இல்லறம் இனிக்க! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
இல்லறம் இனிக்க!
நூல் ஆசிரியர் :

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப .


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
நேசம் பதிப்பகம், எண் : 9, ஜி.ஏ.ரோடு, சென்னை-600 021.  பேச : 94443 61136,
பக்கம் : 32, விலை : ரூ. 20.
******
      நாடு அறிந்த நல்ல பேச்சாளர் ; நல்ல எழுத்தாளர் ; நல்ல சிந்தனையாளர் ; நல்ல செயலாளர் ; முதன்மைச் செயலர் ; முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதிய இந்நூல் இரண்டு ஆண்டுகளில் நான்கு பதிப்பு வந்துவிட்டது.
      திருமண நிகழ்வுகளில் தாம்பூலப்பையில் இந்த நூலை இட்டு வழங்கலாம். ‘இல்லறம் இனிக்க’ வழி சொல்லி உள்ளார்.  மணமான ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல். இந்த நூலை வாங்கி ஆழமாகப் படித்து உணர்ந்தால் ‘மணவிலக்கு’ பெற வேண்டிய அவசியம் இருக்காது.
      திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் முதலில் கவிஞர் ; பிறகு தான் எழுத்தாளர். விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களிடம் முதன்முதலில் அச்சிட வேண்டியதும் கவிதை நூலைத்தான்.  இந்த நூல் கவித்துவமாக உள்ளது.  கவிதைகளும் உள்ளன.
      கையடக்க நூல் விலையும் மிகக்குறைவு.  இந்த விமர்சனம் வாசிக்கும் அனைவரும் வாங்கிப்படித்துப் பயன்பெற வேண்டிய சிறந்த நூல். பொருத்தமான படங்களுடன், உள் அச்சு, அட்டைப்பட வடிவமைபு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. நேசம் பதிப்பகத்திற்கு நேசம்மிக்க பாராட்டுக்கள்.  ஒரு நூல் என்ன செய்யும்? என்பதற்கு விடை சொல்லும் நல்ல நூல்.
      காதலித்துக் கரம்பிடித்த இணைகள் பலரும் விவாகரத்து ( மணவிலக்கு ) வேண்டி நீதிமன்ற வாயில்களில் காத்திருக்கும் அவலம் நடந்து வருகின்றது.  இந்த நூல் பல சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக உள்ளது.
      குடும்பம் என்பதற்கு விளக்கம் கூறும் விதமாக அமைந்துள்ள கவிதை.
      குடும்பம்!
      அன்பைக் கூர்மைப்படுத்தியது ;
      பாசத்தைப் பதப்படுத்தியது ;
      உடையை விரிவாக்கியது ;
      உழைப்பை முறைப்படுத்தியது ;
      மொழியை முழுமையாக்கியது ;
      உணவை சீராக்கியது ;
      வீட்டை அழகுபடுத்தது!
உண்மை தான். குடும்பம் என்ற ஒன்று தான் மனிதனை ஆற்றுப்படுத்தி மனிதனாக்கியது. திருமணம் வேறு ; இல்லறம் வேறு. திருமணம்-சடங்கு மட்டுமே. இல்லறமே – உண்மையான வாழ்வு.  இல்லறமே நல்லறம் என்பதை மிக அழகாக விளக்கி உள்ளார்.  ஒருவரை ஒருவர் புரிந்து மதித்து நடந்தால் இல்லறம் இனிக்கும்.
      “வாழ்நாள் முழுவதும் நாம் பிரியாமலிருக்கப் போகிறோம்” என்று இயற்கையின் முன் சபதம் எடுப்பதே திருமணத்தின் தத்துவார்த்தம்”.
      சீர்திருத்தத் திருமணங்களிலும் “இன்ப, துன்பங்களில் பிரியாமல் உடன் இருப்பேன்” என்று உறுதிமொழி எடுப்பார்கள். அதுபோல மணமானவர்கள் பிரியவே கூடாது என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரிவதற்கு இடம் தரக்கூடாது. பிரிய வேண்டும் என்ற எண்ணம் வராதவாறு இருவரும் நடந்து கொள்ள வேண்டும். இப்படி பல சிந்தனைகளை விதைத்துள்ளது இந்நூல்.
      கசக்கினாலும் மணப்பேன் என்று சொல்லுவதற்கு மலரும் ;
      கடித்தாலும் இனிப்பேன் என்பதற்குக் கற்கண்டும் ;
      கரைந்தாலும் நறுமணம் தருவேன் என்பதற்கு சந்தனமும்
திருமணத்திற்கு சாட்சியாக்கப்படுவது இருவருடைய சங்கற்பத்தை உணர்த்தவே!
      “மணமகன் மோதிரம் அணிவிப்பது - அதன் மூலம் நான் உன் இதயத்தையே தொடுகிறேன் என்று சூசகமாக உணர்த்துவதற்காகவே. மணமகன் அணிவிக்கும் தாலி - பெண்ணின் இதயத்தின் மேற்பரப்பில் அவனையே நினைவூட்டுவது இம்மண்ணின் மரபு. மோதிரம் அணிவித்தல், தாலி கட்டுதல் போன்றவற்றின் காரண காரியங்களை நன்கு விளக்கி உள்ளார்.
      “கணவனும் மனைவியும்” இந்த நொடியிலிருந்து புதிதாகப் பிறந்திருக்கிறோம் என்று முழுமையாய் உணரும் போது இல்லறம் மொட்டு விட துவங்கி.  “நான் ஏற்கனவே குறையாகப் பிறந்தவன்(ள்) ; நீயே என்னை முழுமையாக்குகிறாய்” என்று இருவரும் எண்ணும் போது அது மலராகிறது. 
ஒரு கணவன் முழுமையாவது மனைவியால்தான், ஒரு மனைவி முழுமையாவது கணவனால்தான். இந்த உண்மை இருவரும் புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும்.
திருமணம் முடிந்து முதல் முப்பது நாட்கள் சண்டை சச்சரவுகள் இன்றி அமைதியாக வாழ்க்கை நடத்தி விட்டால் அது முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நிலைக்கும், இனிக்கும் என்பதை நன்கு விளக்கி உள்ளார். திருமணமான இணைகள் முதல் முப்பது நாட்கள் கவனமாக வாழ்வது நல்லது. பின்னர் அந்த கவனமே தொடர்ந்து அமைதியாகவும், மகிழ்வாகவும் நிலைத்து விடும்.
“ஒருவர் கொதிக்கும் போது – மற்றவர் பனிக்கட்டியாக வேண்டும்.
ஒருவர் பாலாய் பொங்கினால் – மற்றவர் நீராய் இறங்க வேண்டும்”
உள்ளத்தால் ஒன்றி வாழ வழி எழுதி உள்ளார். இப்படி வாழ்க்கை பற்றிய புரிதலை உண்டாக்கும் நல்ல நூல். ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை உலகிற்கே உணர்த்தியவர்கள் தமிழர்கள்.  இன்று இல்லறம் பற்றிய புரிதல் இன்றி பலர் மணவிலக்கு பெற்று வருகின்றனர்.  புரிதல் இருந்தால் விலக்கு வரவே வராது.
ஆணாதிக்க சிந்தனையின்றி கணவன் மனைவிக்கு இல்லறப் பணியில் உதவிட வேண்டும்.  மனைவியும் பணக்கார வீட்டில் பிறந்து இருந்தாலும், ஏழை வீட்டில் மணமுடிக்க நேர்ந்து இருந்தாலும் பிறந்த வீட்டுப் பெருமை பேசி கணவனை நோகடிக்கக் கூடாது. இதுபோன்ற பல அறிவுரைகள் நூலில் உள்ளன.
“பணியாளர் இருந்தாலும் பாசத்தோடு ஆற்ற வேண்டிய பணிகள் உண்டு.  குழந்தையைக் குளிப்பாட்டுவது, கொஞ்சுவது, ஊட்டுவது” என்று பெற்றோர் பார்க்கும் பணிகளை அவர்களே கவனிப்பதே முறைமை.  என்ன தான் பெரிய அதிகாரியானாலும் நடைப்பயிற்சி செய்ய நேர்முக உதவியாளரை நியமிக்க முடியாதே!
பணம் கொட்டிக் கிடந்தாலும் பணியாளர் பலர் இருந்தாலும் குடும்பத்தில் பாசத்தோடு பார்க்க வேண்டிய பணிகளை பெற்றோரே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது சிறப்பு.  ‘இல்லறம் இனிக்க’ இறையன்பு அவர்களின் அறிவுரைகள், அறவுரைகள், நல உரைகள், நல் உரைகள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !