படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
தினமணி - 8 11 2025 சனிக்கிழமை நடுப்பக்க கட்டுரை (இரண்டாம் பகுதி) பக்கம் எண் : 8 தேம்பாவணி தந்த திருமகனார் முனைவர் ஒளவை அருள் இத்தாலி நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அருந்தமிழ்த் தொண்டு செய்த அருட் குருக்களில் சிறந்ததொரு பெருமகனார் வீரமாமுனிவர் (1680 - 1747 ). அகிலம் போற்றும் பெருங் கவிஞரான வெர்ஜில் பிறந்த நகருக்கு அருகிலுள்ள காஸ்திக்கிளியோனே என்பது இவர் பிறந்த ஊராகும். இவர் பிறந்தது 1680 -ஆம் ஆண்டு நவம்பர் 8 -ஆம் தேதி. இவர் தம் தந்தை பெயர் கண்டால்போ பெஸ்கி , தாயார் எலிசபெத் பெஸ்கி, இவர்தம் இயற்பெயர் ஜோசப் கான்ஸ்டன்டைன்பெஸ்கி என்பதாம். தாய் மொழியாகிய இத்தாலிய மொழியுடன் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன், போர்த்துகீசியம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். வீரமாமுனிவர் தனது 18 -ஆம் வயதில் கத்தோலிக்கக் குருவாக அழைப்புப் பெற்றார். இவரது பணியார்வத்தால் கவரப்பட்ட ஆயர்கள் வெளிநாடுகளில் மறைப்பணி ஆற்றுவதற்காக இவரைத் தேர்ந்தெடுத்து 1710 -ஆம் ஆண்டு இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பினர். சுவாமி பெஸ்கியர் இந்தியாவுக்கு வந்தது 1716 -ஆம் ஆண்டில் கோவையில் சில நாள்கள் தங்கி போதக சேவையைத் தொடங்கினார். அம்பலக்காடு. மணப்பாடு, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் சில காலம் தங்கினார். தூத்துக்குடியில் பெஸ்கியர் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த பின்னர் புதுப்பட்டிக்குச் சென்றார்; தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளையும் கற்றதுடன், வடமொழி ,இந்துஸ்தானி , பாரசீகம் ஆகிய மொழிகளிலும் பயிற்சி பெற்றார். பழநியில் வசித்த சுப்பிர தீபக் கவிராயர் என்பவர் பெஸ்கியரின் தமிழாசிரியராவார். தம் இயற்பெயராகிய கான்ஸ்டான்ஷியுஸ் என்ற பெயரை தைரியநாதன் என்ற தமிழ்ப் பெயராக்கி, பின்னர் பொதுமக்களும் இவரை வீரமாமுனிவர் என்று புகழத் தலைப்பட்டனர். மேனாட்டு மொழிகளில் அமைந்தது போன்ற அகராதியைத் தமிழ் மொழியில் தொகுத்துத் தந்தார். ஒரு பெயருக்குப் பல பொருள் உள்ளதைத் தொகுத்துப் 'பெயரகராதி' என்றும், ஒரு பொருளுக்குப் பல பெயருள்ளதைத் தொகுத்துப் 'பொருளகராதி என்றும், இரண்டு முதல் அநேகம் சேர்த்து ஒரு சொல்லாக வழங்குவதெல்லாம் 'தொகை அகராதி என்றும் ககர முதல் னகர வீறாக உள்ள பதினெட்டெழுத்தும் குறிலும் நெடிலுமாய் எதுகைப் பற்றி வரும் பதங்களெல்லாம் தொகுத்துத் ' தொடையகராதி ' என்றும், நான்கு வகை கொண்டதாய் தொகுத்ததே 'சதுரகராதி (1732) என்றும் பெயர் கொண்டு விளங்குகின்றன. இஃதன்றி அவர் இயற்றிய வேறு இரண்டு அகராதிகள் குறிப்பிடத்தகுந்தவை. ஒன்று தமிழ் - இலத்தீன் அகராதி, மற்றொன்று போர்த்துக்கீசியம் தமிழ் - இலத்தீன் அகராதி. முன்னையது 9000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் கொண்டது. பின்னையது 4,400 போர்த்துகீசிய மொழிகளுக்கு தமிழிலும், இலத்தீனிலும் பொருளினைக் கொண்டுள்ளது. வீரமாமுனிவர் தமிழ் மொழிக்கு இயற்றிய இலக்கண நூல்கள் நான்கு. அவை, கொடுந்தமிழ் இலக்கணம் (1728), செந்தமிழ் இலக்கணம் (1730 ), தொன்னூல் விளக்கம் (1730) மற்றும் திறவுகோல் என்பதாம். முதல் மூன்றையும் இலத்தீன் மொழியில் எழுதியுள்ளார். 