படித்ததில் பிடித்தது !.கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது !.கவிஞர் இரா.இரவி ! குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !* *அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !* நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். *எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்!* பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது. புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள். அதில் ஒருவன், வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே ! உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான். "எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . *அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.* மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். "ஐயா, போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா?" என்று கேட்டுவிட்டு நகர்ந்தான். *'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.* போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். *" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? "* என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் . அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் *இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.* இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . *அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.* பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது. *பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால் !* *உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில் மிருகபலத்தோடு இருப்போம்.!* *பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம்.* *பலவீனப்பட வேண்டாம் !*

கருத்துகள்

  1. சிறப்பான கதை

    மன உறுதியே உடலுறுதி என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக