சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !






சின்னச் சின்ன வெளிச்சங்கள் !

ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .!
 விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை-600 098.  பக்கங்கள் : 136, விலை : ரூ. 40

*****

       முதன்மைச் செயலர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் 40-க்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருந்தாலும் “சின்னச் சின்ன வெளிச்சங்கள்” என்ற இந்த நூலில் எழுதியுள்ள சின்னக் கதைகள் பல்வேறு தொலைக்காட்சிகளில், குறுஞ்செய்திகளில், அலைபேசிகளில் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடாமல், அவர்கள் கூறுவது போல கூறியும், அவர்கள் எழுதுவது போல எழுதியும் விடுகின்றனர்.

       நூல் படித்த நமக்கே வருத்தமாக இருக்கும் போது, படைத்த படைப்பாளிக்கு, தன் பெயரின்றி மற்றவர் பயன்படுத்தும் போது வருத்தம் இருக்கும். ஆனால் அவர் இது குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் அடுத்த படைப்புகளில் கவனம் செலுத்துவார்.

       நூலின் பெயருக்கு ஏற்றபடி, சின்னச்சின்ன வெளிச்சங்கள் அறிவில் ஏற்பட்டு, அறியாமை இருள் நீக்கும் கதைகள், வாழ்வின் இயல்பை, நிலையாமையை, ஏற்றத்தாழ்வு எண்ணங்களை, மிகப்பெரிய தத்துவங்களை, மிகச்சிறிய கதையின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.  நூல் வாங்கி படித்துப் பாருங்கள்.  52 சிறுகதைகள், ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான ஓவியங்கள்.

 அடுத்த பதிப்பில் கதை வரும் பக்கத்திற்கு அருகே படத்தை அச்சிடுங்கள்.  இடது பக்கம் ஓவியம் என்றால், வலது பக்கம் கதை என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.  ஜுன் 2005-ல் வந்த இந்த நூல் ஜனவரி 2008-ல் நான்காம் பதிப்பு வந்தது.  தற்போது இன்னும் பல பதிப்புகள் வந்து இருக்கும்.  விற்பனையில் சாதனை படைத்த நூல்.

       கணினி யுகத்தில் எளிமையை யாரும் மதிப்பதில்லை.  ஆடம்பரத்தைத் தான் மதிக்கின்றனர்.  பகட்டுக்குத் தான் மரியாதை என்ற நடப்பியலை இயற்கையோடு ஒப்பிட்டு, அறிவியலும் சேர்த்து உணர்த்திடும் விதம், அருமை!

       இரவல்!

       “பௌர்ணமி இரவு நிலவொளியில் அங்கங்கே விருந்துகள்,
       கூட்டங்கள், கொண்டாட்டங்கள், முழு நிலவின் அழகை           வர்ணித்து
       கவியரங்குகள், பாடல்கள், அவனுக்குப் புரியவில்லை, பெரியவர்
       ஒருவரிடம் கேட்டான்! “ஞாயிறு தானே நிலவுக்கு ஒளி தருகிறது
       ஆனால் ஏன் இவர்கள் நிலவை இப்படிப் புகழ்கிறார்கள்?

       “தம்பி, ஒரே மாதிரி இருப்பவர்களுக்கு இந்த உலகில்
       மரியாதை கிடையாது.  தேய்ந்து கொண்டே இருப்பது,
       வளர்ந்து முழுமையாவதில் தான் இவர்களுக்கு ஆச்சரியம்
       மனிதர்களில் மட்டுமென்ன – இரவல் ஜொலிப்புகளுக்குத்
       தானே மதிப்பு”

       பொதுவாக ஒரு சாதனைக்கு, வெற்றிக்கு, புகழுக்கு, பரிசுக்கு, விருதுக்கு பலர் காரணமாக இருப்பார்கள்  கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றிக்கு அடையாளமாக ஒருவருக்கு சிறப்பு செய்வார்கள்.  அந்த ஒருவர் தன்னால் தான் எல்லாம் நிகழ்ந்தது என்ற அகந்தை கொள்வது தவறு என்ற உயர்ந்த கருத்தை உணர்த்திடும் கதை இதோ!.

       யார் காரணம்?     அரசன் தன் அரண்மனையில் வீற்றிருந்தான்.  அப்போது வெளிநாட்டுத் தூதர் கேட்டார், “இவ்வளவு சிறப்பாக உங்கள் ஆட்சி நடக்கிறதே, யார் காரணம்? என்று.  அரசன் ஒரு பானையை வரவழைத்தார்.  அதில் நீரூற்றும்படி பணித்தார். பானை நிரம்பியதும் நிறுத்தச் சொல்லி “இந்தப் பானை எந்தத் துளியில் நிறைந்த்து என்று உங்களால் கூற முடியுமா? அதுபோலத் தான் நிர்வாகத்தில் ஒவ்வொருவரும் இன்றியமையாதவர்களாய் இருந்தும் பணிகளைச் செய்தனர்” என்றார். முடியாட்சியாய் இருந்தாலும் அங்கு குடியாட்சி நடப்பதாய் பட்டது தூதருக்கு.

       நூல் ஆசிரியர் சுற்றுலாத் துறையின் செயலராக இருந்த போது அகில இந்திய அளவில் சுற்றுலாத் துறைக்கு விருது கிடைத்தது.  உடன் அவர் துணை இயக்குனர் தொடங்கி, காவலர் வரை அனைவருக்கும் கையொப்பமிட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  நானும் ஒரு சான்றிதழ் பெற்றேன். எழுதுவதோடு நின்று விடாமல், அதனை வாழ்வில் கடைபிடிக்கும் போது தான் ஒரு படைப்பாளி வெற்றி பெறுகின்றார்.

       ஏழை, பாமரன் என்றால் அடிப்பார்கள். பணக்காரன் ,பலமானவன்  என்றால் அடிக்க யோசிப்பார்கள்.  இது போன்ற எண்ணம் கூடாது, உலகில் பிறந்த அனைவரையும் சமமாகக் கருதிடும் எண்ணம் வேண்டும் என்பதை அழகாக உணர்த்திடும் கதை ஒன்று, மிக நன்று.

       அப்பாவிகள்!

       அந்த அறைக்குள் திடீரென தவளை கத்தும் சத்தம் கேட்டுத் திரும்பிய பொழுது தவளையைக் கவ்விய பாம்பு ஒன்று தட்டுப்பட்டது.  வேலையாளைக் கூவி உதவிக்கு அழைத்த போது, அவன் பாம்பை விரட்டிவிட்டுத் தவளையைச் சாகடித்தான்.

 அடிப்பதற்கு எளிதானது மட்டுமே ஆபத்தானதற்குப் பதிலாக அடிபட்டு வாழ்கிறது.

       எண்ணம் போல வாழ்க்கை என்பார்கள். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.  ஒரே பொருள், பார்வை பலவிதம் என்ற கருத்தையும் வலியுறுத்தும் விதமாக வடித்த கதை இதோ!.

       இலக்கு!

       குரு தன் சிஷ்யர்களிடம் ஒரு வைரம் பாய்ந்த தேக்கு மரத்தைக் காட்டி, இதனில் என்ன செய்யலாம்? என்று கேட்டார்.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பதில் சொன்னார்கள்.  அவன் மட்டும் மௌனமாக இருந்தான்.  “உனக்கு ஒன்றுமே தோன்றவில்லையா? என்று அவர் கேட்டார்.  அவன் சொன்னான், “இது இதனைப் பயன்படுத்துபவர்களைப் பொறுத்தது.  இழைக்க நினைத்தால் வேண்டிய மரச்சாமான்களாய்ப் பரிமளிக்கும்.  பிளக்க நினைத்தால் எரிந்து சாம்பலாகும், விறகாகும்.  வாழ்க்கையும் அப்படித்தான், இழைப்பதும், பிளப்பதும் அவரவர் கையில், என்றார்.

       வெள்ளை என்பதால் கர்வம் கொள்வதும் தவறு, கருப்பு என்பதால் கவலை கொள்வதும் தவறு.  இயல்பை இயல்பாக எண்ண வேண்டும், பிறரோடு ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை கொள்வதும் தவறு.  இப்படி பல சிந்தனைகளை தோற்றுவிக்கும் கதை இதோ!.  கற்பனை தான் என்றாலும் கருத்து மிக்கது.

       ஆதாரம்!

       மண்புழுவும், பூரானும் சந்திக்க நேர்ந்தது.  பூரான் மண்புழுவைப் பார்த்து, “எனக்கு எத்தனை கால்கள், பார்! உனக்கு ஒன்று கூட இல்லையே! என்று கேலி செய்தது.  அவ்வழியாக வந்த மனிதன் இவற்றின் பேச்சைக் கேட்டுவிட்டுப் பூரானைப் பார்த்துச் சொன்னான்.

  “உனக்கு இத்தனை கால்கள் இருந்தென்ன பிரயோஜனம். கடிப்பதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறாய்.  கால்கள் இல்லாவிட்டாலும் இந்த மண்புழு மண்ணைப் பதப்படுத்தி மகசூலைக் கூட்டுகிறதே” என்றார்.

       ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர்.  அரசர் பதவி துறந்து ஆண்டியானார்.  போதனையின்படி அவரும் நடந்தார்.  அதனால் தான் இன்றும் அவர் கடவுளாக வணங்கப்படுகிறார் .

இன்று சில சாமியார்கள்  ககபோக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ,வசூல் செய்து கொண்டு ஆசை வேண்டாம் என்று அருளுரை ஆற்றி வருகின்றனர்.  அவற்றை அசைபோட வைக்கும் கதை நன்று.

       பின்பற்றல்  அந்த வீட்டிற்கு நான் சென்றிருந்தேன் . சுவர் முழுவதும் வண்ண வண்ணமாய்ப் பல அளவுகளில் அவர் படங்கள்.  வழிந்தோடும் தாடியுடன் பிரசங்கிக்கும் தோரணைகளுடன்  யார் அவர் என விசாரித்து” என்ன போதித்தார்? என்று கேட்டேன்?

 “எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதீர்கள், வாழ்க்கை நிரந்தரமானதல்ல ; என்பதைத்தான் வாழும் வரை போதித்தார்” என்றார்கள்.  சேர்த்து வைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னவரின் படங்களைப் போய் சேகரிக்கிறார்களே!

       எள்ளல் சுவையுடன் பல்வேறு கருத்தை உணர்த்திடும் நல்ல நூல்.    படிக்கும் வாசகர்களுக்கு சிறு கதையின் மூலம் வாழ்வியல் நெறி கற்பிக்கும் நூல் .நேர்மையாய் உண்மையாய் இயல்பாய் வாழ் வழி சொல்லும் நூல் .  நூல் ஆசிரியர்  முதுமுனைவர்
வெ. இறையன்பு இ.ஆ.ப.அவர்களுக்கு பாராட்டுக்கள் .


கருத்துகள்