படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கலைஞர் அவரை வீட்டுக்கு அழைக்கிறார். கலைஞரின் வீட்டுக்கு போனதும் "அய்யா மேலே அறையில் இருக்கிறார்...மேலே போங்க.." என சொல்லப்படுகிறது. கலைஞரின் படுக்கை அறையில் நுழைகிறார் அவர். "என் படுக்கை அறைக்குள் நுழைந்த இரண்டாவது மலையாளி நீர் தானய்யா..." எனச்சொல்லி சிரிக்கிறார் கலைஞர். முதல் மலையாளி யாரென்று நாடேயறியும். அவர்....கொச்சின் ஹனிஃபா... ஒவ்வொரு மலையாளியையும் தன் வேதனைக்காலங்களில் திரை மூலம் கட்டிப்போட்டு சிரிக்க வைத்த சாமானியன். எமகாதகன். மலையாளத்திலிருந்து நிறைய டைரக்டர்கள், நடிகர்கள் தமிழுக்கு வந்ததுண்டு. அதில் எல்லோரும் அறிந்த ஒரு நடிகர் ஹனிஃபா....உண்மையான பெயர் ..வெளுத்தேடத்து முகம்மது கொச்சின் ஹனீஃபா. வி.எம்.சி.ஹனீஃபா...சினிமா பெயர். கொச்சியை சேர்ந்த ஹனீஃப் 1972ல் சினிமாவுக்குள் நுழைந்தார். சிறு சிறு வேஷங்கள் செய்து வில்லனாகி, காமெடியனாகி, கதை எழுதி, படம் இயக்கி அவர் திரைத்துறையின் எல்லா பாகங்களையும் தொட்டார். மிமிக்ரி காலங்களில் கலாபவனில் உறுப்பினராக இருந்தார். கலாபவன் தான் ஜெயராம், மணி, சித்திக், லால் போன்றோரை திரையுலகுக்கு தந்தது. மோகன்லால், மம்முட்டிக்கு முன்பே நஸீர், மது காலங்களில் வில்லனாக வந்தவர் ஹனீஃபா. இது வரை 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார். ஜெயன் கைதியாகவும், இவர் போலீசாக நடித்த படங்களும் உண்டு. இவர் 78ல் சிவாஜி மலையாளத்தில் நடித்த 'தச்சோளி அம்பு' படத்திலும் நடித்திருக்கிறார். முதன் முதலில் 85ல் 'ஒரு ஸந்தேசம் கூடி' என்கிற படத்தை எழுதி அவரே இயக்குகிறார். மம்முட்டி, பிரேம்நசீர், ரோஹிணி நடித்தனர். 72 முதல் 20 படங்களுக்கு மேல் கதை, வசனம் எழுதுகிறார். இவர் எழுதி மலையாளத்தில் வந்த 'ஆரம்பம்' என்கிற படம் தான் தமிழில் 84ல் 'எழுதாத சட்டங்கள்' என எடுக்கப்பட்டது. சிவாஜி, விஜயகுமார், சரத்பாபு நடித்து பெருவெற்றி பெற்ற 'தீர்ப்பு' படத்தின் கதை ஹனீஃபா எழுதியது தான். 'இதிஹாசம்' என்கிற பெயரில் மலையாளத்திலும், பின் இந்தியிலும் வெற்றி பெற்றது. பின் மம்முட்டி, நெடுமுடி வேணு, அம்பிகா, ஊர்வசி நடித்த க்ரைம் திரில்லர் படத்தை எடுக்கிறார். 'மூணு மாசங்களுக்கு முன்பு' என்கிற அப்படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டாகிறது. பின் மம்முட்டியோடு 'சிந்தூர பொட்டின்ட ஓர்மக்கு' என்கிற படம். ஹனீஃபாவின் வாழ்வில் மம்முட்டியை மறக்கமுடியாது. மம்முட்டி ஹனீஃபாவின் திறமை அறிந்து தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார். காரணம் மம்முட்டிக்கும் அவருக்கும் மிமிக்ஸ் காலத்திலிருந்தே நட்பு இருந்தது. இந்நிலையில் 88ல் கலைஞர் தன் பூம்புகார் புரொடக்ஷனுக்கு கதை தேட 'மூணு மாசங்களுக்கு முன்பு' கதை பிடித்துவிடுகிறது. ஹனீஃபா வரவழைக்கப்படுகிறார். ஹனீஃபாவுக்கு தன் வீட்டிலேயே ஒரு