பணிப் பண்பாடு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி*









பணிப் பண்பாடு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி* நூல் ஆசிரியர் : முனைவர் வெ. இறையன்பு, இஆப



இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முனைவர் வெ. இறையன்பு, இஆப அவர்களின் அற்புதப் படைப்பு. வானொலியில் உரையாற்றிய பல கருத்துக்களை 100 தலைப்புகளில் பத்து ரூபாய் விலையில் வர உள்ளது. முதல் தலைப்பாக “பணிப் பண்பாடு” என்ற தலைப்பில் இன்றைக்கு மிகவும் தேவையான பயனுள்ள பல கருத்துக்களைத் தாங்கி முதல் நூல் வெளி வந்துள்ளது. சிலர் பேச நன்றாக இருக்கும், ஆனால் அப்பேச்சை நூலாக ஆக்கிட முடியாது.நூலாக்கினால் நன்றாக இருக்காது. ஆனால் இந்நூல், நூலாக்கும் தரத்துடனேயே வானொலி உரையாக இருந்தால் நூலாகப் படிக்கும் போதும், இனிமையாக உள்ளது. வாசகர்களைச் செம்மைப் படுத்தும் சிறப்பான பணியினை செய்திடும் நல்ல நூல்.

இந்நூலை பதிப்பித்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் பாராட்டுக்குரியது.தேநீர் குடிக்கும் செலவான பத்து ரூபாயில் தேனினும் இனிய நூலை அழகிய அச்சில் வண்ணப் புகைப்படங்களுடன் தரமான பளபளக்கும் காகிதத்துடனும் மிக நேர்த்தியாக வடிவமைத்து உள்ளனர்.”யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்ற பழமொழிக்கு ஏற்ப, பின்னே வர இருக்கும் 99 நூல்கள் எனும் யானையின் வெற்றியை பறைசாற்றும் விதமாக மணியோசையாக இந்நூல் வந்துள்ளது.

பேருந்து பயணத்தில், புகைவண்டி பயணத்தில் படித்து விடும் மிக எளிதாக எல்லோரும் படித்து விடும் கையடக்க நூல். தெளிந்த நீரோடை போல எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான நடையில் எல்லோருக்கும் புரியும் விதத்தில் மிகச் சிறப்பாக வந்துள்ளது. முதல் நூலே முத்திரை பதிக்கும் நூலாக வந்துள்ளது. சிந்தையை செதுக்கும் உளியாக உள்ளது. நம்மை சிறப்பாக்கும் வலிமையாக உள்ளது.

உழைப்பாளர் சிலை அட்டைப் படத்தில் உள்ளது மிகவும் பொருத்தம். காந்தியடிகள் சொன்னது போல உழைப்பவனுக்குத் தான் உண்ணும் உரிமை உண்டு. உழைக்காமல் உண்பவன் திருடன் என்பதை உணர்த்தும் விதமாக வந்துள்ளது. உழைப்பே தியானம், பணியும் உழைப்பும், உழைப்பும் முயற்சியும், பணியும் நேர்மையும், பணியும் வாய்மையும் என அய்ந்து தலைப்புகளில் அற்புதமான கட்டுரை. முதல் கட்டுரையில் உள்ள கல்வெட்டு வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு:

“விடலைப் பருவத்தில வியர்வை வாய்க்காலாக வழியாவிட்டால்,
கடைசிக் காலத்தில கண்ணீர் கால்வாயாகப் பெருக்கெடுக்கும்”

இன்றைய இளைஞர்கள் இந்த இரண்டு வரிகளை மட்டும் மந்திரச் சொல்லாக எடுத்துக் கொண்டு உழைக்கத் தொடங்கினால் வாழ்வில் சிகரம் அடைவது எளிதாகும். மதுரையில் புரோட்டா கடையில் வேலை பார்த்துக் கொண்டே அய் ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்ற வீரபாண்டியன் என் நினைவிற்கு வந்தார். உழைப்பால் உயர்ந்தவர்கள் கோடி. உழைப்பின் மேன்மையை உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் உன்னதப் படைப்பு.

பணியும் உழைப்பும் என்ற கட்டுரையில் வரும் வைர வரிகள்.

“மனிதன், தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்திருக்கிறான்:
ஆனால் வியர்வையில் மூழ்கி ஒருபோதும் மரித்ததில்லை”.

உழைப்பும் முயற்சியும் என்ற கட்டுரையில் வரும் புத்துணர்வு தரும் வரிகள் இதோ!

“உழைப்பு., முயற்சியுடன் சேந்தால் முத்துக்களாகக் கொண்டு வரும் அயற்சியுடன் இணைந்தால் விரக்தியின் விளிம்பில் விட்டு விடும்”

இந்த வரிகளைப் படித்தவுடன் பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் என் நினைவிற்கு வந்தது. “தூங்காதே தம்பி தூங்காதே”

பணியும் நேர்மையும் என்ற கட்டுரையில்

“கலப்படம் செய்யாமலும் தரக்குறைவு மேற்கௌளாமலும்
அநியாய விலைக்கு விற்பனை செய்யாமலும்
மக்கள் நலம் பேணுவது மாண்புடைத்து”

இந்த வரிகளை வணிகர்கள் கடைபிடித்து நடந்தால் நாடும்,வீடும் நலம் பெறும்.

பணியும் வாய்மையும் என்ற கட்டுரையில் பணி பண்பாடு என்பது செய்கிற பணியில் ஈடுபாட்டையும், உழைப்பையும், முயற்சியையும், புதுமையையும், உண்மையையும், நேர்மையையும் அன்பையும், வாய்மையையும் கலக்கிற போது அது கலப்படம் செய்யாத தூய பணியாக மலர்கிறது.

பண்பாடு என்பது வெளியில் இருந்தால் போதாது, பணியிலும் பண்பாடு இருக்க வேண்டுமென்று பண்பாட்டின் பயன்பாட்டை உணர்த்திடும் உன்னத நூல். திருக்குறள் அளவில் சிறியது, கருத்தை அளவிட முடியாது அது போல், இந்நூல் அளவில் சிறிதாக இருந்தாலும், கருத்தில் கடலாக உள்ளது. பாராட்டுக்கள்.

கருத்துகள்