புகழஞ்சலி

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (05.02.1942 - 13.05.2026) பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் இளையபெருமாள், பழனியம்மாள் இணையருக்கு மகனாக வெள்ளலூரில் 05.02.1942இல் பிறந்தவர். பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு.வ. அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் (1969) திருக்குறள் இருக்கையில் பணியாற்றியவர். திருக்குறள் அணி நலம் (1971) கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள் (1979) தமிழாய்வுத் தொகுதி - 10 (1981) நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட்டவர். பேராசிரியர் டாக்டர் மோ. அ. துரை அரங்கனார் ஆங்கில ஆய்வேடு (Philosophy and Religion of Sundarar Thevaram) இரு புராண விருத்தம் (1985). அல்லி கதை (1985). திவாகரம் தொகுதி 1 & ll (1990, 1993) ஆகிய நூல்களைப் பல்கலைக்கழக வெளியீடாகப் பதிப்பித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழி, இலக்கியத் துறைகளின் தலைவராகவும் பதிப்புத்துறை இயக்குநராகவும் சிறக்கப் பணியாற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 19.12.2001 முதல் 18.12.2004 வரை பணியாற்றினார். செம்மொழி நிறுவனத்தில் 2008 முதல் 2014 வரை முதுநிலை ஆராய்ச்சியாளராக இருந்தார். இந்நிறுவனத்தின் துணைத் தலைவராக 23.09.2021 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 10 லட்சம் ரூபாய் பரிசோடு செம்மொழி கலைஞர் விருது இவருக்கு அக்டோபர் 2021 இல் கிடைத்தது. தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உட்பட 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். ஜெர்மனி, இலங்கை, மலேசியா ஆகிய அயல்நாடுகளுக்குச் சென்று தமிழை வளர்த்தவர். அமெரிக்கா சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் (04.07.2019 - 07.07.2019) கலந்து கொண்டவர். “பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன்” என்ற பொருளில் (1977) முனைவர் பட்டம் பெற்றவர். இந்த ஆய்வேடு நூலாகவும் வெளிவந்துள்ளது. சொல்வலை வேட்டுவர், வள்ளுவர், நடையியல், பாரதி நடையியல், திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலை, இலக்கியச் சுடர், திருக்குறள் சில அரிய பதிப்புகள் என 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சுவடியியல், நடையியல், அகராதியியல், மொழிபெயர்ப்பியல், ஆய்வியல் என அனைத்துத் துறைகளிலும் தம் பங்களிப்பை அளித்த சான்றோர்

கருத்துகள்