கவிக்கோ கவிதைகளில் வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி !




கவிக்கோ கவிதைகளில் வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி !

கவிக்கோ என்ற பட்டத்திற்குப்  பொருத்தமானவர் 
கவிதை வடிப்பதில்  ' கோ 'வாக வலம் வந்தவர் !

கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்து 
கவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் !

கொண்ட கொள்கையில் குன்றென நினறவர் 
கொத்த அம்மி கொத்த சிற்பி எதற்கு ? என்றவர் !

திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை என்பதில் 
தன்னம்பிக்கையுடன் உறுதியாக நின்று வென்றவர் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தவர் 
சங்கத்தமிழில் ஆழந்த புலமைகள் பெற்றவர்     !

தீந்தமிழ் தியாகராசர் கல்லுரியில் பயின்றவர் 
தீந்தமிழை புதுக்கவிதையால் பரப்பி வென்றவர் !

எண்பது வயது வரை வாழ்ந்து சிறந்தவர் 
எண்ணிலடங்காக் கவிதைகள் வடித்து நிலைத்தவர் !

பன்மொழி அறிஞராகத் திகழ்ந்த வித்தகர் 
பால்வீதி என்ற முதல் கவிதை நூலை எழுதியவர் !

ஆலாபனை நூலிற்காக சாகித்ய அகாதமி பெற்றவர் 
அன்பால் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் !

பெரும் பேராசிரியர் இலக்குவனாரின் மாணவர் 
பல்வேறு விருதுகள் பெற்ற பெருமகனார் ! 

மீன் வலையா ? கொசு வலையா?  வரிகளால் 
மனத்தைக் கொள்ளைக்  கொண்ட கவிஞர் !

புதுக்கவிதையில் தனக்கென புதுப்பாதையிட்டவர் 
புரியும்படி எளிமையாக எழுதிக் குவித்த  சித்தர் !

குழந்தைகளை கிழித்து விடாதீர் என்று எழுதி 
கல்வியின் அவலத்தை தோல் உரித்தவர் !

ஹைக்கூ கவிதைகளும் எழுதி வழிகாட்டியவர் 
ஹைக்கூ கவிஞர்களுக்கு முன்னோடியானவர் !

மரபு புதிது ஹைக்கூ என கவிதைகளின் 
மூன்று வடிவங்களிலும் முத்திரைப் பதித்தவர் !

காலத்தால் அழியாத அற்புதக் கவிதைகளை 
கற்கண்டாகத் தந்து உள்ளம் ஈர்த்தவர் !

தமிழகத்தின் கலீல் ஜிப்ரான் என்ற பாராட்டை 
தன்னிகரிலாக் கவியரசு கண்ணதாசனிடம் பெற்றவர் !
.
உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும் 
உன்னதக் கவிதைகளில் வாழ்கிறார் என்றும் !

கருத்துகள்