சனி, 17 ஜூலை, 2010

தொடு வானத்தை, நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

era ew.jpgதொடு வானத்தை, நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் பொன் விக்ரம்


கவிஞர் பொன் விக்ரம் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பு நூல் இது. தான் உணர்ந்த உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார். மதத்தின் பெயரால் மோதும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. மதவெறி தான் மகாத்மாவின் உயிரைக் குடித்தது. இன்னும் அவர்களின் மதவெறி அடங்கவில்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!

எச்சரிக்கை

காந்தியைக் கொன்றவர்கள்
இன்னும் துப்பாக்கியைக்
கீழே போடவில்லை

இன்றைக்கு ஆண்களை விட பெண்கள் தான் அளப்பறிய சாதனைகள் நிகழ்த்துகின்றனர். ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இந்த நவீன யுகத்திலும் பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்கள் இருக்கின்றனர். கிராமங்களில் பெண் பிறந்தால் கொன்று விடும் கொடூரம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. பெற்ற தாய் பெண் குழந்தைக்கு ஒப்பாரி வைப்பது போன்ற கவிதை சமுதாயத்தின் கன்னத்தில் அறைகின்றது.கடைசி வரி முத்தாய்ப்பாக உள்ளது.

இன்னொரு
கரு சுமக்கணுமா
போதுமடா அய்யா
ஏன் கர்ப்பப் பை
கல்லாகிப் போகட்டுமே

ரோபோ கவிதை சிந்தனை மிக்க வரிகள். ரோபோ இயந்திரம் மனிதனை மட்டமாகப் பார்க்கும் பார்வை நல்ல கற்பனை.

ஈழத்தில் நடந்த படுகொலைகள் கண்டு கொதிக்காத தமிழ் நெஞ்சம் இல்லை. கொதிக்காதவர்கள் தமிழர்களே இல்லை. கவிஞர்களும் கொதித்தனர். கவிஞர் பொன் விக்ரம் கொதித்து எழுதிய கவிதை.

போதிமரத்தடியில் அமர்ந்தவனே
கொஞ்சம் புத்தி சொல்லக் கூடாதோ?
இரக்கம் உள்ள ஆண்டவனே
இதயமுள்ள இறைவனே
கோத்த பய ராஜபக்சே -அவன்களை
சிலுவையில் அறையக் கூடாதா?
இக்கரையில் உள்ள தமிழர்களே
அக்கறையில் என்ன நடக்கிறது
கொஞ்சம் அக்கறை காட்டக் கூடாதா?
ஆண்டவனோ ஆள்பவனோ
யாரும் இல்லை தமிழனுக்கு

மனிதரில் பல நிறங்கள் உண்டு. கவிஞர் உடல் நிறத்தைச் சொல்லவில்லை. உள்ளத்தின் நிறத்தைச் சொல்கிறார். வேடமிடும் மனிதர்களை தோலுரித்துக் காட்டுகின்றார்.

பிழைக்கத் தெரிந்தவனென்று பேரெடுக்கிறான்
அமைதியாய் இருக்கும் நல்லவனை கொத்தி எடுக்கிறான்

கவிஞர் பல கவிதைகளில் காதலையும் பாடி உள்ளார். கடவுள் உண்டா? இல்லையா? என கவிதைகளில் பட்டிமன்றம் நடத்தி உள்ளார்.மாட்டு சாணத்தை விட மனிதன் தாழ்வா? என்ற கேள்வியை வைக்கிறார். பகுத்தறிவு ஊட்டுகிறார்.

சாணத்திற்கு வைக்கிறான், சந்தனத்தில் பொட்டு
சக மனிதனை ஒதுக்குகிறான், தொட்டால் வருமாம் தீட்டு

என் கேள்விக்கென்ன பதில்? கவிதையின் மூலம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை நினைவூட்டுகின்றார். திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து கொண்டு பகுத்தறிவுச் சுடர் ஏந்தி ஒளியூட்டுகின்றார் கவிதைகளின் மூலம். தந்தை பெரியார் பற்றி, கர்மவீரர் காமராசர் பற்றி கவிதைகள் சிறப்பாக உள்ளது.

கவிஞர் பொன் விக்ரம் பகுத்தறிவுவாதி, நடிகரில் பகுத்தறிவுவாதியான கமலஹாசனைப் பாராட்டி கவிதை வடித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்து தேர்தலையே கேலிக் கூத்தாக்கி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்ட காலத்தில், இன்றைக்கு வாக்காளன் மனநிலை எப்படி ? உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டுகின்றார் பொன் விக்ரம.

அய்ந்தாண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல்
ஆண்டுக்கு ஒருமுறை வந்தால் நல்லது
தளீபாவளி கூட தேவையில்லை
இடைத்தேர்தல் வந்தாலே போதும்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அன்று மார் தட்டினோம். ஆனால் இன்று அவ்வாறு கூற முடியாது அவல நிலை வந்தது. ஜனநாயகம் பண நாயகமானது.இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்களாகவே இல்லை என்பதை உணர்த்தும் கவிதை இதோ!

வேட்பாளன்

சந்தனத்துக்கு சாயம் பூசுகிறான்
மல்லிகைக்கு சென்ட்டு அடிக்கிறான்
தேர்தல் நேரத்தில் மனிதனைப் போல் வேடங்கட்டுகிறான்

இக்கவிதைகளை படித்த பின்பாவது அரசியல்வாதிகள் நிலையில் மாற்றம் வரட்டும் மக்களிடமிருந்த மரியாதையை அரசியல்வாதிகள் இழந்து விட்டனர் என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.

எங்கே போகிறது? மனிதம்! என்ற கவிதையில், இயற்கை, பறவை, விலங்கு இவைகள் இயல்பாக இயங்கும் போது மனிதன் மட்டும் இயல்பை மீறி ஏன் வன்முறையாட்டம் போடுகிறான் என்று கேட்டு சிந்திக்க வைக்கிறார்.

ஆணாதிக்க சமுதாயம் இன்றைக்கு எந்த நிலையில் உள்ளது என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

நினைவில்

தாய் படுத்தாள் நோயில்
தகப்பன் வேறு ஒருத்தியின் பாயில்

துணிச்சல் மிக்க கவிதை வரிகளின் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைக்கின்றார்.சிலர் சொல்லக் கூடும் கவிதைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம். இருக்கின்றதே என்று. இயற்கையை மட்டும் எதுகை மோனையுடன் பாடுவது மட்டுமே கவிஞன் கடமை என்பது தவறு. மனதில் பட்டதை கவியரசு கண்ணதாசன் வழியில் ஏற்றதொரு கருத்தினை கவிதை வடிவில் வழங்கி இருக்கும் கவிஞர் பொன் விக்ரம் பாராட்டுக்குரியவர். கவிதை உலகில் விரைவில் சிறப்பான இடம் பிடிப்பார் என்பது உறுதி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக