பொன் விசிறி * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.20&disp=inline&realattid=f_gbswj6pm19&zw
பொன் விசிறி * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : கவிஞர் அருணாசல சிவா


இயந்திரமயமான உலகத்தில் நீண்ட நெடிய கவிதைகளைப் படிக்க நேரம் இருப்பதில்லை. சிறிய வடிவிலான ஹைகூ கவிதைகளை ஆறிலிருந்து அறுபது வரை எல்லோரும் எளிதில் படிக்கின்றனர். படிக்கின்ற உழைப்பாளியையும், படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. கவிஞர் அருணாசல சிவா அவர்களின் நூலான பொன் விசிறி மிகச் சிறப்பாக உள்ளது. மின்னல் கலைக்கூடம் பதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளது, அட்டைப்படம் அற்புதமாக உள்ளது.

படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில், சிறு மின்னலை உருவாக்கும் வேலையை ஹைக்கூ செய்ய வேண்டும் அந்த வகையில் சிந்தனை மின்னலை உருவாக்கும் அழகிய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. இனிய நண்பர் கவிஞர் பொன் குமாரின் அணிந்துரை, பொன் விசிறிக்கு அழகு சேர்ப்பதாகவே உள்ளது. இந்நூலை ஆசிரியர் தன் தாய் திருமதி.கமலாவிற்கு சமர்ப்பணம் செய்ததன் மூலம் தாய்ப்பற்றை பறைசாற்றுகின்றார். அரசு செயலர் திரு.வெ.இறையன்பு இஆப. அவாகள் சொல்வதைப் போல, தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் உழைப்பாளி கவிஞர் கன்னிக் கோவில் இராஜாவின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. அணிந்துரையின் தலைப்பே நூலின் மொத்தத்தை ஒரே வரியில் விளக்கி விடுகின்றது.

புழுக்கத்தைப் போக்கி தென்றலைத் தரும் பொன் விசிறி-கவிஞர் நாணற்காடன் அணிந்துரை சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் அணிந்துரைகள் நூலின் சிறப்பை முரசு கொட்டும் விதமாக ஓங்கி ஒலிக்கின்றது.

தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயல வேண்டுமென்ற கருத்தை, பறவையின் மூலம் உணர்த்திடும் ஹைக்கூ இதோ!

சிறகு அறுபட்ட பறவை
பறக்கத் துவங்கியது
கால்களால்

ஹைக்கூ உத்திகளில் ஒன்று வியப்பைத் தருவது, அந்த வகையில் வரும் ஹைக்கூ.

பொதிக் காளை
லாடம் கழற்றப்பட்டது
அடிமாட்டுச் சந்தை

முதல் இரண்டு வரியை மட்டும் படிக்கும் போது மாட்டின்மீது பரிதாபப்பட்டு இனி பொதி ஏற்ற வேண்டாம் என்று நினைத்து லாடம் கழற்றுகிறார்களோ என நினைத்தால் மாட்டைக் கொல்வதற்கு, விற்பனைக்காக லாடம் கழற்றுகிறார்கள் என்று படிக்கும் போது மனிதர்களின் கபட புத்தி விளங்குகின்றது. மனிதாபிமானம் போல் விலங்காபிமானமும் இனி உணர்த்தப்பட வேண்டும் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

பசியில் விவசாயி
உலையில் கொதிக்கிறது
விதை நெல் அரிசி

இந்த ஹைக்கூ-வை படிக்கும் போது விவசாயிகள் படும் கஷ்டத்தை உணர முடியும். ஓருபுறம் வல்லரசாகப் போகிறோம் என்று அணு நீர்மூழ்கி கப்பல் என்று பல கோடிகளை விரயம் செய்து உலக அரங்கில் மார் தட்டுகின்றோம். செய்தித்தாளில் அதே நாளில், பசியால், பட்டினியால் விவசாயி தற்கொலை என்ற செய்தியையும் படிக்கின்றோம். நம் நாடு விவசாய நாடு. விவசாயிகள் நம் நாட்டின் முதகெலும்பு. விவசாயிகளின் துன்பம் களையப்பட வேண்டும். தன்னிறைவு பெற வேண்டும்.

கல்லூரியில் கல்வி பயில வேண்டிய மாணவர்கள், சண்டை பழகிய காட்சியை தொலைக்காட்சியில் கண்டு வேதனையுற்றோம். அந்த நிகழ்வை ஒட்டி வடித்த ஹைக்கூ.

சட்டக் கல்லூரியில்
இரத்தம் படிக்கிறார்கள்
உடைந்த சட்டங்களால்

கணிப்பொறி � பொறியாளர்கள் கை நிறைய சம்பாதித்ததை அழிப்பதற்கு டிஸ்கோ நடன நிகழ்ச்சிக்கு சென்று மதுபானம் அருந்தி, ஆண் பெண் பேதமின்றி கூத்தாடும் பண்பாட்டை, சீரழிவை உணர்த்தும் ஹைக்கூ.

இரவு விருந்து
உற்சாக பானம்
நவயுக மகளிர்

இலங்கை தமிழரின் இன்னலைப் பாடாத கவிஞன் இல்லை. இலங்கைத் தமிழரின் இன்னலைப் பாடாதவன் கவிஞனே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவரின் உள்ளத்திலும் ஊற்றெடுத்தது உண்மை.

அந்த வகையில் கவிஞர் அருணாசல சிவாவின் ஹைக்கூ.

யுத்த பூமியில் விடுதலை
விரைவில் தமிழ்ஈழம்
பௌர்ணமி உலா

புறாக் கூண்டு திறக்கப்பட்டது
திணை வைத்து
திரும்பவும் மூட.

இப்படி மூன்று வரியில் விடை சொல்லி விளங்க வைக்கம் ஹைக்கூ ஏராளம்.கவிஞர்கள் நிறைய பெருகி வருகிறார்கள் என்பது வரவேற்புக்குரியதே. ஆந்த வகையில் வளர்ந்து வரும் கவிஞரான அருணாசல சிவாவின் இந்த பொன் விசிறியின் மூலம் உள்ளத்து உணர்வுகளை நுட்பமாக பதிவு செய்து, சமுதாயத்தை நெறிப்படுத்தும் வகையில் நல்ல ஹைக்கூ விருந்து படைத்துள்ளார்.

கவிதை ரசிகர்கள் என்ற சிறிய வட்டத்தை விட பெரியது ஹைக்கூ கவிதை ரசிகர்கள். பரவலாக எல்லோரும் ரசிக்கும் வகையில் ஹைக்கூ இன்று ஜனரஞ்சகமாகி விட்டது. பொன் விசிறி தலைப்பைப் போல பொன்னான கருத்துக்களை உணர்த்தும் அழகிய ஹைக்கூ கவிதைகளிம் தொகுப்பு. வாங்கி வாசித்துப் பார்த்து நீங்களும் ஹைக்கூ படைக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள்