்குப் போதிக்கப்பட்டால்

குழந்தைகளை நாடு கடத்துவதற்கு முன்மொழியும் முதல் மனிதன்

காதல் நுட்பத்தை நுட்பமாகச் சொல்லும் வரிகள் இதோ!

அவள் கண்களோடு தன் கண்கள் மோதும்போது

உச்சி வெயிலில் ஒருகோடி அருவியில்

குளிக்கிற அனுபவம் நேர்ந்தது.

இப்படி அருவியில் குளித்த அனுபவம், அனுபவித்தவர்களுக்கு நன்கு விளங்கும்.

இயற்கை நேசத்தையும் வலியுறுத்துகின்றார்.

தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு

தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகி விடுகிறான்.

வார்த்தைகள் சிந்துகள் போல வந்து விழுகின்றன.

அவன் மொட்டு விரிவதற்காகக் காத்திருந்தான்

பட்டு நெய்வதற்காக பாத்திருந்தான்

மொட்டு, பட்டு என சொற்கள் நடனமாடுகின்றது. வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. சொற்களஞ்சியமாக உள்ளது.

ஒரு அதிகாரி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் வரிகள். இந்த வரிகளின்படியே நூலாசிரியரும் வாழ்ந்துவருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

தொடர்ந்த நேர்மையும், மக்கள் மீது மாறாத அன்பும்

நீர்த்துப் போகாத ஆர்வமும், உண்மைக்குச் சார்பாக வாழ்வதும்

ஒருங்கே அமையப் பெற்றால்தான் பணிக்குப் பெருமை

பணியால் நமக்குப் பெருமை.

வாழ்க்கையை, 'வெந்த சோற்றை சாப்பிட்டு விதி வந்தால் சாவோம்' என்று வாழ்வோரின் தலையில் கொட்டும் விதமாக உள்ள கவிதை வாழ்க்கையைப் பொருத்தவரை,

பலர் வழிப்போக்கர்களாகவே இருக்கிறார்கள்

சிலர் சுற்றுலாப் பயணிகளாகச் சுகமடைகிறார்கள்

சிலர் விருந்தினர்களாக வசிக்கிறார்கள்

சிலர் மட்டுமே ரசித்து ருசித்து மகிழ்கிறார்கள்

இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உன்னதமாக்குவேன்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, பெற்றோரின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக மனம்இன்றி சம்மதித்து நடக்கும் திருமணம் பற்றி கவிதைகளில் உள்ளது. கற்பனைக் கதையை கவிதை நடையில் மிகவும் சுவையாக எழுதியுள்ளார்.

இருவது ஆண்டு இடைவெளியில் அவன் நெஞ்சத்தில் கூடு கட்டிய அந்தப் பறவையின் தரிசனம், குலுக்கலில் விழுந்த பரிசாய்க் கிடைக்கும் பாக்கியம் நிகழ்ந்தது.

இந்த வரிகளைப் படிக்கும் வாசகனுக்கு 20 ஆண்டுகள் கழித்து காதலியைச் சந்தித்த உணர்வு பரவசம் ஏற்படுகின்றது. இதுதான் நூலின் வெற்றி. உள்ளத்தில் உள்ளது கவிதை. உணர்வுகளின் வெளிப்பாடு கவிதை. மறக்க முடியாத கல்வெட்டு கவிதை. இலக்கியத்தில் இனிய இடம் பிடித்த கவிதை. சமுதாய மாற்றம் நிகழ்த்துவது கவிதை. உள்ளத்தில் தன்னம்பிக்கை விதை விதைப்பது கவிதை. வாசகனை பயணிக்க வைப்பது கவிதை. இப்படி கவிதை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அத்தனை சிறப்பும் வைகை மீன்கள் நூலில் உள்ளது.

கருத்துகள்