'இவற்றில் செந்தமிழ் இலக்கணத்தின் இலத்தீன் மூலத்தோடு பாபிங்டன் துரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1917 - இல் திருச்சி ஜோசப் இண்டஸ்ட்ரியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்து உரையும் எழுதி உள்ளார். ரோம் நாட்டு தத்துவஞானியான செனக்காவின் ஒழுக்க இயல் நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீரமாமுனிவர் இயற்றிய 'தேம்பாவணி ( 1726 ) என்ற இனிய செந்தமிழ்க் காப்பியம் 3615 விருத்தப் பாக்களைக் கொண்டதாக இயேசுநாதரின் வளர்த்த தந்தை சூசையப்பரின் வரலாற்றை விரித்துக்கூறுகிறது. மதுரை தமிழ்ச் சங்கத்தில் தமிழ் அறிஞர்களால் தேம்பாவணி வெகு சிறப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் மரபோடு ஒன்றி தீந்தமிழ்க் காப்பியம் என கிறிஸ்தவர்களால் போற்றப்படும் புனித நூலான தேம்பாவணி, கீர்த்தனை, சிந்து, வசன காவியம், விருத்தியுரை, உரைநடை, சுருக்கம் ஆகிய பல்வேறு வடிவங்களைக் கொண்டதுடன், 'அன்பை விதைப்போருக்கு அன்பே கிட்டும்' என்ற உயர்ந்த சிந்தனை ஊட்டுகிறது. வீரமாமுனிவர் இயற்றிய திருக்காவலூர்க் கலம்பகமும் (1727), கித்தேரியம்மாள் அம்மானையும் ( 1723 ) அறிஞர்க்கு நவில்தொறும் அறிவின்பம் பயப்பன. தமிழில் வரலாற்று நூல்கள் வருவதற்கு அடித்தளமிட்டவர் வீரமாமுனிவர். அவர் எழுதிய 'வாமன் சரித்திரம்' அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, நிறுத்தப்புள்ளி. முற்றுப்புள்ளி போன்ற குறியீடுகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி எளிமையாக்கிய பெருமையும் இவரையே சாரும். வீரமாமுனிவரது உரை நடையில் மிகுதியாகப் பயிலப் பெறுவது பரமார்த்த குருவின் கதையாகும் ( 1744 ) இது பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வீரமாமுனிவருடைய உரைநடை மாட்சிக்கு எடுத்துக்காட்டாக 'வேதியர் ஒழுக்கத்தை தமிழ் உரை நடை பயிலும் மாணவர்க்குரிய மேல் வரிச்சட்டமாக யான் கருதுவேன்' என்பார் டாக்டர் ஜி.யு. போப். 2019 -ஆம் ஆண்டில் முனைவர் டொமினிக்ராஜ் , தேம்பாவணி முழுவதையும்.ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். வீரமாமுனிவரின் பிறந்த நாளான நவம்பர் 8 -ஆம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை அகராதி நாளாக, அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடுவதுடன், அவரின் பெயரிலான விருதினையும் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கிப் பெருமை கொள்கிறது.

கருத்துகள்