நிலா முத்தம், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.28&disp=inline&realattid=f_gbswj6qe27&zw

நிலா முத்தம், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி



நூலாசிரியர் : கவிஞர் மு.முருகேஷ்,


"ஹைக்கூ" என்ற சொல் இன்று இலக்கிய உலகிலும்,பொது மக்களிடையேயும் பரவலாக பரவி இருக்கின்றது என்றால் அதற்கு மூல காரணம் கவிஞர் மு.முருகேஷ் என்றே கூறலாம். ஹைக்கூவை குறை சொன்னவர்கள் எல்லாம் இன்று வெட்கப்படும் அளவிற்கு உலகளாவிய உச்சத்தைத் தொட்டு இருக்கின்றது ஹைக்கூ. இந்நூல் ஆசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஹைக்கூ தளத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் இனிய நண்பர். ஹைக்கூ. நூல் வெளியிட விரும்பி முகம் தெரியாத யார் அனுப்பி வைத்தாலும் உடன் மறுக்காமல் அணிந்துரை நல்கிடும் பண்பாளர். தந்த அணிந்துரைகளை "ஹைக்கூ கற்க"என நூலாகவும் வடித்துள்ளார்.

"நில முத்தம்" என்ற இந்த நூல், ஹைக்கூவைப் போலவே அளவில் சிறிதாக இருந்தாலும் கருத்தில் சிந்தனை தாக்கத்தில் பெரிய அளவில் உள்ள அற்புதம்."நிலா முத்தம்" என்ற இந்த ஹைக்கூ நூலை சட்டைப் பையில் வைத்துச் சென்று பேருந்துகளில் பயணிக்கும் வேளையிலும் படித்து இன்புறலாம். மிக நேர்த்தியான வடிவமைப்பு அச்சு. வித்தியாசமான படைப்பு. ஹைக்கூவில் தேவையற்ற சொற்கள் இருக்கக் கூடாது என்பது ஒரு இலக்கணம். இந்நூலில் அணிந்துரை எதுவுமின்றி ஹைக்கூ எழுதி உள்ளார்.

அணிந்துரை எதுவுமின்றி நேரடியாக கவிதையை படிப்பது ஓர் இனிய அனுபவம். அணிந்துரை வாசகர் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும். எந்தவித பிம்பமும் இன்றி வாசகர் நேரடியாகப் படித்து உணர்வது சுகம். இந்நூலில்; முதல் ஹைக்கூவே மிகவும் நுட்பமான ஹைக்கூ. இயற்கையைப் பாடிய ஜப்பானிய ஹைக்கூக்களை விஞ்சும் அளவிற்கு உன்னதப் படைப்பு.

தவளை குதித்தது
தாமரை இலையில்
உருளும் நட்சத்திரங்கள்

இந்த ஹைக்கூவைப் படித்து முடித்தவுடன் தவளை,தாமரை இலைத் தண்ணீர், அந்தத் தண்ணீரில் தெரியும் நட்சத்திரங்கள் என அனைத்தும் நம் மனக்கண் முன்னே வந்து விடுகின்றன. இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. இது போன்று இயற்கையைப் பாடும் ஹைக்கூ மட்டுமின்றி,சமுதாய அவலங்களைச் சாடிடும் அற்புத ஹைக்கூ கவிதைகள் ஏராளம் உள்ளது.

கவியும் இருட்டு
கடைசிக் சொட்டில்
மெழுகின் உயிர்

நேற்றைய கனவில்
கடவுள் தரிசனம்
விடிந்தால் சிலை திருட்டு

முளைக்கத் துடிக்கும் விதைகள்
மண்ணுக்குள்ளேயே சமாதியாக்கும்
பாலித்தீன் பைகள்

அரிசிப் பானைக்குள்
சில்லறைச் சத்தம்
அம்மாவின் ஞாபகம்

கரைந்துண்ணும்
காக்கைக்குத் தெரியாது
உழைப்பின் நிறம் கருப்பு

வெயில் கண்டதேயில்லை
காய்ந்து விடுகின்றன
அக்காத் துணிகள்

சிற்பத்திடம் இருக்கிறது
தொலைந்த
பாறையின் முகவரி

இளைப்பாறும் திண்ணைகள்
எஸ்.டி.டி.பூத்துகளாயின
பேச மறுக்கும் மனிதம்

பாடாத பொருள் இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி தனி முத்திரை பதித்து உள்ளார்.

ஹைக்கூவிற்குப் பொருத்தமான புகைப்படங்கள்,ஓவியங்கள் பாராட்ட வேண்டும். எல்லாப் படங்களும் சிறப்பாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தமான படம் ஒன்று இரண்டு கால்களை இழந்த ஒரு பிச்சைக்காரர்,உருளும் தகரத்தில் படுத்து இருப்பது, அருகில் சில்லரைத் தட்டு இந்தப் புகைப்படத்திற்கு பொருத்தமான ஹைக்கூ இதோ.

இழப்பின் சோகத்தை
ஆறுதல் படுத்தும்
சில்லறைச் சப்தம்

இப்படி புகைப்படம் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தாக்கம் மிகவும் நுட்பமாக உள்ளது.செலவு அதிகம் தான் இருப்பினும், வருங்காலங்களில் ஒவ்வொரு ஹைக்கூவிற்கு ஒரு புகைப்படமோ அல்லது ஓவியமோ இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. இந்த முயற்சியை எனது இதயத்தில் ஹைக்கூ நூலில் செய்து பார்த்தேன்.பலரும் பாராட்டினார்கள்.

மொத்தத்தில் இந்த,"நிலா முத்தம்" நூல்,முழு நிலவு நாளன்று,அமைதியாக தனிமையில் நிலவை ரசித்து அடைந்த இன்பத்தைத் தருகின்றது. வாங்கிப் படித்துப் பாருங்கள்.நான் சொன்னது உண்மை என்பதை நீங்களே உணருவீர்கள்.

கருத்துகள்