சங்கப் பூந்துணர், நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.21&disp=inline&realattid=f_gbswj6pp20&zw
சங்கப் பூந்துணர், நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர்:தமிழ் மூதறிஞர் தமிழண்ணல்


தமிழ் செம்மொழியானதற்கும், தமிழ்வழிக் கல்விக்கும் காரணமான தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள், தமிழின் பெருமையையும், தமிழ்ப் பண்பாட்டையும் பறைசாற்றும் வண்ணம் சங்கத்தமிழில் உள்ள அற்புத இலக்கியங்களைத் தொகுத்து அதற்கு நுட்பமான பொழிப்பும் வழங்கி உள்ள அற்புத நூல். 16 பக்கம் தான் நூலில் உள்ளது. ஆனால் தமிழுக்கும் என்றும் வயது 16 என்பதை உலகிற்கு உணர்த்தும் நூல்.

தொல்காப்பியத்தின் தெய்வ வாழ்த்து தொடங்கி புறநானூறு தமிழர் அறம் வரை தேர்ந்தெடுத்த முத்துக்களைத் தொகுத்து மாலையாக்கி உள்ளார்கள். மனதில் பட்டதை மறைக்காமல் உரைக்கும் துணிவு மிக்கவர் தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள்.

கவியரசு கண்ணதாசன் முதல் இன்றைய திரைப்படப்பாடல் ஆசிரியர்கள் பலரும் பயன்படுத்தி வரும் புகழ்பெற்ற குறுந்தொகை பாடலும் விளக்கமும் மிகச் சிறப்பு. இந்தப்பாடலை மேற்கோள் காட்டாத இலக்கிய மேடை இல்லை என்று சொல்லுமளவிற்கு புகழ் பெற்ற பாடல் இதோ!

உலகக் காதலர்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

குறுந்தொகை 40 - செம்புலப் பெயனீரார்
என் தாயும், உன் தாயும் யார் யாரோ ? என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் என்ன உறவு ? நானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்விதம் அறிவோம் ? செம்மண் நிலத்தில் பெய்த வானத்து மழைநீர் ஒன்றானது போல அன்புள்ள நம் நெஞ்சங்களும் ஒன்றாயினவே ! செம்புலபெயனீரார் எழுதிய பாடல் இன்றைய காதலர்களுக்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது.தமிழ் தவிர பிறமொழி இலக்கியங்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் இருப்பதில்லை.

புதிய குடும்பம்
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு களங்கம் கழா அது உடீஇ
குவளை உன்கண் குய்புப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே

குறுந்தொகை 167 - கூடலூர் கிழார்
திருமணமான புதிது. அவள் தானாகச் சமைத்துப் பரிமாற விரும்பினாள். காந்தப்பூ விரல்களால் கட்டித்தயிரைப் பிசைந்து, அக்கையைப் பட்டுப்புடவையில் துடைத்தபடியே கையைக் கழுவவோ, உடை மாற்றவோ நினைவின்றிச் சமைக்கிறாள். தாளிதம் செய்யும் போது ~~குய்|| என்று எழுந்த புகை கண்களில் படிந்தது. இவ்வாறு தானாக மிக முயன்று சமைத்த புளிச்சோற்றை அவன் "இனிதாக வுளது" என்று கூறியபடி உண்ணவே அவள் முகம் மெல்லிதாய் மலர்ந்தது.

குறுந்தொகை பாடலில் சமையலில் பெண்கள் படும் பாட்டையும், சமைத்து முடித்த உணவை உண்ணும் போது பாராட்ட வேண்டும், பாராட்டினால் அவர்கள் முகம் மலரும் என்ற பல செய்திகள் உள்ளது. ஆண்களில் பலர் திருமணமான புதிதில் பாராட்டுவார்கள். நாட்கள் கடந்து விட்டால் பாராட்டுவதில்லை. உளவியல் ரீதியாக பாராட்டு அன்பை வளர்க்கும்.

புன்னை ஒரு தங்கை

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மோடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க நீ நல்கின்
நுறைபடு நிழல் பிறவுமார் உளவே

நற்றிணை 172 புன்னைமர நிழலில் சந்தித்த போது, காதலி காதலனிடம் சொன்னாள், இந்தப் புன்னை எங்கள் தங்கை. அதனால் அம்ம நாணுதும் நும்மோடு நகையே உம்முடன் சிரித்துப் பேச வெட்கமாய் இருக்கிறது. நான் என் தோழியருடன் விளையாடும் போது வெண்மணலில் புன்னை விதையை மறைத்து வைத்து விளையாடினோம். அப்போது நாங்கள் மறந்து விட்டுப் போன புன்னை விதை முளை விட்டுத் துளிர்க்கத் தொடங்கியது. அதுகண்டு எனக்குத் தந்த நெய் கலந்த பாலை அதற்கு ஊற்றி வளர்த்தேன்.

அதைப் பார்த்த என் தாய், " உங்களை விட உங்கள் தங்கைப் புன்னை எவ்வளவோ நல்லவள்" என்று அடிக்கடி சொல்வாள். புதிய பாணரின் விளரிப் பண் போல வலம்புரிச் சங்கு நாலும் கடற்கரைத் தலைவ! நீர் விரும்பினால் நாம் சிரித்துப் பேசி மகிழ மணம் கமழும் மர நிழல்கள் பிறவும் பலவுள !

நற்றிணைப் பாடலைப் படிக்கும் போது புன்னை மரத்தை சொந்தத் தங்கையாகக் கருதி அதுமுன்னே கூடல் வேண்டாம் என்று வெட்கப்படும் உயர்ந்த உள்ளம் உணர முடிகின்றது. மரத்தை தங்கையாகக் கருதிடும் உயர்ந்த குணம் தமிழ் தவிர வேறு மொழியில் காண முடியாது.

தமிழர் அறம் உலகம் உளதாவது யாரால் ?

உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத் தமியர் உண்டனும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்;பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்;அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன்தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே

நூல் : புறநானூறு,
பாடியவர் : இளம்பெழுவழுதி
அமிழ்தம் கிடைத்தாலும் பிறர்க்குக் கொடுத்தன்றித் தாம் உண்ணார். வெறுப்பும் சோம்பலும் இல்லாதவர். அஞ்சுவதற்கு அஞ்சுபவர். புகழ் என்றால் உயிரையும் கொடுப்பவர். பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் கொள்ளலர். சோர்விலர். அத்தகைய நற்பண்புகள் உடையவராய் தமக்கு மட்டும் என முயலாது பிறர்க்கு எனப் பெருமுயற்சி செய்பவர் இருத்தலால் இவ்வுலகம் என்றும் உளதாகின்றது. இப்படி அருமையாக உரை எழுதி உள்ளார் ஆசிரியர்.

தமிழர்களின் பண்பை, குணத்தை பறைசாற்றும் தலைசிறந்த பாடல், புகழ்பெற்ற பாடல்களை தொகுத்து பொழிப்புரை வழங்கி உலகின் முதல் மொழியாம் தமிழுக்கும், உலகின் முதல் மனிதன் தமிழனுக்கும் என்றும் அழிவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறும் நூல். தமிழர்களின் இல்லங்களில்; இருக்க வேண்டிய சிறந்த நூல்.

கருத்துகள்