அன்பு விதைகள்! நூல் ஆசிரியர் : முனைவர் சு. நாகவள்ளி அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

அன்பு விதைகள்! நூல் ஆசிரியர் : முனைவர் சு. நாகவள்ளி அணிந்துரை : கவிஞர் இரா.இரவி ****** நூலாசிரியர் முனைவர் சு. நாகவள்ளி தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்-பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து கவிதை நூல்கள் எழுதி வெளியிட்டு வருகிறார். இரண்டாவது கவிதை நூலுக்கும் நானே அணிந்துரை எழுதுகிறேன், முதல் நூலுக்கும் நானே வழங்கி இருந்தேன். சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் 40க்கு மேற்பட்டவர்கள் இருந்தார்கள். இன்று பெண் கவிஞர்கள் எண்ணிக்கை குறைவு தான். கவிதைகள் எழுதி நூலாக வெளியிடுவது மிகவும் குறைவே. காதலைப் பாடாத கவிஞர் இல்லை. காதலைப் பாடாதவர் கவிஞரே இல்லை என்பது உண்மை. பாடலாசிரியர் தாமரை போல காதல் கவிதைகள் வடித்து நூலாக்கி உள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். 91 கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் காதல் கவிதைகள் தான். காதல் கவிதை படிப்பதற்கு வாசகர்களுக்கு சுவையாகவும் சுகமாகவும் இருக்கும், படித்துப் பாருங்கள். பதச்சோறாக சில கவிதைகள் மட்டும் மேற்கோள் காட்டுகிறேன். ‘மௌனம்’ என்ற தலைப்பில் ஆரம்பித்து ‘கண்ணம்மா’ என்ற தலைப்பில் முடித்துள்ளார். கவிதைகளில் தலைப்புகளும் சொ₹ற்சிக்கனத்-துடன் சிறிய சொற்களாக இருப்பதால் தலைப்புகள் சிறப்பாக உள்ளன. தலைப்பைப் படித்தவுடனேயே கவிதைகளைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் விதமாக கவிதைகள் உள்ளன. தவம்! தாயின் கண் மூடாமல் / தவம் செய்தும் மண்ணுக்குள் வந்த நீ / கண்வழியே வந்த நீ மண்ணுறங்க விடலையே / கால நேரமில்லாமல் காவியமாய ஆனவனே / காதல் செய்யாயோ! தவம் என்றால் கண் மூடி தான் செய்வார்கள். கண் மூடாமல் தவம் செய்தேன் என்கிறார் புதுமையாக. கண் என்ற சொல் கொண்டு சொல் விளையாட்டு விளையாடி புதுக்கவிதை படைத்துள்ளார். அற்புதம்! என் வாழ்வின் / அற்புதம் நீ / என் உயிரின் / அற்புதம் நீ என் உணர்வின் / அற்புதம் நீ / என் உள்ளத்தின் / அற்புதம் நீ என் உறவின் / அற்புதம் நீ / உயிரில் கலப்பாயே! ‘அற்புதம்’ என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு அற்புதமாக கவிதை வடித்துள்ள நூலாசிரியர் முனைவர் சு. நாகவள்ளி அவர்களுக்கு பாராட்டுகள். காணிக்கை நினைவுச் சிறகால் / என் மனதை வருடிய என்னவனே / மன்னவனே / என்னவனே / தென்னவனே என் முன்னவனெ / கண்ணவனே / என் பண்ணவனே ‘அவனே’ ‘வனே’ என முடியும் வண்ணம் கவிதை வடித்த பாங்கு, பாணி சிறப்பு. நூலாசிரியர், ஆசிரியர் முனைவர் என்பதால் சொற்கள் சொக்க வைக்கும் விதமாக வந்து விடுகின்றன. அவற்றே தேர்ந்தெடுத்து தொகுத்து தொடுத்து புதுக்கவிதை பாமாலை தந்துள்ளார். மாலை! சின்ன சின்ன பூக்களால் / தொடுக்கப்பட்ட மாலை போல் என்னுள் உணர்ச்சிகளால் / உனக்கு மாலையிட்டேன்! மனதால் சிறையிட்டேன் / மனதை விட்டு அகல விட மாட்டேன்! மாலையிட்டேன், மனதால் சிறைபட்டேன், மனதை விட்டு அகல மாட்டேன் என கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை நினைவூட்டும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார். அன்னத்தைத் தொட்ட கைகளினால் – மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன். என்ற வசந்தமாளிகை திரைப்படப் பாடல்வரிகள் நினைவிற்கு வந்துபோயின. அதில் வரும் அடுத்த வரிகள். உன் உள்ளம் இருப்பது என்னிடமே! – அதை உயிர் போனாலும் தரமாட்டேன். இப்படி புகழ்பெற்ற வரிகளை நினைவூட்டும் விதமாக கவிதைகள் உள்ளன. பாராட்டுகள். விடுமுறை! உன்னை பார்க்காத போது / விழிகளுக்கு விடுமுறை உன் குரல் கேட்காத போது / செவிகளுக்கு விடுமுறை வள்ளுவன் சொன்னான் / செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்று. வள்ளியோ / செவிக்கு / உன் குரலுணவு / இல்லையெனில் குடலுக்கு / உணவெதற்கு என்கிறாள்! திருவள்ளுவரின் வைர வரிகளை வைத்துக் கொண்டு சொல் விளையாட்டு விளையாடி சொற்கள் நடந்தால் வசனம், சொற்கள் நடனமாடினால் கவிதை. நூல் முழுவதும் வரும் கவிதைகளில் சொற்கள் களிநடனம் புரிந்துள்ளன. ‘குரலுணவு’ புதிய சொல்லாடல். இதுவரை எங்கும் கேட்டிராத புதிய சொல். பாராட்டுகள். பறவை! பறவை போல் / இறக்கை கட்டி / வானத்தில் பறப்போமா! வானத்தில் வீடு கட்டி / பாடி ஆடி / குதிப்போமா! திசைமாறிப் போன இரண்டு பறவைகளும் திரும்பவும் ஒன்று / சேர்ந்ததில் திரும்பும் இடமெல்லாம் / ஆனந்தம்! ‘பறக்க முடியாத மனித இனம்’ என்பதையே மறந்து பறவையாக மாறி பறப்போமா என கேள்வி கேட்டு, படிக்கும் வாசகர்களையும் வானில் பறக்க வைத்து விடுகிறார். மேலும் வாசகர்கள் அவரவர் காதலை அசை போடும் விதமாக கவிதை வரிகள் உள்ளன. வழி நடத்து! ஆதியானவளே / அந்தமானவளே / வாழ்வானவளே வழியானவளே / ஒளியானவளே / ஒலியாய் நிற்பவளே அன்னையானவளே / அனைத்துமானவளே / வழிநடத்து எம்மை வழிநடத்து! கடவுளிடம் வேண்டுவது போலவே பெற்ற தாயிடம் வேண்டுவது போல வடித்த கவிதை நன்று. தாய்ப்பாசம் உணர்த்தும் நல்ல கவிதை. அன்னை பற்றியே இன்னும் சில கவிதைகள் உள்ளன. நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள்! கூண்டுக்கிளி! என் மனக்கூண்டில் / உன் நினைவுக் கிளி கூண்டை விட்டு போக / குதியாட்டம் போட எனை விட்டு போக / அனுமதியாத என் மனம்! இப்படி பெண் ஆணை நோக்கி பாடும் விதமாக வடித்த காதல் கவிதைகள் நனிநன்று. காதல் கவிதைகள் அன்றும் இன்றும் போற்றப்படும், இனிதே வாசிக்கப்படும், வரவேற்கப்படும், மொத்தத்தில் ‘அன்பு விதைகள்’ நூலின் மூலம் வாசகர்கள் மனதில் அன்பு விதை விதைத்து பாராட்டை அறுவடை செய்துள்ளார். பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு வைத்தேன். உள்ளே சென்று நூலை வாசித்துப் பாருங்கள். கவி விருந்து உறுதி. வாழ்த்துகள்.

கருத்துகள்