தொட்டிலோசை ! நூல் ஆசிரியர் : கவிஞர் நெல்லை ஜெயந்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

தொட்டிலோசை ! நூல் ஆசிரியர் : கவிஞர் நெல்லை ஜெயந்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : வாலி பதிப்பகம், தாமிரபரணி M8, அழகாபுரி நகர், இராமாபுரம், சென்னை-89. பக்கங்கள் : 112, விலை : ரூ.150. ******. திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் பொறியாளர். அரசில் பணியாற்றிக் கொண்டே இலக்கியப்பணியையும் இனிதே செய்து வருபவர். இந்த நூல் வெளியீட்டு விழா மதுரையில் ‘நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கில்’ நடந்தது. நூலாசிரியரின் மகனும் பொறியாளர். அவரது உழைப்பில் உருவான குறும்படமும் ஒளிபரப்பானது. ‘அம்மா’ பற்றி எத்தனையோ கவிதை நூல்கள் வந்தாலும் இந்த நூல் தனித்துவம் வாய்ந்த நூலாக உள்ளது. நூலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் ‘அம்மா’ பற்றி குமுதம், அமுதசுரபி, தினமலர், மாலைமலர், பெண்ணே நீ அகிய இதழ்களில் பிரசுரமான கவிதைகளும், பிரபலங்கள் ‘அம்மா’ பற்றி எழுதிய வைர வரிகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நூலிற்கு மகுடம் போன்ற அணிந்துரை நல்கி உள்ளார். ‘அம்மா’ பற்றிய கவிதை நூலாக இருந்தாலும், அப்பாவிற்கு இந்நூலை காணிக்கை ஆக்கி உள்ளார். ‘அப்பா’ பற்றி முதல் கவிதையும் இடம்பெற்றுள்ளது. மகாகவி பாரதி, கலைஞர் மு. கருணாநிதி, கவிஞர் வாலி, கவிஞர் சிற்பி, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மீரா, கவிஞர் ரா. காமராசன், கவிஞர் மு. மேத்தா, கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் தி.மு.அப்துல்காதர், கவிஞர் அறிவுமதி, கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோரின் ‘அம்மா’ புகைப்ப்டங்களுடன் ‘அம்மா’ பற்றி அவர்கள் எழுதிய கவிதைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. ‘அம்மா’விற்கு பெருமை. மகாகவி பாரதிக்கு மட்டும் வளர்த்த சின்னம்மா படம் உள்ளது. நூலின் முன் அட்டை முதல் பின் அட்டை வரை மிக நேர்த்தியான வடிவமைப்பு. வண்ணப்படங்களுடன் பளபளப்பு தாளில் சிறப்பாகப் பதிப்பித்து உள்ள வாலி பதிப்பகத்திற்கு பாராட்டுகள். ‘அப்பா’ பற்றிய முதல் கவிதை இன்று என் சபைகளில் விழும் மாலைகளுக்கு நீங்களே நார்! சாலைகளில் எழும் சோலைகளுக்கு நீங்களே வேர்! தாயுமானவராயிருந்த தந்தையே! தங்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்!! முழுக்க முழுக்க ‘அம்மா’ கவிதை நூலில் வளர்ச்சிக்கு காரணமான ‘அப்பா’ பற்றியும் முதல் கவிதை வடித்ததற்கு பாராட்டுகள். வாழ்த்துகள். பெற்றோரைப் போற்றிடும் நல்மகனாக நூலாசிரியர் விளங்குகின்றார். இந்நூல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் ‘அம்மா’ பற்றிய நினைவுகள் வந்து விடும் என்று அறுதியிட்டுக் கூறலாம். மலரும் நினைவுகளை மலர்விக்கின்றன. மாதாவே / உன்னையும் / மகாத்மா என்கிறது / என் மனசு / ஓடி ஓடி உழைத்து / ஆயுதம் இல்லாமல் சுதந்திரத்தைப் போலவே / சுகப் பிரசவமாய்ப் / பெற்றாயே / என்னை! அம்மாவை தேசப்பிதாவான காந்தியடிகளோடு ஒப்பிட்டு வடித்த வைர வரிகள் நன்று. உன்னிடம் கற்றுக்கொண்ட கனிவு கருணை, எளிமை, இனிமை பண்பு, பழக்கம், பகைவரிடமும் பரிவு காட்டும் தன்மை – இவைகளை வளர்த்து வளர்த்து நான் முழுமை பெறுவதற்குத் துணையாக நீ என்னோடு கலந்து விட்டாய் என்பது தான் அம்மா உண்மை : கலைஞர் மு.கருணாநிதி பதச்சோறாக கலைஞர் கவிதை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். மற்ற கவிஞர்களும் அவரவர் ‘அம்மா’ பற்றி மிக மேன்மையாகவே கவிதைகள் வடித்துள்ளனர். அம்மா! திடீரென்று வரும் தெய்வங்கள் கூட பாலைக் குடிக்கத்தான் வருகின்றன! நீ தான் கொடுக்க வந்தவள்! ‘அம்மா’ பற்றிய கவிதையில் பிள்ளையார் பால் குடித்த கட்டுக்கதை, மூடநம்பிக்கையைச் சாடும் விதமாக வடித்த உத்தி நன்று. பாராட்டுகள். அம்மா! / உன் தாலாட்டில் தான் / எனக்குத் தமிழ் கிடைத்தது / அதனாலோ / எப்போதும் தமிழ் என்னைத் / தாலாட்டிக் / கொண்டே இருக்கிறது? அம்மாவின் தாலாட்டின் மூலம் தமிழ் கற்று சிறந்த காரணத்தால் தன்னைத் தமிழ் தாலட்டுவதாகக் குறிப்பிட்டது சிறப்பு. அம்மா! / உன்னால் தான் / நான் / உலகத்தைப் பார்த்தேன்! ஆனால் நீயோ / என்னையே உலகமாய்ப் / பார்ப்பாய்! அம்மாவின் மூலம் தான் உலகிற்கு வருகிறோம். உலகைக் காண்கிறோம். ரசிக்கிறோம், வாழ்கிறோம், ஆனால் பெற்றெடுத்த அம்மாக்கள் அனைவருக்கும் அவரவர் மகன்கள் தான் உலகம் என்று வாழ்வதும் உண்மை தான். கர்ப்பத்தில் / நான் / பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காய் / நீ உண்பாய்! / வறுமையில் நான் உண்ண வேண்டும் / என்பதற்காய் / நீ பட்டினி கிடப்பாய்! கர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக உண்பதும், வெளியே வந்து குழந்தை உண்ண வேண்டும் எனபதற்காக தாய் உண்ணாமல் இருப்பதும் வறுமை நிலையை, தாயின் இயல்பை, உயர்ந்த அன்பை, பாசத்தை கவிதைகளாக வடித்து நூல் முழுவதும் ‘அம்மா புராணம்’ பாடி உள்ளார். ‘அம்மா புராணம்’ பாடலாம் தப்பில்லை. ‘மனைவி புராணம்’ பாடினால்தான் மற்றவர்கள் மதிப்பதில்லை. இன்று / வளமையான / நாட்களிலும் நட்சத்திர விடுதிகளில் தான் / உண்ண முடிகிறது என்னால்! / அன்று வறுமையான / நாட்களிளும் நிலாச்சோறே / ஊட்ட முடிந்தது / உன்னால்! வசதிகள் வந்த பின்னர் நட்சத்திர விடுதிகளில் உண்ணும்போதும், வறுமையில் நிலாச்சோறு உண்டதை மறக்காமல் பதிவு செய்தது சிறப்பு. அம்மா! காவி உடுத்திய / துறவும் / இவளைத் துறக்க முடியாது / காரணம் / இவள் / நம் ஆவி உடுத்திய உறவு! இக்கவிதை பற்றி நூலாசிரியர் ஏற்புரையில் குறிப்பிட்டார். காலம்சென்ற மதுரை ஆதினம் அவர்கள். இவரது ‘அம்மா’ கவிதையைப் படித்துவிட்டு தனது ‘அம்மா’ பற்றிய இனிமையான நிகழ்வுகள் பற்றி குறிப்பிட்டதை மனதில் வைத்துத்தான் இக்கவிதை வடித்ததாகக் குறிப்பிட்டார். உண்மை தான். முற்றும் துறந்த துறவிகள் கூட ‘அம்மா’ பற்றி நினைவுகளை துறந்துவிட முடியாது. அவ்வளவு உயர்வானது அம்மா உறவு. உலகில் ஓராயிரம் உறவுகள் இருந்தாலும், ‘அம்மா’ என்ற உறவுக்கு ஈடான உறாவு உலகில் இல்லை என்பதே உண்மை. மனித இனம மட்டுமல்ல பறவைகள், விலங்குகள் என உயிரினங்கள் அனைத்திலும் மிக உயர்வான உறவான ‘அம்மா’ பற்றி அற்புதக் கவிதைகள் வடித்து, மற்ற கவிஞர்களின் கவிதைகளையும் இணைத்து ‘அம்மா’ பற்றிய சிறப்பு நூலாக வெளியிட்டுள்ள நூலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு பாராட்டுகள். *****

கருத்துகள்