சோதிடம்! கவிஞர் இரா. இரவி

சோதிடம்! கவிஞர் இரா. இரவி ****** மணமகன், மணமகள் இருவீட்டாரும் இரு வேறு சோதிடர்களிடம் பத்து பொருத்தம் பார்த்து, நல்ல பொருத்தங்கள் உள்ளன எனச் சொல்லி முடிந்த திருமணங்கள் பல மணமுறிவு ஏற்பட்டுள்ளன. இன்னும் பல மணமுறிவிற்கு விண்ணப்பித்து வழக்குகள் நடந்து வருகின்றன. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், சோதிடம் என்பது உண்மை அல்ல. மாமனிதர், அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அவர்கள் சொன்னது என்னவென்றால், “எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்கிறார். சோதிடர்களுக்கு வேண்டுகோள் : ஏற்கெனவே பொருத்தங்கள் யோசித்து தான் ஜாதகம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் ‘பொருத்தம் இல்லை’ என்று சொல்லி பல திருமணங்கள் நின்று விட்டன. முதிர்கன்னிகளும், முதிர்காளைகளும் பெருகி விட்டனர், காரணம் சோதிடர்களே. இனிவரும் ஜாதகங்களுக்கு சாதகமாக பொருத்தம் என்று சொல்லுங்கள், பலருக்கு திருமணம் நல்லபடியாக நடக்கும். எனக்கு தெரிந்து ஒரு மணமகளுக்கு 10 மணமகன் ஜாதகம் கொண்டு கொடுத்தும் பொருத்தம் இல்லை என்று சொல்லியே 4 வருடங்களைக் கடத்தி விட்டனர். 11வது மணமகனை பொருத்தம் உள்ளது என்று சொன்னார்கள். இன்னும் சிலருக்கு இப்போது திருமணம் செய்யக்கூடாது, இரண்டு வருடங்கள் கழித்துத் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி திருமணத்தை தடைப்படுத்துகின்றனர். இன்னும் சிலருக்கு செவ்வாய் தோசம், நாக தோசம் உள்ளது, பரிகாரம் செய்ய வேண்டுமென்று பணம் பறிக்கின்றனர். குரு பார்க்கிறான், சனி பார்க்கிறான் என்பதை, யாராவது நேரில் பார்த்து இருக்கிறார்களா? பார்க்க முடியுமா? நல்ல இணையரை இணைய விடாமல், ரஜ் தட்டுது, பொருத்தம் இல்லை என்று சொல்லி பல திருமணங்களை நிறுத்தி விடுகின்றனர். மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், எல்லாப் பொருத்தமும் இருக்கு என்று சோதிடர் சொல்லி மணமுடித்த இணையர்கள் வாழ பொருத்தம் இல்லை என்று சொல்லி மணவிலக்கு பெறுகின்றனர். எந்தப் பொருத்தமும் பார்க்காமல் சோதிடர்களிடம் செல்லாமல் மணமுடித்தவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். பொதுமக்களே திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை நிறுத்துங்கள். பழைமையிலிருந்தே மூடப்பழக்கத்தி-லிருந்து விடுபடுங்கள். சோதிடர்களே, தங்களிடம் வரும் ஜாதகங்களுக்கு சாதகமாக பொருத்தம் உள்ளது என்று எல்லா-வற்றிற்கும் சொல்லி உங்கள் வருமானத்தை பார்த்துக் கொள்ளுங்கள். திருமணத்தடையாக சோதிடர்கள் இருக்காதீர்கள்.

கருத்துகள்