வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !

அப்துல்கலாம். அவரிடம் ‘மகிழ்வான நேரம் எது?’ என்று கேட்டபோது,

குடியரசு தலைவரான நேரத்தைக் குறிப்பிடவில்லை;

“போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு,

மிகவும் எடை குறைவான செயற்கைக்கால் செய்து கொடுத்து, எளிதாக

அதைக் கொண்டு அவர்கள் நடந்த போது மனம் மகிழ்ந்தேன்” என்றார்.

வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ பெரிதும் தேவை மனவளம். மனவளம் என்றதும் நினைவிற்கு வருபவர் விவேகானந்தர். அவர்தான் மனவளம் குறித்த அரிய பல கருத்துக்களை அருளியவர். “உனக்குள் எல்லா வலிமையும்  இருக்கிறது, உன்னால் எதையும் சாதிக்க முடியும், நீ தூய்மையானவனாகவும், வலிமையுள்ளவனாகவும் இருந்தால், நீ ஒருவனே உலகில் உள்ள அனைவருக்கும் சமமானவன் ஆவாய். உயிரே போனாலும், நீ நேர்மையுடன் இரு” என்று எழுதியதோடு, பேசியதோடு நில்லாமல் வாழ்விலும் கடைப்பிடித்தவர். முக்கடல் ஆர்ப்பரிக்கும் இடத்தில், அஞ்சாமல் நீந்தியே சென்று தியான மண்டபம் அடைந்தவர். விவேகானந்தரின் வைர வரிகள் அனைத்தும் மனவளம் சார்ந்தவை. இனை அனைத்தும் காந்தியடிகள், பாரதியார், அப்துல்கலாம் ஆகியோரின் வாழ்க்கைக்கு முற்றிலும் பொருந்தும்.

காந்தி, மாணவராக இருந்த போது, கல்வி அதிகாரி ஒருவர் ஆய்வுக்கு வந்தார். ஆசிரியரே, “சக மாணவர்களைப் பார்த்து எழுதி விடு” என்று வற்புறுத்திய போதும் எழுத மறுத்தார், பின்னாளில் நன்கொடையாக வந்த 50 பவுன் தங்க நகையை கஸ்தூரிபாய் கேட்ட போதும் காந்தியடிகள் தர மறுத்தார்; ‘பொதுத் தொண்டுக்காக வந்த கொடையை சொந்தத் தேவைக்கு எடுக்க கூடாது. உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும்’, என்று விளக்கிக் கூறினார். மனவலிமையுடனும், நேர்மையுடனும், உண்மையுடனும் வாழ்ந்ததால், இன்றும் காந்தியடிகள் உலக மக்களால் போற்றப்படுகிறார்.

வறுமையிற் செம்மை பாரதியார் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர். செல்லம்மாள் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வைத்த அரிசியை சிட்டுக்குருவிகளுக்குத்   தந்து மகிழ்ந்தவர். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’! என்று பாடியவர். அச்சமில்லை பாடலை உரக்கப்பாடினாலே பாடிவருக்கு அச்சம் அகன்று விடும். மன தைரியம் மிக்கவர்.

இந்தியாவின் கடைக்கோடியில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின்  முதற்குடிமகனாக உயர்ந்தவர், செய்தித்தாள் விற்றுப்படித்து தலைப்புச் செய்தியானவர் மாமனிதர் அப்துல்கலாம். அவரிடம் ‘மகிழ்வான நேரம் எது?’ என்று கேட்டபோது, குடியரசு தலைவரான நேரத்தைக் குறிப்பிடவில்லை; “போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, மிகவும் எடை குறைவான செயற்கைக்கால் செய்து கொடுத்து, எளிதாக அதைக் கொண்டு அவர்கள் நடந்த போது மனம் மகிழ்ந்தேன்” என்றார்.

இதுதான் மனவளம். ‘இயங்கிக்கொண்டே இரு என்பார் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சிந்தனையாளருமான வெ. இறையன்பு. அவர் “விதைத்துக்கொண்டே சென்றால், அறுவடை ஒருநாள் வரும், அதனால் இயங்கி கொண்டே இரு” என்பார். இன்றைய இளைஞர்கள் பலர் ஒரே ஒருமுறை முயற்சி செய்து விட்டு, தோல்வி என்றவுடன் மனம் தளர்ந்து விடுகின்றனர். விதை விதைத்து தண்ணீர் ஊற்றி விட்டு, மறுநாள் மண்ணைத்தோண்டி விதையை எடுத்துப் பார்த்து ‘முளைக்கவில்லையே’ என்று வருந்திய குரங்கைப் போலவே, இன்றைய இளைஞர்கள் பலர் ஒரே முயற்சியில் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணுகிறார்கள். தோல்வி கண்டு துவளாமல் தொடர்ந்து முயல்வதே மனவலிமை. வித்தகக் கவிஞர் பா. விஜய், ‘அவமானங்களை சேகரித்து வையுங்கள், அது முன்னோக்கி செலுத்தும் உந்து சக்தி’ என்பார்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்