நூல் : பூமியை வாழ வைப்போம் நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : பூமியை வாழ வைப்போம்
நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : சுற்றமும் நட்பும் பதிப்பகம்
72/591, மேலப்பொன்னகரம்
5ஆவது தெரு, ஆரப்பாளையம், மதுரை-625 016.
அலைபேசி : 98421 13807
பக்கங்கள் 160. விலை ரூ.160
******
அகர்வால் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் தி.பத்ரி நாராயணன் அவர்கள் 'இயற்கையை அறிந்து கொள்ளும் வழிகாட்டி' என்று தலைப்பிட்டு சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளார். நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள் இன்றைய தேவை அறிநது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விதைக்கும்வண்ணம் வடித்த 28 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுகள், 45 ஆண்டு கால அனுபவம் மிக்கவர்.
பதிப்பாளர். எழுத்தாளர் மீ.இராம சுப்பிரமணியன் சிறப்பான பதிப்புரையும் வழங்கி உள்ளார். ஆசிரியரின் என்னுரையும் உள்ளது. 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு தேர்வு அல்ல; அவசியத் தேவை' என்ற தலைப்பிட்ட என்னுரை நன்று.
சுற்றுச்சூழல் என்றால் என்ன? பஞ்சபூதங்களை மனிதன் எவ்வாறு சிதைத்து வருகிறான். அதன் விளைவு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. எதிர்கால சந்ததிகளின் வளத்திற்காக, நலத்திற்காக சுற்றுச்சூழல் பேண வேண்டிய அவசர அவசியத்தை வலியுறுத்தும் நூல் இது. "இந்த புத்தகத்தை வாசித்து முடித்தபின்னர், சுற்றுச்சூழல் மீதான உங்கள் கரிசனம் சற்றேனும் அதிகரிக்குமேயானால் அதனையே இந்தப் புத்தகத்தின் வெற்றியாகக் கருதுவேன், நன்றி" என்று என்னுரையை முடித்துள்ளார்.
உண்மை. இந்த நூல் வாசித்து முடித்தவுடன் நமக்கு சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வை நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுகள். நூலாசிரியர் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார். காற்று, நீர், நிலம் மாசுபடுதல் பற்றி விவரித்துள்ளார். நெகிழியின் தீங்கு பற்றியும் எழுதி உள்ளார். மாசுபாட்டை குறைக்க என்ன செய்யலாம்? என்று தீர்வும் எழுதி உள்ளார். முடிந்தளவிற்கு கடைபிடிக்கலாம், நம் உயிர் நம் கையில், உங்கள் ஆயுளில் 5 ஆண்டுகள் குறைகிறது. உயிர்க்கொல்லியாக மாறும் காற்று, ஆற்றினை அசுத்தப்படுத்துகிறோம். இப்படி கட்டுரைகளின் தலைப்புகளே நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
தலைப்பைப் படித்தாலே கட்டுரையைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்வண்ணம் தலைப்பை சூட்டி உள்ளார். இன்றைக்கு தேவையான விழிப்புணர்வை விதைக்கும்வண்ணம் கட்டுரைகளை வடித்துள்ளார். ஆற்றை நாம் அசுத்தப்படுத்தி வருகிறோம். வைகை ஆற்றை கடந்து போகும்போது பார்த்தால் மாடு கட்டி, மாட்டுத் தொழுவமாக்கி உள்ளனர் குப்பைகளை ஆற்றில் கொட்டி வருகின்றனர். ஆற்றை மாசுபடுத்துகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல் பலர் மாசுபடுத்தி வருவதைக் காண்கிறோம். வைகையைப் போலவே பல ஆறுகளையும் மக்கள் மாசுபடுத்தி வருகின்றனர்.
இயற்கையை நாம் சிதைத்தால், இயற்கை சினம் கொண்டு எழுந்து நம்மை சிதைக்கும் என்ற உண்மையை நூலில் நன்கு வலியுறுத்தி உள்ளார். தண்ணீர் சேகரிப்பு தேவை என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளார். அது பெண்கள் பணி மட்டுமல்ல, ஆண்களுக்குமானது தான் என்று எழுதி உள்ளார். மழைக்காடுகள் வனம் மட்டுல்ல, வாழ்க்கையும் கூட என்ற கட்டுரையில் காடுகளின் அவசியத்தை, பயன்களை வலியுறுத்தி உள்ளார்.
அழியும் தாவரங்கள் என்ன? காக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? என யாவும் விளக்கி உள்ளார். புள்ளி விவரங்களுடன், தரவுகளுடன் கட்டுரையை மிக நுட்பமாக வடித்துள்ளார்- சுற்றுச்சூழல் சிக்கல்களை மட்டும் எழுதலாம். அதற்கு தீர்வு என்ன? என்பதையும் எழுதி உள்ளது, நூலாசிரியர் ப.திருமலை அவர்களின் தனிச்சிறப்பு.
உயிர்ப்பலி வாங்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் புதிய சட்டம் வழிவகுக்கும்? கட்டுரையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றியும் விளக்கி உள்ளார். பூச்சிக்கொல்லிமருந்து தவிர்த்துள்ள சிக்கிம் மாநிலம் போல இயற்கை விவசாயத்தை பின்பற்றிட அறிவுறுத்தி உள்ளார்.
போரும் சுற்றுச்சூழலும் என்ற கட்டுரையில், போரினால் பாதிப்புகள் பற்றி விரிவாக எழுதி உள்ளார். போரில்லா உலகம் வேண்டும். போரிடும் ரசியா, அமெரிக்கா நாடுகள் திருந்த வேண்டும் என்ற எண்ணம் விதைத்தது, குறிப்பாக அமெரிக்கா, ரசியா இரண்டு நாடுகளும் வலிய போரிட்டு மனிதகுலத்திற்கு உயிர் இழப்பையும், சுற்றுச்சூழல் மாசையும் விளைவித்து வருகிறார்கள். போரில்லா உலகம் மலர வேண்டும். நாட்டின் அதிபர்களின் மனநிலை மாற வேண்டும். ஈகோவை விடுத்து மனிதநேயம் வரவேண்டும். இப்படி பல சிந்தனைகளை விதைத்தது கட்டுரை.
இந்தியாவில் அழிந்து வரும் விலங்குகளைப் பட்டியலிட்டு, அதன் அவசியத்தை எழுதி உள்ளார். தேனீக்கள் ஏன் வேண்டும்? என விளக்கி உள்ளார். பரிதாப நிலையில் கழுகுகள், பேரிடரும் பேரிழப்பும் சொல்லும் பாடம் கட்டுரையில் இயற்கை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன? மனிதன் விழிப்புணர்வுடன் இருந்து சுற்றுச்சூழலை காக்க வேண்டிய அவசர அவசியத்தை நூல் முழுவதும் நன்கு வலியுறுத்தி உள்ளார் சிறந்த நூலிற்கான பரிசு இந்த நூலுக்கு வழங்க வேண்டும். நூலாசிரியர் ப.திருமலை அவர்களுக்கு பாராட்டுகள்.


கருத்துகள்
கருத்துரையிடுக