அறை கொடுத்து மீன்குழம்பு விருந்தோடு எழுத வைக்கிறார். ஹனீஃபா தமிழில் அவரே இயக்க திரைக்கதை, வசனம் கலைஞர் எழுத 'பாசப்பறவைகள்' வெளிவருகிறது. மலையாளத்தில் செய்த டிரைவர் ரோலை ஹனீஃபா தமிழிலும் செய்கிறார். அன்று முதல் அவர் தமிழிலும் வில்லனாக, காமெடியனாக அவர் ராஜ பாட்டை தொடங்குகிறது. பாசப்பறவைகளின் 'தென்பாண்டித்தமிழே' பாடல் இன்றைய இன்ஸ்ட்டா காலம் வரை வெளுத்து வாங்குகிறது. பின் அடுத்த தமிழ் படமும் கலைஞருக்காக எடுக்கிறார். இம்முறை 84ல் தான் எழுதி ஜோஷி இயக்கிய 'சந்தர்ப்பம்' என்கிற கதையை எடுக்கிறார். அது தான் 'பாடாத தேனீக்கள்'. அதுவும் சுமாராக போனது. பின் பிள்ளை பாசம், பகலில் பௌர்ணமி, வாசலிலே ஒரு வெண்ணிலா என படங்களை இயக்குகிறார். கடைசியாக 'நாளை எங்கள் கல்யாணம்' என்கிற படம். அது வெளியானதா என தெரியவில்லை. மலையாளத்தில் மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய 'வால்சல்யம்' மெகாஹிட் படம். ரசிக்கக்கூடிய குடும்பக்கதை. படிக்காதவன் படத்தில் ரஜினி, தன் தம்பிக்காக வேலைக்கு போவதும், தம்பி பணக்கார பெண்ணை விரும்புவதுமாக சில காட்சிகள் வரும். அதை ஒரு முழுப்படமாக, குடும்பக்கதையாக காட்டியிருப்பார் ஹனீஃபா. இந்நிலையில் மலையாள திரையுலகம் காமெடிக்கு திரும்பியதும் ஹனீஃபா பிஸி நடிகரானார். அவரில்லாத படமில்லை என்கிற நிலையானது. தமிழிலும் வைகாசி பொறந்தாச்சு படத்தில் பிரசாந்தின் தந்தையாக அவர் நடித்த 'மலையப்பன்' கதாபாத்திரம் பேசப்பட்டது. மஹாநதியின் தனுஷ் பாத்திரம் அவர் மேல் தீராத ஆத்திரத்தை ஏற்படுத்தும். காதலா, காதலா விகடானந்தா, முகவரியில் டைரக்டர், அன்னியன் வில்லன், சிவாஜியில் அமைச்சர், கிரீடம் செல்லபாண்டி, முதல்வன் ரகுவரனின் அடியாள், மதராசப்பட்டணம் துபாஷ், எந்திரனில் மாமூல் வெட்டு என சிட்டியிடம் வெட்டு வாங்கும் கான்ஸ்டபிள் என அவர் நடித்த பாத்திரங்கள் நம் மனதை விட்டு அகலாது. ஹனீஃபாவின் நடிப்பில் ஒரு Inner comedy line இருக்கும். அது வேறு எந்த நடிகரிடமும் கிடையாது. அவரது காமெடியை மலையாளப்படங்களில் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் Brillence at his core.... சினிமா சினிமா என்று பறந்து திருமணம் செய்ய மறந்து போன ஹனீஃபா 94ல் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஃபஸீலா. இரட்டை மகள்கள். மார்வா, ஸஃபா.இந்த இரட்டை குழந்தைகள் மணிச்சித்ரத்தாழ் படத்தின் இரண்டாம் பாகமான 'கீதாஞ்சலி' என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷின் சிறுவயது பாத்திரத்தில் ட்வின்ஸாக நடித்தனர். தனது 58வது வயதில் 'தொட்டுப்பார்' என்கிற படத்தில் நடித்தார். யாரை அழைத்தாரோ...காலன் தொட்டுப்பார்த்து அவரை அழைத்துக்கொண்டான்... ஆனால் அவர் நினைவுகள் என்றும் இங்கு நிறைந்திருக்கும்.... (எனது தமிழ்த்திரை மறந்த இயக்குனர்கள் புத்தகத்திலிருந்து சில மாற்றங்களுடன்.....)

கருத்துகள்