ஐங்குறுநூறு ! மருதத் திணைப் பாடல்கள் ! நூல் ஆசிரியர் : முனைவர் சரசுவதி அய்யப்பன் 7373147116. மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

ஐங்குறுநூறு ! மருதத் திணைப் பாடல்கள் ! நூல் ஆசிரியர் : முனைவர் சரசுவதி அய்யப்பன் 7373147116. மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! ****** நூலாசிரியர் முனைவர் சரசுவதி அய்யப்பன் அவர்கள் பாத்திமா கல்லூரி, மதுரையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டலும், ஓய்வின்றி இலக்கியப் பணியில் ஈடுபட்டு இந்நூல் எழுதியுள்ளார். இந்த அரிய நூலை பேராசிரியர் இ.கி. இராமசாமி அவர்கள் தந்து உதவினார்கள். தமிழரின் இலக்கியத்தை அறிய உதவும் சிறந்த நூல் இது, அறிஞர் அண்ணா விருதாளர் அ, சுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரை எழுதி உள்ளார். மீதமுள்ள திணைகளையும் எழுத வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். நானும் வைக்கின்றேன். நூலாசிரியர் இலக்கணப் பிழை களைந்து எழுத்தாக்க உதவிய முனைவர் வீ. கோபால் அவர்களுக்கும் நன்றி கூறி உள்ளார். கடவுள் வாழ்த்து தொடங்கி, மருதத்திணை வாழ்வியல் வகுத்தவர் ஓரம் போகியார் பாடிய பாடல்கள் பற்றி எழுதி உள்ளார். இது கூட இயற்பெயராக இருக்காது. தொகுத்தவர்கள் சூட்டிய பெயராக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அதன் காலத்தையும் குறிப்பிட்டுள்ளார். கி.மு.500 – 600 எனச் சுட்டிய அளவில் அதை நீட்டி கி.பி. 300 - 400 வரை எனவும் கணக்கிட்டு இடையிலான 600 அல்லது 700 ஆண்டுகள் ‘சங்க காலம்’ எனப் பதிவிடுகின்றனர். தொல்லியல் பேரறிஞர் ஐராவதம் மகாதேவன் `சாமானிய மக்களின் மரபுப் பண்பாடுசார் இலக்கியம் சங்க இலக்கியமே’ எனக் கருதுகிறார் என நூலில் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் பணிநிறைவிக்குப் பிறகு ஓய்வாக வீட்டிலிருக்கும் மற்ற பேராசிரியர்கள் போல் அல்லாமல் சுறுசுறுப்பாக இன்றும் இயங்கி வருபவர். உலகத் தமிழ்ச்சங்கம் உள்பட மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப்பவர். சங்க இலக்கியமான ஐங்குறுநூறு மருதத்திணைப் பாடல்களை எடுத்துக் கொண்டு மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் நூல் வடித்துள்ளார், சங்க இலக்கியம் என்பது பலாப்பழம் போன்றது. அதனை பலாச்சுளையாக நமக்குத் தந்துள்ளார். அவ்வளவு இனிமையாக உள்ளது. அகத்திணை தமிழரின் வாழ்வை உயர்ந்த உள்ளத்தைப் பதிவு செய்துள்ளார். வேட்கைப்பத்து பற்றிய விளக்கவுரை சிறப்பு. ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் கொண்ட பேரரசர். சிற்றரசர்களை வாழ்த்துபவர்களாக எமது நற்றாய் மற்றும் செவிலித்தாய் இருந்தனர். தோழி, தலைவி ஆகிய நாங்களே மருத்துவ குணமுள்ள காஞ்சிர மரத்து இலைகளையும் முட்டை மீனும். சிறு மீனையும் ஒரே பண்புடையதாகக் கருதுகின்ற எமது தலைவனாகிய உனது அறியாமயை எண்ணியிருந்தோம். உனது எண்ணத்தை வார்த்தெடுக்கும் உனது தோழனாம் பாணனையும் வாழ்த்தினோம். உங்கள் இருவருக்கும் நன்மை நாடும் மனம் வேண்டும் என வழிபட்டு நின்றோம். வேறொரு பெண் மீது நாட்டமுள்ள தலைவனின் இயல்பை சுட்டிக்காட்டும் போக்கில் நனைய காஞ்சி சிலையை சிறுமீன் பாணர் ஊரன் எனத் தோழி தலைவனின் கூடாவொழுக்கத்தைக் குறிப்பிடுவதே இப்பாடலின் சிறப்பு. எவ்வளவு எளிமையாக விளக்கம் எழுதி உள்ளார். இப்படித்தான் பத்து வேட்கையும் எழுதி உள்ளார். இறுதியாக வேட்கைப் பத்து உணர்த்தும் உண்மைகள் என்று ஆய்வுரையாகவும் வழங்கி இருப்பது நூலின் சிறப்பு. பெரும்பாலும் நூலாசிரியர்கள் பாடல்களுக்கான விளக்கவுரை முடித்துவிடுவார்கள். கூடுதலாக ஆய்வுரையும் உள்ளது சிறப்பு. அதிலிருந்து சிறு துளிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு : ‘’அரசவாழ்த்துப் பாடும் தாயர் தாய்வழிச் சமூக மரபினர், பண்பாட்டு வளமையர், இளையராகிய தலைவி தோழி உறவு, மாந்தர்கள் யாவரும் பெண் கொடுக்க மறுத்தல், மண நீட்டிப்பு. சூளுரைத்தலில் பின்வாங்கல் போன்ற சக இருண்மைகளைத் களைந்த ஆளுமையினர்”. இப்படி முடித்துள்ளார் இருண்மைகளைக் களைந்த ஆளுமையினராக சங்க காலத்திலேயே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை பறைசாற்றுகிறார். அடுத்து வேழப்பத்து பற்றியும் விளக்கவுரை எழுதி உள்ளார். கடுஞ்சொற்கள் இன்றி மிக, எளிய சொற்களைப் பயன்படுத்தி எல்லோருக்கும் புரியும்வண்ணம் சங்க இலக்கியத்தை இனிமையாக வழங்கி உள்ளார். இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. அக்காலத்து காதல் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவிடும் நூல் இது. தலைவன் தலைவி பற்றி, தோழி பற்றி, தாய் பற்றி, செவிலித்தாய் பற்றி இவர்களைச் சுற்றி வரும் அகத்திணைப் பாடல்கள், ஐங்குறு மருதத்திணைப் பாடல்களை தமிழ்விருந்தாக வைத்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால். தலைவன். தலைவி. தோழி. தாய். செவிலித்தாய் என யாருடைய பெயரும் எந்த இடத்திலும் வராது. தமிழர்கள் அன்று வாழ்ந்த காதல் வாழ்க்கையை, நடந்த வரலாற்றை பெயர் குறிப்பிடாமல் சங்கப் புலவர்கள் அகத்திணையாகப் பதிவு செய்துள்ளார்கள். யாருடைய பெயரையும் குறிப்பிடக் கூடாது என்பதை மரபாகக் கடைப்பிடித்து பாடல்கள் வடித்துள்ளார்கள். புலவி விராயபத்துக் கூறும் உண்மைகள், எருமைப் பத்துக் கூறும் உண்மைகள் என்று பாடல்களை ஆய்வு செய்து புலப்படும் உண்மைகளை வாசகர்களுக்கு உணர்த்தி உள்ளார். ஒழுக்கம் குறைந்த தலைவனை மன்னித்து தலைவி ஏற்பது, குலநலனுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் போன்ற அக்கால பண்புகளை, பொறுமையை, வாழ்வியலை நன்கு உணர்த்தி உள்ள நூலாசிரியர் முனைவர் சரசுவதி அய்யப்பன் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.

கருத்துகள்