காக்கிச்சட்டை அப்பா! நூல் ஆசிரியர் : முனைவர் தனுஸ்கோடி லாவண்யசோபனா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி



 

காக்கிச்சட்டை அப்பா!

நூல் ஆசிரியர் : முனைவர் தனுஸ்கோடி லாவண்யசோபனா




  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  



வெளியீடு : குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை – 600 017.  பக்கங்கள் : 56, விலை : ரூ.50



******


திருக்குறளின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்தி பலருக்கும் புரிய வைக்கும் திருக்குறள் செம்மல் முனைவர் இரா. திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவி தனுஷ்கோடி லாவண்யசோபனா அவர்களின் முதல் நூல். முத்தாய்ப்பாக வந்துள்ளது. நூலாசிரியரின் சிறந்த கட்டுரைகளை தினமலரில் படித்து விட்டு பாராட்டி மின்னஞ்சல் அனுப்பினேன்.  நன்றியுரைத்து பதில் மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார்கள்.




மனைவி, தந்தையைப் பற்றி நூல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டவுடன் ஊக்கம் தந்து அணிந்துரைகள் பெற்று நூலாக்கி விட்ட முனைவர் இரா. திருநாவுக்கரசு அவர்களின் உயர்ந்த உள்ளத்திற்கு முதல் பாராட்டு.




இந்த நூல் படித்த முடித்தவுடன் இப்படி ஒரு நூல் எழுதிட நமக்கு ஒரு மகள் இல்லையே என உண்மையில் வருந்தினேன். எனக்கு இரண்டு மகன்கள் தான் உள்ளனர்.




பாசக்கார மகளின் பாராட்டு தோரணமாக நூல் அமைந்துள்ளது. நூலாசிரியர் பெயரில் அப்பா பெயர் முன்எழுத்தை, முன்எழுத்தாக மட்டும் போடாமல் அப்பா பெயரே தன் பெயருக்கு முன்னே எழுதிய பாசத்திற்கு பாராட்டுகள்.




காக்கிச்சட்டை அணிந்த காவல்துறையில் உள்ளவர்களின் இன்னல்களை, விடுப்பே இல்லாத துன்பத்தை, தேர்த்திருவிழாவில் கூட குடும்பத்துடன் கலந்து கொள்ள இயலாமல் பாதுகாப்பிற்கு சென்றுவிடும் காவல்துறையின் ஓய்வற்ற பணியினை கண்முன்னே கொண்டு வந்து விடுகிறார். இந்நூல் படிக்கும் அனைவருக்கும் காவல்துறையின் மீதான மதிப்பு கூடிவிடும்.




கவிதையும் கட்டுரையும் கலந்த நூல் சிறிய நூல் என்றாலும் பெரிய கருத்துக்களைக் கொண்ட நூல். அப்பா மகள் பாசத்தை நேசத்தை உணர்த்திடும் ஒப்பற்ற நூல். இதில் ஒரு வரி கூட மிகை எழுதவில்லை. வாழ்வில் நடந்த உண்மைகளை அப்படியே எழுதி இருப்பதால் படிக்கும் வாசகர்களும் அப்படியே ஒன்றிவிடுகிறோம். நூல் படிக்கும் வாசகர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரவர் அப்பா பற்றிய மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றது இந்நூல்.




முனைவர் திரு. திருநாவுக்கரசு இ.கா.ப. அவர்களின் "மாப்பிள்ளை உரை "உருக்கம். காவல் ஆணையர் அ.கா. விசுவநாதன், முனைவர் கோ. விசயராகவன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு மணிமகுடமாக அமைந்துள்ளன. குமரன் பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர். பாராட்டுகள். பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் :




“தனக்குக் கிடைக்காத சந்தோசங்கள் அனைத்தும் தன் பிள்ளைகளுக்குத் தரவேண்டும்” என்று எண்ணுவதிலும், அவர்களுக்-காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதிலும் இந்தியப் பெற்றோருக்கு ஈடுஇணை எங்கும் இல்லை. பாசமும், பந்தமும் பாரதத்தின் பிரதான பலம்.




 உண்மை தான் நம்மைப் போல குறிப்பாக தமிழர்களைப் போல பிள்ளைகளை நேசிப்பதில் பெற்றோர்கள் உயர்ந்த இடம் வகிக்கின்றனர்.




“ஒரு தந்தைக்கும் மகளுக்கும் ஆன உறவு சொல்லி விளங்காது, சொல்லில் அடங்காது! மகளுக்கும் தந்தைக்கும் ஆன உறவு அபரிமிதமான அன்பின் வெளிப்பாடு. பருவம் அடைந்ததும், தக்க தருணம் பார்த்து தாரம் என்னும் நிலைக்குச் சென்றாலும், மகளுக்கு தன் தந்தையிடம் மட்டும் தன் உரிமையும் குறைவதில்லை, உறவும் குறைவதில்லை, அன்னையிடம் கேட்டுக் கிடைக்காதவை எல்லாம் தந்தையிடம் சொன்னாலே கிடைத்துவிடும்”.




உண்மை தான். மகள் அம்மாவிடம் கேட்பாள், தர மறுத்தால் உடன் அப்பாவிடம் கேட்டுப் பெற்றுக் கொள்வாள். பெரும்பாலான அப்பாக்கள் தன் மகளை தன் தாயாகவே பார்க்கின்றனர். தாய்க்கு தர முடியாததை, மகளை, தாயாக நினைத்துத் தந்து விடுகின்றனர்.




நூல் முழுவதும் தந்தையுடன் கழிந்த நேரங்கள் கொஞ்சம், காரணம் காக்கிச்சட்டைப் பணி. நேரம் வாய்ப்பதே இல்லை, வாய்த்த நேரத்தை, பொன்னான நேரமாகக் கருதி பொற்காலமாக போற்றியதைக் குறிப்பிட்டுள்ளார்.  தந்தையுடன் நடந்த நிகழ்வுகளை பசுமரத்து ஆணி போல மனதில் பதிந்து வைத்து இருந்த காரணத்தால், தொகுத்து நூலாக்கி விட்டார். அனைத்து மகளுமே அவரவர் அப்பாவைப் பற்றி ஒரு நூல் எழுதுங்கள் என்ற வேண்டுகோளும் வைத்துள்ளார்.




“என் வயிற்றில், அவர் தோசையுடன் கறிக்குழம்பை சேர்த்து ஊட்டி விடும் சுவையே தனி தான்”.




அப்பாவுடன் இருசக்கர வாகனத்தில், மதுரையில், நான்கு மாசி வீதிகளிலும் சுற்றிவந்த நிகழ்வை எழுதி உள்ளார். புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை அப்பாவுடன் கண்டு ரசித்து மகிழந்ததை எழுதி உள்ளார்.




கவிதை வரிகள் சில உங்கள் பார்வைக்கு :


மனைவியின் மசக்கையில் கண்டுகொள்ளாத ஆண்கள் கூட

      மகளின் மசக்கையில் கண் சிமிட்டாமல் காவல் காப்பர்.


தந்தையில் இருந்து, தாத்தாவுக்கு அதிகரிப்பது

      வயது மட்டுமல்ல, பல மடங்கு பாசமும் தான்.


மூன்றெழுத்து ஒரு கவிதை ‘அம்மா’

      மூன்றெழுத்தில் ஒரு கடவுள் ‘அப்பா’.




அப்பாவை கடவுள் என்கிறார். அந்த அளவிற்கு அவரது அப்பா அன்பு செலுத்தி உள்ளார். பாசமழை பொழிந்துள்ளார். விரும்பிய படிப்பு படிக்க வைத்துள்ளார். திருமணத்திற்குப் பின்னும் படிக்க உதவி உள்ளனர். பேரன் பேத்திகளை பாசத்துடன் வளர்த்து உள்ளனர்.




குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். நமது நாடு குடும்பங்களால் வாழ்கிறது என்பார்கள். அப்பா-மகள் உறவு பற்றி, மேன்மை பற்றி இதுவரை வந்துள்ள நூல்களில் இந்த நூல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இந்த நூலின் மூலம் தன் தந்தைக்கு புகழ் மகுடம் சூட்டி உள்ளார். பாராட்டுகள்.நூல் ஆசிரியரின் அடுத்த நூலை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன் .அடுத்த நூல் தங்கள் கணவரைப் பற்றி எழுதுங்கள் .வாழ்த்துக்கள்  




கருத்துகள்