நதி தழுவிய நானிலக் காதலி நூல் ஆசிரியர் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி ! நூல் அறிமுகம் : கவிஞர் இரா. இரவி

நதி தழுவிய நானிலக் காதலி நூல் ஆசிரியர் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி ! நூல் அறிமுகம் : கவிஞர் இரா. இரவி தகிதா பதிப்பகம், 1/262, தமிழாலயம், மேல்குந்தா தொட்டகொம்பை (அஞ்சல்), நீலகிரி-643 219, செல் : 94899 09409, பக்கங்கள் ; 66. விலை : ரூ.80. ****** நூல் ஆசிரியர் கவிஞர் பீர் ஒலி அவர்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். சட்டமும் பயின்றவர். மதுரையில் தொடரித் துறையில் பணியாற்றி சாதனைகள் புரிந்து பணிநிறைவு பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டே இலக்கியத்திலும் தடம் பதித்து வருபவர். இவரது நூல்கள் தகிதா பதிப்பகம் வழியே வந்து கொண்டு இருக்கின்றன. இவரது முந்தைய நூலான ‘நித்திரை பயணங்கள்’ நூல் வெளியீட்டு விழா மதுரையில் மாநாடு போல நடந்தது. தொடரித் துறை நண்பர்கள் பலரும் வந்து இருந்தனர். திருமதி அமுதா ஞானசம்பந்தன் வந்து வெளியிட்டார்கள். நான் நூல் மதிப்புரை உரையாற்றி வந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த நூலையும் மதிப்புரைக்கு நூல் ஆசிரியர் அனுப்பி வைத்தார்கள். ‘நதி’ பற்றி போட்டிக்காக எழுதிய சிறு கவிதையை நண்பர் முனைவர் போ. மணிவண்ணன் அவர்களிடம் காட்டிட அவர் இதுகுறித்து தொடர்ந்து விரிவாக எழுதுங்கள் என்று சொல்ல நூலாக மலர்ந்து விட்டது. ‘சிறுதுளி பெருவெள்ளமாக’, ‘சிறுபொறி தீயாக’ ‘சிறு கவிதை நூல் கவிதைகளாக’ மலர்ந்துள்ளன. நதி பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் நதி பற்றிய பொருளிலேயே வந்துள்ள நூலாக இதுவே தான் உள்ளது என்று கருதுகின்றேன். நதியை அணுஅணுவாக ரசித்து வடித்த கவிதைகள், இந்த நூல் படித்து முடித்த வாசகன், இன் நதியை ரசித்துப் பார்ப்பான் என்று அறுதியிட்டு கூறமுடியும். முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. பாருங்கள். வறண்டு போன / நதிப்பாதை / எஞ்சிக் கிடந்த மணல்வெளியில் / அந்த பிஞ்சுக் குழந்தையின் விரல்கள் / தாயின் முந்தானையைத் / துளாவிக் கொண்டிருந்தன / அவள் கண்களில் / தொலைந்து போன காதலின் சுவடுகள் / பிரசவிக்கத் தொடங்கின. தொலைந்து போன காதலின் சுவடுகள் பிரசவிக்கத் தொடங்கின. மலரும் நினைவுகளை நதியே மலர்வித்து அன்றும் இன்றும் என்று எண்ணி சோகம் கொள்வதாக வடித்த கவிதை நன்று. பொதிகை மலைத் தென்றல் / நதியோடி ஏரி, குளம் நிறை நீர் / வயல்வெளியில் பிணைந்துயிர் செந்நெல் கதிர் / தரணியெங்கும் பயிர் செழிக்க! உண்ண உணவு நல்கிடும் உழவனுக்கு உறுதுணையாக இருப்பது நதியே. நதி வறண்டு போனால் உழவனும் உள்ளம் வறண்டு போவான். நதியின் பயன்பாட்டை விளக்கிடும் கவிதைகள் நன்று, பாராட்டுகள். ஆதவனின் / பிரிவை நினைத்து / ஆம்பல் இவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது / அந்த வானம் / வானத்திற்கேன் நிலத்தோடு ஊடல் / வைகை நதிக்கரையில் மணல் வீடு கட்டி / மணற் கிணறு நீர் பருகி மகிழ்ந்திருந்த நாட்களெங்கே? வைகை நதியில் வருடம் முழுவதும் தண்ணீர் பாயந்தது அந்தக்காலம். ஆனால் இக்காலம், வருடத்தில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் பாய்கின்றன. மண் பகுதியில் சிறிதளவு தோண்டினால் தண்ணீர் ஊறி விடும், அதனை எடுத்து குடித்து மகிழ்ந்தது அக்காலம். ஆனால் இன்றோ தோண்டினால் தண்ணீர் வருவதில்லை. ஒருவேளை வந்தாலும் குடிக்கும் அளவிற்கு சுத்தமாக இருப்பதில்லை. மனிதர்கள் நதிகளையும் நஞ்சாக்கி வருகின்றனர். பாலைவனத்தில் / தாகம் தீர்க்கத் / தேடி அலைந்தவன் கானல் நீர் கண்டு / துரத்திக் கொண்டிருந்தான் கைப்பிடித்தக் காதலன் / தந்து சென்றப் பரிசினைக் / கண்ணீர் நதியில் / தூதுவிட்டுக் காத்திருந்தான். கானல் நீர் என்பது நீரல்ல, கண்களுக்கு நீர் போல காட்சியளிக்கும் காட்சிப்பிழை. பாலைவனத்தில் வாழ்பவன் அறிவான் நதியின் பயன்பாட்டை. ஆனால் நதிகள் பாயும் இடத்தில் வாழும் மனிதர்கள் நதியை மதிப்பதில்லை. தண்ணீர் திருடிய மனிதன், வற்றிய பின்னே மண்ணையும் திருடி வருகிறான். வேதனை. நாடுகளை மனிதர்களை / இணைத்து அகம்புறம் அறிந்து / கடந்தவைகளையும் நிகழ்வுகளையும் / ஆய்ந்து உணரும் நீ தானே / மனிதர்களையும் இடங்களையும் பிரித்து வைக்கின்றாய்! உண்மை தான், நதி தான் இக்கரையையும் அக்கரையையும் பிரித்து வைக்கின்றது. நிலத்தடி நிலங்களின் அளவை நிரணயம் செய்வதும் நதிகள் தான். சில சமயங்களில் சினம் கொண்டு சீறிப்பாய்ந்து வரும் காலங்களில் குறுக்கே யாரும் கடந்துவிட முடியாது. கடக்க முயற்சிப்பவர்களையும் கடத்தி உடன் அழைத்துச் சென்று விடுவதும் உண்டு. அதில் சிலர் பிழைக்கலாம். ஆனால் பலர் இறந்திடுவர். அளவாகப் பாய்ந்து நிலங்களுக்கு நீர் பாய்ச்சிட உதவி உணவிற்கு வழிசெய்வது உன்னத நதிகளே! கால மாறுதலுக்கு உட்பட்டு / காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும் / நீயும் மனிதன் போன்று தான். ‘மாற்றம் ஒன்று தான் மாறாதது’ என்ற மனித தத்துவத்திற்கு நதிகள் விதிவிலக்காவதில்லை. நதி சில நேரங்களில் தென்ற-லாகத் தவழ்ந்து இன்பம் தரும்; புயலாகப் பாய்ந்து துன்பமும் தரும். நதியின் அழகை, இயல்பை நூல் முழுவதும் ரசனையுடன் ரசித்து வடித்த கவிதைகள் நன்று. உந்தன் மேனியெங்கும் / பொங்கிக் கிறங்கும் அரும்புகள் / கொடி இடைமுல்லை / துவள்கொள் தென்றல் / கைவீசி கவி பொழிந்து / கானகத்தே எங்கும் வியாபித்திருக்கும் / எழில் மிளிர் பிரதேசங்கள் அனைத்தும் / தழுவிப் புணர்ந்து ஏகாந்தமாய் / ஆகாயம் குடை விரிக்க மேகங்கள் கவரி வீச / மயிலிறகு மென்மைத் தொட்டு. ஓடும் நதியை காதலியாகக் கற்பனை செய்து வடித்த புதுக்கவிதைகள் சிறபுப். பாராட்டுகள். நதியின் நடை போலவே கவிதை நடை. நன்றாக உள்ளன. நதியை ரசிக்க வைத்தன.

கருத்துகள்