படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ோப் அடிகளார்: ஒரு தமிழ் மாணவரின் வரலாறு!மு .இளங்கோவன் .புதுவை
போப் அடிகளார்: ஒரு தமிழ் மாணவரின் வரலாறு!மு .இளங்கோவன் .புதுவை
தமிழைக் கற்ற அயல்நாட்டு அறிஞர்களுள் தவத்திரு போப் அடிகளார் குறிப்பிடத் தகுந்தவர். இவர் சமயப் பணிக்காகத் தமிழகத்திற்கு வந்தவர். சென்னை, சாயர்புரம், தஞ்சாவூர், உதகமண்டிலம், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களில் பள்ளிக் கல்விக்கு வித்திட்டவர். தமிழ்க் கல்வி வரலாற்றில் இவர் பெயர் என்றும் நினைவுகூரப்படும். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர் தமிழ் நூல்களை மொழிபெயர்த்து, நிலைத்த புகழினைப் பெற்றவர். இங்கிலாந்தின் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தமிழையும் பிற மொழிகளையும், இலக்கியங்களையும் பயிற்றுவித்த பெருமைக்குரியவர்.
போப் அடிகளார் அவர்கள் 1820 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இருபதாம் நாள் வட அமெரிக்காவில் நோவாசுகோசியா என்ற இடத்தில் அமைந்த பிரின்சு எட்வர்ட் தீவில் பிறந்தவர். இவரின் தந்தையார் பெயர் சான்போப். தாய் பெயர் கேதரின் யுக்ளோ. போப் அடிகளாரின் பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சியார்ச் யுக்ளோ. போப் அவர்களின் தந்தை இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். வணிகம் பொருட்டுப் பிரின்சு எட்வர்ட் (வடஅமெரிக்கா) சென்றவர். வணிகத்தில் சிறந்து, புகழ்பெற்றதுடன் கிறித்தவ சமயத் தொண்டராகவும், மதப் பரப்புரை செய்பவராகவும் விளங்கியவர்.
போப் அவர்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் பத்துப் பேர். அறுவர் ஆண்கள்; நால்வர் பெண்கள். அனைவரையும் இறையுணர்வு நிறைந்தவர்களாகப் பெற்றோர்கள் வளர்த்தனர். இளம் அகவை முதல் போப் அவர்கள் நல்ல கல்வியறிவுடன் நற்பண்புகள் பலவற்றையும் ஒரு சேரப் பெற்றிருந்தார். ஊக்கமும் விடா முயற்சியும் அவருக்குப் பிறவிக் குணங்களாகவே இருந்தன. கிறித்தவ சமயப்பணி புரிவதற்குக் கிரேக்கம், எபிரேயம் முதலான மொழிகள் தேவையெனக் கருதி, அவர் இளம் அகவையில் இம் மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். வெசிலியன் சங்கத்தார் தென்னிந்தியாவில் ஊழியம் செய்வதற்குப் போப் அடிகளாரைத் தகுதி எனக் கருதி 1839-ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்து அனுப்பினர்.
தம் பத்தொன்பதாம் அகவையில் போப் அடிகளார் மரக்கலம் ஒன்றில் ஏறி, எட்டுத் திங்கள் செலவு செய்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். எட்டுத் திங்களும் கப்பலில் செலவு செய்யும்பொழுது நாள்தோறும் எட்டுமணி நேரம் தமிழ் மொழியையும், வடமொழியையும் கற்றார். கப்பலில் வரும்பொழுது தமிழகத்தில் உரையாற்றுவதற்குத் தகுந்தபடி சொற்பொழிவு உரை ஒன்றையும் ஆயத்தம் செய்து வந்தார். சென்னையில் "சாந்தோம்' என்னும் இடத்தில், வந்த ஒரு மாதத்திற்குள் தாம் கொண்டு வந்திருந்த கருத்துகளைத் தமிழில் சொற்பொழிவாக நிகழ்த்தினார். அச் சொற்பொழிவுக்கென எழுதப்பட்ட கையெழுத்துப்படிகள் அவர்களின் குடும்பத்தினரிடம் இன்றும் இருப்பதாக நம்பப்படுகிறது.
முழுமையான பணிகளை அறிவதற்கு என் வலைப்பதிவுக்கு வருக!
https://muelangovan.blogspot.com/2007/04/blog-post_5140.html

கருத்துகள்
கருத்துரையிடுக