வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !

வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி ! கலைவாணி என்பது உந்தன் இயற்பெயர் கலைஉலகிற்கு வாணியாகவே நீ வந்தாய்! கான சரஸ்வதி என்றும் அழைக்கப்பட்டாய் கானத்தை இனிமையான குரலாய் வழங்கினாய்! வேலூரில் பிறந்து வேலூருக்கு பெருமை சேர்த்தாய் வாணி ஜெயராம் என்ற பெயரால் உலகம் அறிந்தது! ஆபூர்வ ராகங்கள் பாடி தேசிய விருது பெற்றாய் அடுத்து சங்கராபரணம் பாடி தேசிய விருது பெற்றாய்! சுவாதி கிரணம் பாடி தேசிய விருது பெற்றாய் சுந்தரப்பாடல்களுக்காக மும்முறை தேசியவிருது பெற்றாய்! எண்ணிலடங்கா விருதுகள் பெற்றுக் குவித்தாய் எண்ணற்ற பாடல்கள் பாடி எல்லோரையும் கவர்ந்தாய்! கலைமாமணி விருதுபெற்று கானங்கள் இசைத்தாய் கலையரசர் தியாகராசர் வாழ்நாள் சாதனை விருது பெற்றாய்! மல்லிகை என் மன்னன் மயங்கும் என்று பாடி மதுரை மல்லிக்கு மங்காத புகழ் பல சேர்த்தாய் ! ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பாடலின் மூலம் நாட்டில் உள்ள அசைவ நேசர்களின் மனம் கவர்ந்தாய்! ‘ஏழு ஸ்வரங்கள்’ என்ற பாடலை இனிமையாகப் பாடினாய் ஏழு ஸ்வரங்களையும் உனக்கு அத்துபடி ஆக்கினாய் ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன்’ என்று பாடி நீ ரசிகர்கள் கேட்க கேட்க பாடல்கள் பாடித் தீர்த்தாய்! ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’ என்று பாடி எங்கள் எல்லோரின் உள்ளம் கொள்ளை கொண்டாய்! பலமொழிகளிலும் பல்லாயிரம் பாடல்கள் பாடினாய் பாடலால் பலரின் செவிகளில் புகுந்து நர்த்தனம் ஆடினாய்! வா வா பக்கம் வா என டிஸ்கோ பாடலும் பாடினாய் வளமான குரலால் பல பக்திப்பாடல்களும் பாடித் தீர்த்தாய்! உடலால் உலகை விட்டு மறைந்துவிட்ட போதும் உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்வாய் இல்லை மரணம்!

கருத்துகள்