பூட்டாங்கயிறு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

  • era5.jpg
பூட்டாங்கயிறு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முகில்


நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது. நேர்த்தியான அச்சு. கவிதைகளுக்கு பொருத்தமாக புகைப்படங்கள், ஓவியங்கள் நூலிற்கு அழகு சேர்க்கின்றன.

நூல் ஆசிரியர் கவிஞர் கவிமுகில் மகிழ்ந்து வணிகர். மகிழ்வான கவிதைகளின் வணிகராகவும் திகழ்கிறார். மனிதநேயம் மிக்கவர். பல்வேறு உதவிகளை விளம்பரமின்றி செய்து வருபவர். கவிஞாயிறு தாராபாரதியின் அறக்கட்டளைக்கு பக்கபலமாக இருந்து வருபவர். இந்நூல் வெளியீட்டு விழாவே கும்பகோணத்தில் ஒரு மாநாடு போல நடைபெற்றது.

படைப்புச் செம்மல் திரு.பாபநாசம் குறள்பித்தன் அவர்களின் நட்புரை, திரு. பொன்னிநாடன் அவர்களின் அணிந்துரை, நூலிற்கு தோரண வாயிலாக உள்ளது. கவிஞர் கவிமுகில் தன்னுரை கவிதையாகவே உள்ளது. இந்நூலை திரு.சங்கரவடிவேலு அய்.ஆர்.எஸ். அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார்.

"பூட்டாங்கயிறு" என்ற நூலின் பெயரே கிராமிய மொழியில் உள்ளது. "கூட்டாஞ்சோறு" என்பதைப் போல. கவிஞர் கவிமுகில் காரணப் பெயராக இருக்க வேண்டும். கவிதைகளை மழையெனப் பொழிவார் என்பதை அறிந்து பெற்றோர் இப்பெயர் சூட்டி உள்ளார். ஒருவேளை புனைப்பெயராக இருந்தாலும் பொருத்தமான பெயரே. அன்றும்,இன்றும், என்றும் காதல் இனிமையானது. காதல் கவிதைகள் சுவையானது. கவிமுகில் அவர்களின் காதல் கவிதைகள் கற்கண்டாக இனிக்கின்றது. நூலின் பின் அட்டையில் தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.இராசேந்திரன், திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் ஆகியோரின் கல்வெட்டு வாழ்த்துரை இடம் பெற்றுள்ளது நூலிற்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

உன் நினைவுச் சுருள்களை
விரித்துப் பார்க்கையில்
மனத்திற்குள் விரியும் மத்தாப்புகள்
வருசத்திற்கொரு தீபாவளியாய் அல்ல
வாழ்க்கையே தீபாவளியாய்

மனதிற்குள் காதலியை நினைத்துப் பார்த்தால் தினம் தினம் தீபாவளி தான் என்கிறார். உண்மை தான்.

அதிர்ந்து பேசாம ஆரத்தி நீ
வெளிச்சக்கரையில் முடிக்கற்றைகளை
விரித்த போது அமாவாசை

காதலியின் கூந்தலை அமாவாசையென்று வித்தியாசமாக வர்ணிக்கின்றார்.

கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு
ஆட்டிடம் போதித்தனர் நீ திமிறுவதும் கத்துவதும்
நியாயமே இல்லை
நாங்கள் மாலையை உன் கழுத்தில் போட்டு விட்டோம.

இக்கவிதை படித்ததும் தமிழருக்கு உரிமை தருவேன் என்ற கொலைவெறியன் இராசபக்சே ஞாபகம் வந்தது. பலியிடப் போகும் ஆட்டிற்கு பொட்டு வைத்து பூமாலை போட்டு நடத்தும் அவலத்தை காட்சிப்படுத்துகின்றது கவிதை.

நூலின் பக்கவாட்டில் நூலின் பெயரை அச்சிட்டு இருந்தால் நூல் பயன்படுத்துபவர்களுக்கு பார்த்து எடுக்க எளிதாக இருந்திருக்கும். இனிவரும் பதிப்பில் அச்சிடுக.

உயிர்களை உண்ட பிறகு
எழுதப்படும் மரண சாசனமாய் விடுதலை
ஒரு சுனாமிக்குப் பிறகாவது
பூமிப்பந்தில் மனிதம் மட்டுமே உயிர்க்கட்டும்
மனிதநேயம் குறித்த நல்ல பதிவு.

இறுதி எச்சரிக்கை

தமிழ்க் குருதியில் குளிக்கும் சிங்களம்
தமிழன் சாவில் மகிழ்கிற அமங்கலம்
இழந்ததை மீட்க எத்தனை இடங்கள் உயிர்த்தியாகம்?
வெற்றியை மிச்சமுள்ள இடங்கள் தீர்மானிப்பதில்லை
சீர்குலைந்த எதிரியின் வஞ்சமே தீர்மானிக்கிறது.

இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றி பாடாதவர்கள் கவிஞர்களே இல்லை. கவிஞன் என்பவன் சராசரி மனிதனிலிருந்து மாறுபட்டவன். உணர்ச்சி மிக்கவன். அந்த வகையில் தமிழ் இன உணர்வுடன் கவிதை படைத்துள்ள கவிஞர் கவிமுகில் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

இலங்கைத் தமிழர் மீத பற்று இருந்தால் கலைஞர் மீதான பற்று குறைந்து விடும். ஆனால் இவருக்கு இருவர் மீதும் பற்று உள்ளது. வியப்பாக உள்ளது.

புயலுக்கே அசையாத விழுதுகளும்
பூங்காற்று வருகையில்
விறகுகளாக வீழ்ந்த விபரீதம்

இப்படி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளும், புதுக்கவிதைகளும் கவியரங்கக் கவிதைகளும் நூலில் உள்ளது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றிய கவிதை மிக நன்று

பெரியாரின் கைத்தடி

ஏன் என்ற கேள்ளிக்குறிக்கே
ஏடுத்தக்காட்டு இந்தக் கைத்தடி
முகவரிகளைத் தொலைத்த முகமூடிகளுக்கும்
முகங்களைக் கொடுத்த முன்னோடி இந்தக் கைத்தடி

தந்தை பெரியார் ஒருவர், நான் சொல்வதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டாம். உங்கள் பகுத்தறிவிற்கு சரி என்று பட்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். வேறு எந்தத் தலைவரும் இப்படிச் சொல்வதில்லை.

சிதம்பரனார் இழுத்த செக்கு

வ.உ.சி
ஆங்கில அரசுக்கு குத்தூசி
மனிதனை உருவாக்க மாடாய் உழைத்தவன் நீ � தாய்
மண்ணின் உரிமையை வேராய் உயிர்த்தவன் நீ
நீ இழுத்த சோகத்தைத் தான் செக்குகள்
இன்றும் முகாரியாய்ச் சத்தம் எழுப்புகிறதோ!

ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டிய தமிழன், விடுதலை வேங்கை. வ.உ.சிதம்பரனாரை சிலர் சாதி என்ற சின்ன வட்டத்திற்குள் அடைத்து மகிழ்கின்றார்கள். வேதனையாக உள்ளது.

நேரு,காந்தி, பாரதி அண்ணா, அம்பேத்கர், வள்ளலார், காமராசர்,கலைஞர் என பலர் பற்றியும் பாராட்டும் படியான கவிதைகள் உள்ளது.

பாரதிதாசன் பரம்பரை என்பதைப் போல, கவிஞாயிறு தாராபாரதி பரம்பரையாக வளர்ந்துள்ளனர் கவிமுகில். யாதும் ஊரெ யாவரும் கேளீர் என்ற வைர வரிகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனார் போல.

வெறுங்கை என்பது மூடத்தனம் உன்
விரல்கள் பத்தும் மூலதனம்

என்ற இரண்டே வரிகள் மூலம் உலகப்புகழ் பெற்றவர் கவிஞாயிறு தாராபாரதி. இவ்வரிகளை அமெரிக்காவிலும் பாராட்டி உள்ளனர்.

கிழக்குத் தானாய் வெளுக்காது அதைச்
கிழிக்காவிட்டால் சிவக்காது

என்ற வைர வரிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாக ஆதிக்கவாதிகளுக்கு எதிராக வடிக்கப்பட்ட வரிகள். அதில் தொடங்கிய கவிஞாயிறு தாராபாரதி பற்றிய கவிதையும் மிகச் சிறப்பு. கவிஞாயிறு தாராபாரதி போல உலகப்புகழ் பெற கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள்