ஹைக்கூ 500 ! நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.

ஹைக்கூ 500 ! நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை. நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : 132, விலை : ரூ. 100 கவிஞரின் 19ஆவது நூல் இது. 132 பக்கங்களைக் கொண்டது. புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலிற்கு அணிந்துரை கவிஞரின் ஞானகுரு தமிழ்த்தேனீ தகைசால் பேரா.இரா.மோகன் ஐயா வழங்கியுள்ளார். அணிந்துரை மில், " கவிஞரின் இரு கண்களாக மனிதநேயத்தையும் முற்போக்கு சிந்தனையும் குறிப்பிட்டுள்ளது அருமையானது மட்டுமல்ல கவிஞரை அடையாளப்படுத்துவதும் கூட." பெரும்பாலும் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா மோகன் ஐயா அவர்களின் அணிந்துரை தான் கவிஞர் ரவி அவர்களின் நூல்களில் அலங்கரிக்கப்படுகின்றன. இரா.மோ.வின் செல்லப்பிள்ளை பேராசிரியர் இரா.மோகன் என்றால் இரா.மோ.வின் செல்லப்பிள்ளை கவிஞர் இரா. இரவி எனலாம். 'முற்போக்குச் சிந்தனையின் வல்லினம்' என்று பேராசிரியர் கவிஞரைப் பாராட்டுகிறார். மற்றொரு அணிந்துரை புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது .அதில், கவிஞரின் கவிதைகள் "முகில் மூடா முழுமதியாய் நம்மை தன்வயப்படுத்துகிறது" என்கிறார். அருவி போல நம் மனதில் விழுகிறது கவிஞரின் துளிப்பா என்று புகழாரம் சூட்டுகிறார்." துளிப்பா முதல்வன் கவிஞர் இரா.இரவி என்ற புகழாரம் உண்மையே வெறும் புகழ்ச்சியில்லை. 'கொடுத்து சிவந்த கைகள் என்பார்கள் ரவி எழுதி சிவந்த கைகளை உடையவர்.' என்று புதுவைத் தமிழ்நெஞ்சன் குறிப்பிடுவது அருமையிலும் அருமை. துளிப்பா எழுதுபவனிடம் தொடங்கி படிப்பவனிடமே' முழுமையடைகிறது.' என்பதற்கு புதுவைத் தமிழ்நெஞ்சன் கூறிய சீன நண்பர்களின் கதை நெஞ்சை நெகிழச் செய்கிறது. இந்த நூலின் சிறப்பு என்னவென்றால், இது ஹைக்கூ போட்டிக்காக புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் முகநூலில் ஒளிப்படம் கொடுத்து அதற்கேற்ற ஹைக்கூ எழுதுதல். தலைப்பு கொடுத்து வைக்கப்பட்ட போட்டி அல்ல. ஒளிப்படம் கொடுத்து வைக்கப்பட்ட போட்டி. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளில் முதலிடம் பெற்றவர் நமது ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி அவர்கள். அவ்வாறு கவிஞர் எழுதிய கவிதைகளே இன்று நம்மிடம் 'ஹைக்கூ 500' சிறந்த நூலாக வெளிவந்துள்ளது. முகநூலில் வைக்கப்பட்ட இப்போட்டியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துளிப்பாவை எழுதினர். கவிஞர் ரவி மட்டுமே ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து கவிதைகளை பகிர்ந்துள்ளார். ஒரு காட்சி பன்முகத் தன்மையோடு பார்க்கப்படும்போது பல்வேறு கோணங்களில் எதிரொலிக்கப்படுகின்றது என்பதற்கு இந்நூல் ஒரு பதச் சான்றாகும். தமிழ்நெஞ்சன் தன்னுடைய அணிந்துரையில், "பரிதி இல்லாமல் உலக உயிர்கள் இல்லை அதுபோல் ரவி இல்லாமல் துளிப்பா வரலாறு இல்லை என்பது" முத்தான சொற்கள் மட்டுமன்று முத்திரை சொற்களும் கூட. என் உரையில் கவிஞர் போட்டிதான் வைத்தார்கள் பங்கேற்றேன். ஒளி படத்திற்கு துளிப்பா எழுதினேன் அவ்வளவுதான்! என்று மிக அடக்கமாக கூறியுள்ளது அவரது அவையடக்கத்தை வெளிப்படுத்துகிறது. "அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு" என்ற கூற்றின் கேட்ப, தமது சிந்தனைச் சிறகை விரித்து பறந்து உள்ளதால் தான் இன்று ஓங்கி உயர்ந்து நிற்கிறார் என்பது தமிழ் உலகம் அறியக்கூடிய ஒன்றாகும். இனி ஹைக்கூ 500 கவிதைகளைக் காண்போம். பெண்களின் முன்னேற்றம்: "வேண்டாம் ஊதுகுழல் வீசிவிட்டு ஏந்து பாடப்புத்தகம் " 'சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்ற பாரதியின் வரிகளுக்கேற்பவும், 'பெண்களுக்கு கல்வி வேண்டும் பேதமை நீங்குவதற்கே' என்ற பாரதிதாசனின் எழுச்சி முழக்கத்திற்கு ஏற்பவும் கவிஞர் இரவி வீறு கொண்டு எழுதியுள்ளார். 'வேண்டாம் ஊதுகுழல் வீசிவிடு' என்று பெண் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 'ஏந்து பாடப்புத்தகம்' என்கிறார். "வருந்தவில்லை இழந்தவைகளுக்கு மகிழ்கிறோம் இருப்பவைகளுக்கு இனிக்கின்றது வாழ்க்கை" இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட இருக்கின்றதை வைத்து திருப்தியாக இருப்பதே நிறைவான வாழ்க்கை. கையில் கட்டுவதற்கு கடிகாரம் இல்லையே என்று ஏங்குகிறவன் கையை இல்லாதவனைப் பார்த்து திருப்தி அடைந்து கொள்வது போல, இருப்பதைக் கொண்டு மகிழ்வுறு என்பதை இக்கவிதையில் கவிஞர் மையப்படுத்தி உள்ளார். " விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை துளிர்த்து மரமாகும்". தமிழ்ச்சமூகத்தில் நற்சிந்தனைக் கருத்துக்களை விதைத்து தமிழர்களின் நல்நெறிக்கு வித்திட்ட அறிஞர் பெருமக்கள் காலத்தால் மறைந்திருந்தாலும் இன்று அவர்களின் கருத்துக்கள் அறுவடை செய்யப்படுகின்றன. என்பதை அருமையாக எடுத்துரைத்துள்ளார் கவிஞர். "அறிந்திடுங்கள் மரம் வளர்ப்பு அறம் வளர்ப்பு" மண்ணிற்கும் மனிதனுக்கும் அரண் மரமாகும். மரம் இன்றி, மழை இல்லை! மழை இன்றி, உணவு இல்லை! உணவின்றி மனிதன் இல்லை! என்ற சங்கிலித்தொடர்ச்சியின் விதை மரமாகும். நாம் அறிந்த எத்தனையோ அறச்செயலல்களுக்கு மத்தியில் மரம் வளர்ப்பதே மகத்தான அறம் என்ற ஆழமான அறச் சிந்தனையை நம்மிடம் பதித்துச் செல்கிறார் கவிஞர். "காளைகளுக்கு கிடைத்ததுவிடுதலை மாணவக்காளைகளால்" ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவச் சமுதாயம் இளையசமுதாயம் போராடி வென்ற நிகழ்வைக் குறிப்பிடுகிறார் கவிஞர். தமது பண்பாட்டு மீட்சியை தமிழர்களின் வீர விளையாட்டைக் குறிப்பிடும்போது 'காளை' என்ற சொல்லாடலை இருபொருள் படச் சுவையாக கூறியுள்ளார். "அசைக்காதே காலை கொலுசொலியில் கூடல் தடைபடும் வண்டுகளுக்கு" சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவியைக் காண தேரில் விரைந்து வரும் பொழுது வழியில் பூஞ்சோலையில் வண்டுகள் ரீங்காரம் இடுவதைக் காண்கிறான் மணி ஓசையால் வண்டுகளின் இன்பம் கலைந்துவிடும் எனக்கருதி மணி ஓசை எழுப்பாமல் செய்துவிடுகிறான். அந்த சங்க இலக்கிய பாடலின் சிந்தனையை இந்தக் கவிதை நினைவு கூர்கிறது. "பெயர் வைத்தது யாரோ? சரியான ஆட்டத்திற்கு தப்பாட்டம் என்று"! சிந்தனைக்கு வித்திடும் கவிதை. நாமும் கேட்கத் தோன்றுகிறது ஏன் தப்பாட்டம்? சரியாகத்தானே ஆடுகிறார்கள் என்று. போகிற போக்கில் சொல்லிவிட்டு போவதுபோல் என்பார்களே அதுபோல சிந்தனை விதையைத் தூவி செல்கிறார் கவிஞர். "ஆணுக்குப்பெண் சளைத்தவள் அல்ல ஒலிக்கட்டும் பறை" "ஆணிற்குப் பெண் இளைப்பில்லை என்று கும்மியடி" என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. பாரதி வழிவந்த கவிஞரும் ஆணிற்கு பெண் சளைத்தவள் அல்ல என்று பறை கொட்ட சொல்கிறார். கவிஞரின் பெண் முன்னேற்றச் சிந்தனை வளம் கவிதையில் எதிரொலிக்கிறது. " தமிழை அழியாமல் காத்ததில் பெரும்பங்கு பனை ஓலைக்கு" ஏட்டுச் சுவடியில் அச்சேறிய எழுத்துக்கள் எல்லாம் காலம் கடந்து நின்றதால் தான் அரிய சங்க இலக்கியங்களை நம்மால் அறிய முடிந்தது. அடிப்படையான பனை ஓலையை கவிஞர் நன்றி மறவாது நவில்வது பாராட்டத்தக்கது. " மெல்லினம் அல்ல வல்லினம் பெண்" பெண்களை மென்மையானவள், பூ போன்றவள், பொன் போன்றவள், கொடி போன்றவள் என்ற அலங்கார வார்த்தைகள் எல்லாம் இனி வேண்டாம். அழுத்தமாகச் சொல்லுவோம் பெண் வலிமையானவள் என்று அறைகூவல் விடுக்கிறார் கவிஞர். பெண் முன்னேற்றச் சிந்தனை கவிஞரின் கவிதைகளில் கரைபுரண்டு ஓடுகிறது. "சிறந்தது வழிபாட்டை விட உதவுதல்" உண்மையில் மந்திரம் சொல்லும் உதடுகளை விட சேவை செய்திடும் கரங்களே சிறந்தது. மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டாகும் என்ற பொன்மொழியை சற்றே தமது பாணியில் தடம் பதித்துள்ளார் கவிஞர். "உழவன்வாழ்வில் ஏற்றம் வந்தா லே உண்மையான வளர்ச்சி" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் அவரைத் தொழுதுண்டு பின் செல்பவர் உழவர் உலகத்தின் அச்சாணி என்றார் வள்ளுவர் ஆனால், இன்று அந்த அச்சாணி முறிந்து போய் கிடக்கிறது என்ற உள்ளக்குமுறலை வெளிப்படுத்துகிறார் கவிஞர். "வல்லரசு ஆவது இருக்கட்டும் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து நல்லரசாகட்டும்" ஒரு நல்ல அரசு என்பது மக்களின் அடிப்படை தேவைகளைத் தீர்க்க வேண்டும். பிற நாட்டை வெற்றி கொண்டு வலிமையை பறைசாற்றுவததை விட தன் நாட்டு மக்களின் பசிப்பிணி தீர்த்து அவர்களது வளமான வாழ்விற்கு பாதுகாப்பு அளிப்பதே ஆகச் சிறந்த அரசு, என்பதை அருமையாகச் சுட்டிச் செல்கிறார் கவிஞர். " நோக்கம் பெரிது வேண்டாம் கவனச்சிதறல்" வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்பும் ஒருவன் எண்ணங்களை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் பாரதி 'எண்ணத்தை உயர்வு செய்' என்றான். வாழ்வில் உயர்ந்த நோக்கத்தோடு பயணம் செய்கையில் இடையில் தென்படும் காட்சிகளில் திசை மாறிவிடக்கூடாது. 'எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப இன்றைய இளைய சமுதாயம் முன்னேற்றப் பாதையில் கவனத்தோடு அடியெடுத்து வைப்பதற்கு காணல் காட்சிகள் தடையாக இருக்கக்கூடாது என்பதை தடம் பதித்துள்ளார் கவிஞர். " சுருங்கின எல்லைகள் சுருங்க வில்லை எண்ணங்கள் தமிழ்நாடு" வடவேங்கடம் முதல் தென்குமரி வரை உள்ள நாணி லத்து என்று தமிழகத்தின் எல்லைகளை விரித்துக் கூறுகிறது தொல்காப்பியம். இன்று மொழி முடக்கத்தால் ம எல்லைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அன்றிருந்த பரந்த தமிழகம் போலவே தமிழர்களும் பரந்த மனது காரர்கள். வருவோரை வாழவைக்கும் பண்பாளர்கள். தனக்கு சுருக்கிப் பிறருக்கு பெருக்கிக் கொடுக்கும் தயாள மனதுடையவர்கள். அதனையே இத்துளிப்பாவில் அருமையாகச் சுட்டிச்செல்கிறார் கவிஞர். " நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றார் காந்தி முதுகு வளைந்து நடுகிறார்கள்" இயல்பாய் நடக்கின்ற ஒரு நிகழ்வினை கவிஞர் தன் எண்ணத்திற்கேற்ப பொருத்தமாய் எழுதிச் சென்றிருப்பது அருமை.கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறும் தற்குறிப்பேற்ற அணி தென்படுகின்றது. வயலில் நாற்று நடும் பெண்களைப் பார்த்தால் மற்றவர்களுக்கு வேலை செய்கிறார்கள் என்று தெரியும். கவிஞரின் பார்வையில் காந்தியின் வார்த்தைகளை தென்படுவது மனம் கொள்ளத்தக்கது. " ஹைக்கூ விளம்பரத் தூதுவரின் தூக்கம்" அணில் குஞ்சின் தூக்கத்தைத் தான் கவிஞர் இங்ஙனம் குறிப்பிடுகிறார். புரியாதவர்கள் முழிப்பார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல் படம் பார்த்து கவிதை கூறுவது. முத்தாய்ப்பான மூன்று வரிகளை அடையாளமாக அணில் தம் உடம்பில் எப்போதும் கொண்டிருப்பதால், அணில் குஞ்சை விளம்பர தூதர் என சிறப்பித்தது பாராட்டத்தக்கதே!. "கற்றுக்கொள்ளுங்கள் கைவினைக் கலையை குருவியிடம்" ' கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்றார் பாரதி. அந்த கைவினைக் கலையை குருவியிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் கவிஞர். மனிதன்தான் எதையும் பிறரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். பறவைகள் அப்படி அல்ல. இயல்பாகவே அது கூட்டை திறம்பட வடிவமைக்கும் சிறந்த கட்டிட பொறியாளர் குருவி என்பது கவிஞரின் உற்று நோக்கும் திறனை நமக்கு உணர்த்துகிறது. "என்னவளே சைவம் என்றாயே பிறகு ஏன் அணிந்தாய் பட்டு" சரியான கேள்வி. பட்டாடை என்பது வெறும் பகட்டாடை மட்டுமன்று. பல உயிர்களைக் கொன்று கொள்ளப்பட்ட ஆடை என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர். சைவம் என்பதுகொல்லாமையே என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். இத்துளிப்பாக் கவிஞர். " உருவத்தில் பெரியது உண்பதில்லை அசைவம் யானை" ஊண் உண்டால் உடல் வளர்ச்சியடையும் என்று யார் சொன்னது என்ற கேள்விக்கான விடையை விளக்கி, அதற்குரிய கேள்வியை எல்லோர் மனதிலும் எழுப்பியுள்ளது நுட்பம். வினா எழுப்பி விடை தருபவர்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசமாக விடையிறுத்து வினா எழுப்பியது கவிஞரின் நுட்பமாகும். "மேய்ப்பான் இல்லாத ஆடுகள் திசை மாறிவிடும்" உன்னதமான வரிகள் ஒரு மாணவனை ஆசிரியர் நல்வழிப்படுத்துவது போல, ஒரு தொண்டனை தலைவன் நல்வழிப்படுத்துவது போல வாழ்வில் நெறிப்படுத்தும் நெறியாளர்கள் இல்லை என்றால் கரைகள் இல்லாத ஆறு காட்டாற்று வெள்ளமாக மாறுவது போல, மூக்கணாங்கயிறு இல்லாத காளை கட்டவிழ்த்து பாய்ந்தோடி அழிவிற்கு வித்திடுவது போல, வாழ்வு தடம் புரண்டு விடும் என்பதை அழகாக உவமையில் உணர்த்தியுள்ளார் கவிஞர். " பசியோடு இருந்தாலும் பசியாற்றி மகிழும் உன்னத உறவு தாய் " . 'தாய்' என்ற சொல்லுக்கு எத்தனையோ கவிதை வரிகள் உயர்வாக காட்டிச் சென்றாலும் உன்னதமான யதார்த்தமான வரிகள் அன்றாட வாழ்வில் அனைவரும் உணர்ந்த வரிகள். குழந்தைகளுக்குப் பசியாற்றி அதன் மூலம் பசியாறு பவளே தாய். என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை மட்டுமல்ல. மனம் கொள்ளத்தக்கதுமாகும். இன்றைய தமிழிலக்கிய உலகில் ஹைக்கூ கவிதையின் திலகமாய் திகழ்பவர் கவிஞர் இரா.இரவி. கணினி யுகத்தில் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தமது கவி மலர்களை இணையதளம் வலைதளம் வலைப்பூ என்று உலகத் தமிழர்களின் மனதில் மலர விட்டு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மகத்தான மனிதர் கவிஞர் ரவி என்றால் அது மிகையல்ல.

கருத்துகள்