படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! -கவிஞர் இனியன், அமெரிக்காவிலிருந்து (உலக உழைப்பாளர் நாள் மே 1)

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! -கவிஞர் இனியன், அமெரிக்காவிலிருந்து (உலக உழைப்பாளர் நாள் மே 1) உறுபெரும் புவிக்கோர் அச்சாணி* செருபகை விலகிச் செழித்திடவும் செழுமை நிலையாய்த் தங்கிடவும் ஒருவழி உலகில் உண்டென்றால் உழைப்பைத் தவிர வேறில்லை! உறுபெரும் புவிக்கோர் அச்சாணி உலகம் போற்றும் உழைப்பாளி! இருளினை ஒத்த வறுமையெலாம் இவர்தம் உழைப்பால் இலவாகும்! உருட்டுக் கட்டை இவராலே உலகத் தரத்தில் தாளாகும்! துரும்பும் இவரால் இரும்பாகும் துரத்தும் வறுமை தூளாகும்! கரும்புச் சக்கை அதிலிருந்து காகிதம் இங்கே உருவாகும்! எறும்பைப் போல உழைப்பவரால் என்றும் நமக்குத் திருவாகும்! அரும்பும் வியர்வைத் தளவாடம் அருமை நாட்டின் அரணாகும் திரும்பும் பக்கம் நமையெல்லாம் திகைக்க வைக்கும் திறனாகும்! துருத்தும் எலும்பின் உடம்போடு துணிகள் நாளும் நெய்கின்றார் திருத்தி வயலை உழுவதனால் தினைநெல் பெருகச் செய்கின்றார்! இருளில் மூழ்கி இருப்போரை இனிதாய் வாழச் செய்திடுவோம்! பொருளில் லாதவர் ஆகாமல் போற்றி அன்பைப் பெய்திடுவோம்! கருதி உழைப்போர் வறுமைக்குக் காரணம் எண்ணின் சிலவாகும் விரும்பிக் களையத் தவறிவிட்டால் விளையும் சிக்கல் பலவாகும்!

கருத்துகள்