காக்க வேண்டும் நீதி! கவிஞர் இரா. இரவி !

காக்க வேண்டும் நீதி!


கவிஞர் இரா. இரவி !

நீதிதேவதையின் கண்கள் மூடியதற்கான காரணம்
நீதி என்பது யார் என்று பாராமல் வழங்கிட வேண்டும் !

கையில் தராசு தந்ததன் காரணம் என்ன ?
ஏற்ற இறக்கமின்றி சமமான தீர்ப்பு வேண்டும் !

தவறான தீர்ப்பு வழங்கியதற்காக பாண்டிய மன்னன்
தன்னுயிரை மாய்த்தான் ராணியும் மாய்ந்தாள் !

பசுவின் கன்றை தேர்க்காலேற்றி கொன்றதற்காக
பெற்ற மகனையும் கொன்றான் மனுநீதிச் சோழன் !

நீதி தவறாத மன்னர்கள் வாழ்ந்த பூமி
நீதியை உலகிற்கே உணர்த்திய மண் நம் மண் !

வழக்கறிஞர்களின் கருப்பு அங்கிக்கு காரணம்
வழக்கில் உள்ள இருட்டை வெளிச்சமாக்கிட வேண்டும்.!

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் வருகின்றன
வரலாற்றுப் பிழையான சில தீர்ப்புகளும் வருகின்றன !

மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதெ நீதிமன்றங்கள்
மக்களுக்கு எதிரான தீர்ப்புகள் வரக்கூடாது !

பெரும் பணக்காரர்களைக் காப்பதாக இருக்கக் கூடாது
பாமரர்களை ஏழைகளை காப்பதாக இருக்க வேண்டும் !

ஊழல் செய்தவர்களை தண்டித்த போதும்
ஊழல்வாதிகள் இன்னும் திருந்தவில்லை திருத்த வேண்டும் !

சமூகநீதியைக் காப்பதற்கு துணைபுரிய வேண்டும்
சமூகம் அமைதியாக வாழ்ந்திட உதவிட வேண்டும் !

நீதிமன்னர்கள் நீதியை நிலை நாட்டிய  நியாய மண் !
நீதி என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைத்திட வேண்டும் !

சட்டங்களும் திட்டங்களும் நலன் காக்க வேண்டும்
சாமானியனை சங்கடப்படுத்தும் சட்டம் வேண்டாம் !

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்
மதிப்பும் மாண்பும் காத்திட வேண்டும் !

நீதியரசர்களில் பல நேர்மையாளர்களும் உண்டு
நீதியரசர்களில் சில நேர்மையற்றவர்களும் உண்டு !

நீதியரசர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் வருகின்றன இன்று
நீதியரசர்கள் யாவரும் கண்ணியம் காத்திட வேண்டும் !

நீதியின் மாண்புதனை அனைவரும் அறிந்திட வேண்டும்
நீதி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவாக வேண்டும் !


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்