ஆகாயத் தாமரை, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : மருத்துவர் அ.சீனிவாசன்,MD
மதுரையின் பிரபல மருத்துவர் எழுத்தாளராகி படைத்து இருக்கும் நூல் இது. நூல் ஆசிரியர் மருத்துவர் ஆ.சீனிவாசன் மிகச்சிறந்த மருத்துவர், நட்பு வட்டம் மிகப் பெரியது. பரபரப்பான மருத்துவமனை நிர்வாகத்திற்கு இடையே நூல் எழுதிட எப்படி நேரம் கிடைத்தது என வியந்து போனேன். தெய்வ நம்பிக்கை மிக்கவர். தனது மனைவியின் தங்க நகைகளை விற்று, மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தை அழகுபடுத்தியவர். அவர் கேட்டதும் உடன் நகைகளை தந்து உதவிய அவரது வாழ்க்கைத் துணைவி திருமதி .மல்லிகா அவர்களின் பிறந்த நாளன்று இந்த நூலை வெளியிட்டு நன்றியை மேடையில் பதிவு செய்தார். கடவுள் நம்பிக்கை இல்லாத என்னிடமும் அன்பு செலுத்தி நட்பாக பழகிடும் நல்லவர் மருத்துவர் ; ஆ.சீனிவாசன். நூல் வெளிட்டு விழா, மதுரையில் மாநாடு போல நடந்தது.” பொற்றாமரை கொண்டான்” என பட்டமும் பெற்றார்கள். அன்று இருந்த நல்ல நிலை இன்று பொற்றாமரை குளத்திற்கு இல்லை.
மகாகவி பாரதியாரின் கவிதைகள், நூலில் அழகு சேர்க்கின்றன. “எந்நன்றி கொன்றார்க்கும்”திருக்குறளை எழுதி நன்றியைப் பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குகின்றது. கோவில் பற்றி பல்வேறு தகவல்களும்; பல அழகிய புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளது. மிக நேர்த்தியான அச்சு வடிவமைப்பு. 2500 ஆண்டுகள் பழமை மிக்கது. 17ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களுடன் உள்ளது. கிழக்குக் கோபுரம் சுந்தரபான்டியனால் கி.பி.13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. வடக்கு கோபுரம் 1878-ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது. உயரம் 152 அடி, சிற்பங்கள் 404, புண்ணிய கோபுரம் இப்படி கோபுரங்கள் பற்றிய தகவல்களுடன் புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளதைக் கொள்ளை கொள்கின்றன. இந்த நூலைப் படித்து முடித்தவுடன் கலைக்கண்ணுடன் மீனாட்சி கோயிலைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அழகிய புகைப்படங்கள்;. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாரியில் முப்பால் எழுதிய செந்நாப் புலவர் திருவள்ளுவரின் சிலை புகைப்படங்கள் சிறப்பாக உள்ளது. இந்த நூலில் கருத்துக்கள் சிறப்பா? புகைப்படங்கள் சிறப்பா? என்று பட்டிமன்றமே நடத்திடலாம், அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது. தமிழர்களின் கட்டிடக் கலைத்திறனை உலகிற்கு பறைசாற்றிடும் வண்ணம் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிலைகளின் நுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
“நட்ட கல்லும் பேசுமோ,நாதன் உள் இருக்கையில்”என்ற சித்தர் பாடலைப் போல் நூலாசிரியர் மருத்துவர் சீனிவாசன் வித்தியாசமாக சிந்தித்து உள்ளார். நமது உடலே கோவில் என்கிறார். இருட்டு மண்டபத்தை கருப்பையோடு ஒப்பிடுகின்றார்.
சிறுநீர்ப்பை குளம் புகழ்பெற்ற பாடல் இந்நூலில் இடம் பெற்றள்ளது.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியயிற்றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
மருத்துவர், சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி நூல் எழுதி உள்ளார். வியப்பாக உள்ளது. ஊனுடம்பு ஆலயம் என்கிறார். பாற்கடல் தான் வயிறு என்கிறார். இப்படி வித்தியாசமாக, ஆனால் பொருத்தமாக சிந்தித்து பல புதிய கருத்துக்களை நூலில் பதிவு செய்துள்ளார். ஆலகால விஷம் என்பது அயோடின் என்ற பெயருடன் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவர் என்பதால் பல விஞ்ஞான கருத்துக்களை அஞ்ஞானத்துடன் ஒப்பிட்டுள்ளார்.”உண்ணப்பட்ட உணவானது, பல மாற்றங்களை அடைந்து,இரத்தத்தில் கலந்து குளுக்கோஸ் எனப்படும் உயிர்சத்தாக மாறி,மூளையின் செல்களை அடைகிறது. இதனுடன் மூளை விருத்திக்கினா பொருளும் செல்களை அடைகின்றன. இதனால் நாம் பரவச நிலை அடைகின்றோம். பரவசத்தின் விஞ்ஞான விளக்கம் நுட்பமாக உள்ளது. கற்பக விருட்சம் என்பது பூமியில் வாழை மரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. வாழை மரம் மட்டுமே ஆண் பெண் சேர்க்கை இன்றி தன் இனத்தை விருத்தி செய்யும் தாவரம் ஆகும்.
வேறு எந்த தாவரமும் தன் இனத்தைத் தனக்கு கீழே வளர விடாது. இப்படி தகவல் களஞ்சியமாக உள்ளது. இதயம் தாமரை என்கிறார்.
மீனாட்சியம்மன் கோயிலில் மருத்துவர் சீனிவாசனின் விழிகளுக்கு படாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் கலைக்கண்ணால் புகைப்படம் எடுத்து, கண்களுக்கு விருந்து வைத்துள்ளர். முக்குறுணி விநாயகர், கம்பத்தடி மண்டம், வடக்கு பிரகாரம் என அனைத்து இடங்களும் அதற்கான விளக்கங்களும் நூலில் உள்ளது.
கண்ணை மூடிக் கொண்டு கட்டத்திற்குள் கால் சரியாக உள்ளதா என்று விளையாடும் விளையாட்டு, ஆறாவது அறிவை சோதிக்கும் விளையாட்டு, பெண்கள் கோலமிடுவது ஏழவது அறிவு, விடுகதை அறிவு, கலாச்சார அறிவு, வலதுபக்கங்கள், திருமூலர் பாடிய பாடல்கள், உணர்வுகள், செயல்கள், உணர்ச்சிகள், நினைவுகள், வாசனை, சுவை, ஓளி, ஓலி இவற்றை எண்களுடன் விளக்கி உள்ளார். தொடு உணர்வுகள், சென்று சேறும் பகுதி. செயல்களின் பிறப்பிடம், விஞ்ஞான படங்களுடன் வித்தியாசமாக உள்ளது.
பிரபல மருத்துவர் எழுத்தாளராக பதிப்பாளராக உயர்ந்தது பாராட்டுக்குரியது, தொடரட்டும்.
ஓபாமாவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கையின் – இருவரும் இடதுகை பழக்கமுள்ளவர்கள். கடைசி ஏழு அமெரிக்க ஜனாதிபதிகளில் அய்வர் இடதுகை பழக்கமுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல அறிய தகவல்கள் நூலில் உள்ளது.
ஆகாயத் தாமரை என்ற இந்த நூலின் ஆசிரியர் மருத்துவர் சீனிவாசன் கோயிலையும், மனித உடலையும் ஓப்பிட்டு செய்து
எழுதி உள்ளார். உண்மை தான், நம் உடலை கோயிலாகக் கருதி, நல்ல உணவையும், நல்ல எண்ணங்களையும் மட்டும் கொண்டு வாழ்ந்தால் கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட அவசியம் இருக்காது. நமது உடலை கோயிலைப் போல பாதுகாக்க வேண்டும். கோயிலில் குப்பைகளை அப்புறப்படுத்துவது போல, நம் உள்ளத்தில் உள்ள தீய எண்ணம் என்ற குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். எண்ணம் தூய்மையாக இருந்தால், செயலும் தூய்மையாக இருக்கும், செயல் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை தூய்மையாக இருக்கும். இப்படி பல்வேறு கருத்துகளை உணாத்தும் விதமாக மிகச்சிறப்பாக நூல் உள்ளது. நூல் ஆசிரியர் மருத்துவர் சீனிவாசன் தொடர்ந்து பல நூல்களை எழுத வேண்டும், வெளியிட வேண்டும். பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக