இந்தி சுத்தமான மொழி, தேசிய மொழி என்று சொல்பவர்களுக்கு இந்தி நடிகர் ஒருவர் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.

இந்தி சுத்தமான மொழி, தேசிய மொழி என்று சொல்பவர்களுக்கு இந்தி நடிகர் ஒருவர் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார். அவர் சொன்னதில் .. உலகிலேயே சுத்தமான மொழி தமிழ்தான், இந்தி அல்ல என்று கூறியிருப்பதுதான்.ஹைலைட் இவரது பேச்சால் இந்தித் திரையுலகிலும் கூட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடிகர் பெயர் ஆயுஷ்மான் குரானா. சொந்த ஊர் சண்டிகர். இந்தித் திணிப்புக்கு எதிராக இவர் வலுவான குரல் கொடுத்துள்ளார். இந்தி பேசுவோர் அனைவரும் நிதானமாக யோசிக்க வேண்டும். பேசாதவர்களிடம் போய் பேசு பேசு என்று கட்டாயப்படுத்துவது தவறு என்றும் அவர் தலையில் குட்டியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராக இந்தி பேசும் ஒரு பிரபலமே வலுவான கருத்தை வைத்திருப்பது ஆச்சரியம் தருகிறது. அதை விட முக்கியமாக அவர் தமிழையும், திராவிட மொழிகளையும் தூக்கிப் பிடித்துப் பேசியுள்ளார். அது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. : "உங்களது மொழியை விரும்புவது நல்ல விஷயம்தான். அந்த மொழி உலகப் புகழ் பெற வேண்டும் என்று நினைப்பதும் கூட நல்ல விஷயம்தான். ஆனால் நம்ம மொழி மட்டும்தான் சிறந்தது என்ற எண்ணம் தவறானது மட்டுமல்ல. அது ஆபத்தானதும் கூட. இந்தியை கொண்டு போய் எப்படி தென்இந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும் நாம் கட்டாயப்படுத்த முடியும்?. அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத மொழி இந்தி. கலாச்சாரம், பாரம்பரியம் என்று நாம் சொல்வோமானால், தென்னிந்தியாவும், வட கிழக்கு இந்தியாவும் அதன் கலாச்சாரத்தையும், பாரம்பரித்தையும்தான் காப்பாற்ற வேண்டும். போற்ற வேண்டும். அங்கு இந்தி அந்நிய மொழி. இந்தி கலாச்சாரம் அங்கு அந்நியமானது. அதை எப்படி நாம் காக்க வேண்டும் என்று அவர்களிடம் போய்க் கூற முடியும்.?? இப்போதைய நமது முன்னுரிமை நாட்டை வளப்படுத்துவது, மேம்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்று கூறி ஒரு கலாச்சாரத்தைக் கொண்டு போய் இன்னொரு கலாச்சாரத்தில் திணிப்பதாக இருக்கக் கூடாது. காரணம் இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்களின் கூட்டமைப்பு. அது வலுவாக இருப்பதால்தான் இந்தியாவும் வலுவாக இருக்கிறது. அதை சீர்குலைக்க முயற்சிப்பதும், ஆதிக்கத்தை செலுத்த நினைப்பதும் அந்த அமைப்பை குலைத்து விடும். அது ஜனநாயகமும் அல்ல. தேசபக்தியுடன் நெஞ்சு நிமிர்த்தி பேசும் இந்தி மொழி விரும்பிகளில் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பெர்சிய, அரபு மொழிகளின் தாக்கத்தால் உருவான மொழிதான் இந்தி. உண்மையிலேயே நீங்கள் சுத்தமான மொழி பேச வேண்டுமானால் திராவிட மொழிகளைத்தான் நீங்கள் பேச வேண்டும். அவைதான் 100 சதவீத இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிக் கலப்பில்லாதவை அவைதான். தமிழ்தான் உலகிலேயே மிகவும் பழமையான செம்மொழி. எனவே இந்தி குறித்து பெருமை அடித்துக் கொள்வோர் தமிழைத்தான் கற்க வேண்டும். ஒரு இந்தி விரும்பியான நானே இதை மனதார சொல்கிறேன். இந்தி நாடு முழுவதும் பாப்புலராக இல்லாத நிலையில் அதை திணிக்க முயல்வது தவறானதாகும். இதை உணர வேண்டும். இந்தியாவில் இந்தி, ஆங்கிலம் உள்பட 23 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. அனைத்து மொழிகளையும் நாம் சமமாக, நியாயமாக மதிக்க வேண்டும்" என்று குரானா கூறியுள்ளார். குரானாவின் இந்த பேச்சுதான் தற்போது இந்தி மாநிலங்களில் வைரலாகியுள்ளதாம்.

கருத்துகள்