இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நூல் வெளியீடு : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை – 641 001, பேச : 0422 2382614, பக்கங்கள் : 312, விலை : ரூ.250. ***** முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் புதிய தலைமுறை இதழில் வாரந்தோறும் வாசகர்கள் கேள்விக்கு விடை அளித்து வந்தார்கள். இதழில் வாராவாரம் படித்து இருந்தாலும் மொத்தமாக நூலாகப் பார்த்ததில், படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. சிறப்பாக பதிப்பித்து உள்ள விஜயா பதிப்பகத்திற்கு பாராட்டுகள். “‘நாம் பெற்ற அறிவைப் பகிர்ந்து கொள்ளும்போது தான் நம்முடைய அறிவும் பெருகி விரியும்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் காலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகக் காட்சி தரும் இனிய இறையன்பு என்ற இப்புத்தகத்தை வெளியிட்டுப் பெருமகிழ்ச்சி கொள்கிறது எங்கள் விஜயா பதிப்பகம்”. பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் அய்யா சொன்ன கருத்துக்கள் முற்றிலும் உண்மை. அறியாத பல தகவல்களை அறிந்துகொள்ளும் விதமாக நூல் உள்ளது. அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் மட்டுமல்ல, பொதுவான வாசகர்களுக்கு பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள உதவிடும் நூல். அறிவியல், வரலாறு, இலக்கியம், நீதி, கலை, கல்வி, சமூகம், இயற்கை, தத்துவம் என 9 பிரிவுகளாக பகுத்து வழங்கியது நூலின் சிறப்பு அம்சமாகும். நூலில் உள்ள எல்லா கேள்வி பதிலும் பயனுள்ளவை என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த கேள்வி-பதில்களை மட்டும் பதச்சோறாக வழங்கி உள்ளேன். ‘மற்றவை வெள்ளித்திரையில் காண்க’ என்பது போல மற்ற கேள்வி-பதில்களை நூலை வாங்கிப்படித்து அறிந்து கொள்ளுங்கள். வாசகர்களின் மனநிலையை அறிவுநிலையை உயர்மட்டத்திற்கு உயர்த்திச் செல்லும் ஏணியாக உள்ளது நூல். அனைத்துத் துறைகளிலும் இன்றைய அறிவியலின் அதிநுட்ப வேகம் மனிதகுலத்திற்கு வரமா? சாபமா? - முனைவர் இராம. முத்துக்குமரனார், கடலூர் சுத்தியாக இருக்கும்போது செதுக்கவும், சம்மட்டியாக மாறும்- போது உடைக்கவும் செய்கிற இரும்பாகவே எல்லாக் கண்டுபிடிப்பு-களும் இருக்கின்றன. நல்லவற்றிற்கு மட்டும், ஆக்கச்சக்திக்கு மட்டும் கண்டுபிடிப்பு-களை பயன்படுத்த வேண்டியது அறிவுள்ள மனித சமுதாயத்திற்கு அழகாகும். சினிமா மனதில் பதிவது போல் பாடம் பதிவதில்லையே, ஏன்? சு. ஆறுமுகம், கழுகுமலை திரைப்படத்தைப் போல பாடங்களையும் காட்சிப்படுத்திப் படித்தால் கட்டாயம் பதியும். உண்மை தான். மொட்டையாக மனப்பாடம் செய்வது மனதில் தங்காது. புரிந்து படித்தால் மனதில் தங்கும். வரலாறு படித்தால், அதில் வரும் நிகழ்வுகளை மனதில் காட்சிப்படுத்தி அசை போட்டுப் படித்தால் நினைவில் நிற்கும், மறக்காது. தானியங்களில் தங்களுக்குப் பிடித்தது? த. சிவாஜி மூக்கையா, தர்காஸ் மக்காச்சோளம். அதிக சிரமமின்றி அனைத்து இடங்களிலும் பயிரிட முடிகிறது. உண்மை தான். அனைத்து இடங்களிலும் பயிரிட முடிவதால் அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றது. விலை குறைவாகவும் சுவையாகவும் இருப்பதால் உடல்நலத்திற்கு நன்மை என்பதாலும் எல்லா வயதினரும் விரும்பி உண்கிறோம். கட்டு சோளக்கதிராகவும், உதிர்த்து வறுத்து ‘பாப்கான்’ என்ற பெயரிலும் ‘சுவீட்கான்’ என்ற பெயரிலும் எங்கும் பயன்பாட்டில் உள்ளது. பாப்கான் விற்காத திரையரங்கே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத் திரையரங்கிலும் கிடைக்கும். திரைப்படத்தின் இடைவேளையில் பாப்கான் சாப்பிட்டால் தான் திரைப்படம் பார்த்த திருப்தியே பலருக்கு வரும். எனக்கும் மிகவும் பிடித்த தானியம் மக்காச்சோளமே. மனிதனுக்கு வருவது போன்று, விலங்குகளுக்கும் கனவு வருமா? -பாரதி முருகன், மணலூர் கோட்டை வரும். அவை அந்த விலங்குகள் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். எதிர்பால் விலங்கு ஸ்லோமோசனில் நடனமாடுவதைப் போல அவை கனவு காண்பதில்லை. அப்படிப்பட்ட கனவுகள் மனிதர்களுக்கு மட்டுமே வருகின்றன. விலங்குகளுக்கு கனவு வரும் செய்தி நான் அறிந்ததில்லை. இந்தக் கேள்வி-பதில் படித்தபோது தான் அறிந்து கொண்டேன். இப்படி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ள தகவல் களஞ்சியமே இந்த நூல். ஸ்லோமோசன் கனவு மனிதர்களுக்கு வரக் காரணம் திரைப்படங்கள் பார்த்ததன் பாதிப்பு என்பது என் கருத்து. வெள்ளை உடை தேவதைகள் ஸ்லோமோசனில் வரும் காட்சியைப் பார்த்து பார்த்து மனிதர்களின் கனவுகளில் ஸ்லோமோசன் கனவு வருகின்றது. இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பங்கும் உண்டு. வளர்ந்துவரும் இளைய தலைமுறையினரிடம் நீங்கள், விட்டால் பரவாயில்லை’ என நினைக்கும் பழக்கம் எது? - டி. சந்திரன், ஈரோடு மின்னணு போதை. உண்மை தான். இன்றைய இளையதலைமுறையில் பலர் இரவு கண்விழித்து அலைபேசியில் பயனற்ற பொழுதுபோக்குகளை ரசித்து காலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை இழந்து விட்டனர். அலைபேசியும் ஒரு போதை என்றாகி விட்டது. எதையும் அளவோடு பயன்படுத்துவதே சிறப்பு. ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை கருத்தில் கவனத்தில் கொண்டு திருந்த வேண்டியது அவசர அவசியமாகும் இன்று. இனிய இறையன்பு பெயர் பொருத்தம் நன்று. இனிமை சேர்க்கும் நூல் இது. வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள். இந்தநூல் மதுரையில் ஜெயம் புக் சென்ட்ரில் தற்போது கிடைக்கின்றது.வெளியானபோது கிடைக்கவில்லை.உடன் இந்த நூலை அனுப்பி உதவிய திருமங்கலம் இறையன்பு நூலக நிறுவனர் இனியநண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி. --

கருத்துகள்