முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் அவரது இணையத்தில் இருந்து .

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு 

இ .ஆ .ப. அவர்கள்  அவரது இணையத்தில் இருந்து .

-- 

.

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நேர்காணல்

மனிதனுக்குள்ளிருக்கும்
தெய்வீக உணர்வுகளை
கிளர்ந்தெழச் செய்வதே
என் இலக்கிய நோக்கம்!”

சேலம் மாவட்டம் காட்டூரில் பிறந்து, தனது குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். என்ற உயரிய கல்வியில் தேர்ச்சி பெற்றவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள். தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலாளராகப் பணிபுரியும் இறையன்பு, படிக்கிற காலத்திலேயே கவிதை மூலம் இலக்கியச் சோலையில் புகுந்தவர். ‘குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைவிட நீளமானவை’ என்று சொல்லும் இவர், பணியில் அப்பழுக்கற்ற அதிகாரி என்று அனைவராலும் பாராட்டப்படுகிறவர். எதையும் கலைநயத்தோடு செய்யும் இவர் எழுத்துலகில் சிந்தனைச் சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
நர்மதை அணை கட்டுவதற்காக அந்தப் பகுதியில் வசித்த பல்லாயிரம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட அந்தக் கண்ணீர் காட்சிகளைக் கண்டு, மனம் வெதும்பி ‘ஆத்தங்கரையோரம்’ என்ற அருமையான நாவலைப் படைத்தார். அதுபோக ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ உள்பட 19 தமிழ் நூல்களும், ‘Steps to Super Students’ என்ற ஆங்கில நூலையும் எழுதி இருக்கிறார். தொலைக்காட்சியில் பல மாதங்கள் இவர் பேசிய தன்னம்பிக்கை தரும் தத்துவார்த்தமான உரைகள் உயரத் துடிப்போர்க்கான ஏணிகள்! அவை ஆடியோக்களாக வெளிவந்திருக்கின்றன.
உலக இலக்கியம் தொடங்கி உள்ளூர் இலக்கியம் வரை கல்லுரிக் காலத்திலிருந்தே படித்துப் படித்து தனது பார்வையை விசாலப்படுத்திக் கொண்ட வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸிடம் ‘இனிய உதயம்’ நேர்காணலுக்காகச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
ஐ.ஏ.எஸ். என்பது அரசு எந்திரத்தின் அச்சாணி போன்றது. கலை, இலக்கியம் என்பது எந்த தடைகளுமின்றி சுதந்திரமாக இயங்குவது. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு தளங்களில் எவ்வாறு உங்களால் இயங்க முடிகிறது?
“நிர்வாகத்திற்கும் இலக்கியத்திற்கும் பொதுவாகத் தேவைப்படுவது ஈர இதயம். ஒவ்வொரு கோப்பிலும் ஓர் அபலையின் சோகக் காவியம் புதைந்திருக்கிறது என்கிற நினைப்பில் அதை அணுகும்போது, அதில் இடுகிற கையொப்பம் கல்வெட்டாக நிலைத்து நிற்கிறது. கருணையும் அன்பும் அடுத்தவர்களிடத்தில் தன்னை வைத்துப் பார்க்கின்ற தன்மையும் நிறையப் பெற்றவர்கள் தான் சிறந்த நிர்வாகிகளாகவும் உயர்ந்த இலக்கியவாதிகளாகவும் மிளிர்கிறார்கள். அரசு இயந்திரம் என்பது வாலாயமாக இயங்குகிற ஒரு சாதனம் மட்டுமல்லாமல், பல இடர்ப்பாடுகள் ஏற்படுகிறபோது விரைவாக இயங்கி இடிபாடுகளைக் குறைத்து, இன்னல்களை அகற்றி, துயரத்தைப் போக்குகிறப் பணியினை ஆற்றுகிற நுண்ணொழுங்கமைவு (Mechanism). அந்தக் காலத்தில் சிறந்த நிர்வாகிகளாகவும் இருந்தவர்கள் கலையிலும் இலக்கியத்திலும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். இலக்கியத்தில் ஈடுபாடும் நிர்வாகத்தில் சமதன்மையும் நிறைய பெற்ற அக்பர் போற்றப்படுகிற அளவிற்கு, நிர்வாகத்தை மட்டுமே போற்றிவந்த ஔரங்கசீப், காலத்தால் கௌரவிக்கப்படவில்லை.
எனவே நல்ல இலக்கிய நயம் படைத்தவர்கள் அரசாங்கத்தில் இடம் பெற்றிருப்பது சமூகத்திற்கும், இலக்கியத்திற்கும் செழுமையான பலன்களைத்தான் தரும். They are Complimentary, Not competitive in nature’.”
டேல் கார்னகி உலகின் மிகப் பெரிய சுயமுன்னேற்ற எழுத்தாளராக இருந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டது ஒரு நகைமுரண். இதிலிருந்தே சுய முன்னேற்ற எழுத்து என்பது ஏட்டுச் சுரைக்காய் என்று தோன்றுகிறது, பல சுயமுன்னேற்ற நூல்கள் எழுதியவர் என்ற முறையில் இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?
“சுயமுன்னேற்றம் என்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; அதிகமாகத் தட்டிக் கொடுப்பது, சமயத்தில் முதுகெலும்பையே முறித்துவிடும்.  செயற்கையாகச் சிரிக்கவும், இயல்புக்கு மாறாகப் புகழவும் நாசூக்காகக் கற்றுத் தருவது; தன் உண்மையான இயல்பை அழித்தால்தான் முன்னேற முடியும் என்று சூசகமாகச் சொல்லுவது. சுயமுன்னேற்ற எழுத்துக்களில் எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. மேற்கு செயற்கையான பூச்சையும், மெம்போக்கான பழக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அதிகம் படிப்பவர்களே நாகரிகத்தில் அங்கு உயர்ந்தவர்கள். கிழக்கு உள்மையத்தில் இருந்து செயல்படுவது. நம்மிடம் இருப்பது எல்லாம் சுயத்தை ஆராயும் முயற்சி. சுயம் ஏற்கெனவே அழகானது. அதை எட்டுவதுதான் உண்மையான முன்னேற்றம் என்று நம்புகிறவர்கள் நாம். அதனால்தான் சுயமுன்னேற்றத்தைப் போதிக்கிறவர்கள் சொந்த வாழ்வில் சோர்வு அடைந்துவிடுகிறார்கள். ‘பணக்காரர் ஆவது எப்படி?’ என்ற புத்தகத்தை எழுதியவர்கள் வாடகைக் காரில் வந்து போகிறார்கள். பல புத்தகங்களிலிருந்து திரட்டித் தாங்களே அனுபவித்ததைப்போல் எழுதுவது சுயமுன்னேற்ற எழுத்து.
நான் இதுவரை ஒரு சுயமுன்னேற்ற நூலைக்கூட எழுதியதில்லை. ஏனென்றால், எனக்கு அவற்றில் சம்மதம் இல்லை. நான் எழுதியவை ஆன்மிகம் சார்ந்த வாழ்வியல் குறித்த சில நூல்கள். அவற்றில் பெரும்பாலும் தேடலும் வாழ்க்கை குறித்த சில கேள்விகளும் தான் முன்வைக்கப்பட்டிருக்கும்.”
அரசு தான் எடுக்கும் முக்கிய முடிவுகள் தொடர்பாக சர்வக் கட்சியினரிடமும் ஆலோசனை கேட்கிறது. இந்த ஆலோசனையைத் தீவிர இலக்கியப் படைப்பாளிகளிடமும் கேட்கலாமே?
“சர்வக் கட்சியினரிடம் இருக்கின்ற குழுக்களைக் காட்டிலும் அதிகமாக தீவிர இலக்கியப் படைப்பாளிகளின் குழுக்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது அவர்களிடம் எப்படி ஆலோசனையைப் பெறமுடியும்? இரண்டாவதாக, தொடர்ந்து மக்களிடம் தொடர்பும், அவர்கள் பிரச்சினைகளைக் குறித்த ஆழ்ந்த சிந்தனையும், அவர்களைச் சம்மதிக்க வைக்கின்ற செல்வாக்கும் இருக்கிறவர்களை அழைத்து ஒரு பொதுப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால்; அதனால் மட்டும் ஒழுங்குப் பிரச்சனையோ, கலவரங்களோ வராமல் காப்பாற்ற முடியும். சிலநேரங்களில் அந்தப் பிரச்சினையின் பன்முகத் தன்மையின் வேறுசில பரிமாணங்களும் பிடிபடும் என்கிற அடிப்படையில், அப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் ‘Wisdom of the Crowd’ என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது. சிறந்த வல்லுநர்களிடம் இருந்து பெறுகிற மதிப்பீட்டைக காட்டிலும் பல சாமானியர்களிடமிருந்து பெறுகிற மதிப்பீடு சரியாக இருக்கும் என்பதுதான் அந்தப் புத்தகம் ஆய்வின்மூலம் நிரூபித்திருக்கின்ற உண்மை. மக்களாட்சி மகத்துவம் அந்த அடிப்படையிலேயே இருக்கின்றது.”
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இலக்கியவாதியாக இருப்பது சாதகமா? பாதகமா?
“இலக்கியவாதியாக யார் இருந்தாலும் அது அவர்கள் இருக்கின்ற துறைக்கும் சமூகத்திற்கும் சாதகம் என்றே நினைக்கின்றேன். மிகச்சிறந்த விஞ்ஞானிகளாகப் பரிமளித்த ஐன்ஸ்டீன் போன்றவர்களும் இலக்கியத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார்கள். தற்சமயம் பல சாதனைகளைப் படைத்துக் காட்டியிருக்கின்ற நம்முடைய ஜனாதிபதி மற்றும் அமர்த்தியா சென் ஆகியோரும் கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிச்சிறந்த ஈடுபாடு கொண்டவர்கள். இலக்கியம் ஒருவர் மனத்தை மென்மைப்படுத்துவதோடு அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும் செய்கிறது. அவர்கள் சார்ந்திருக்கின்ற துறையில் இன்னும் அதிகமான புரிதலும். தீர்க்கமான பார்வையும் அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. அது தவிர, அவர்கள் ஈடுபட்டிருக்கின்ற பணியில் அதிகமான கூர்மையோடு,  பாய்ச்சலோடு பயணம் செய்ய அது உதவியாக இருக்கிறது. எனவே, இலக்கியம் பற்றி பிரக்ஞையுடன் இருப்பது நிர்வாகத்திற்குச் சாதகமானதுதான்.”
சென்ற நூற்றாண்டு எழுத்தாளரான காஃப்கா தன்னுடைய விசாரணை நாவலில் அரசு எந்திரம், நீதிமன்றம், போலீஸ் துறை ஆகியவற்றை மிகவும் எள்ளல் செய்து எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளாகியும் இன்று வரை அந்த நிலை மாறியதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
“அரசு நீதிமன்றம், காவல்துறை ஆகிய அமைப்புகள் அனைத்துமே மக்களை சார்ந்தவைகள் தான். அரசு அதிகாரிகளும் மக்களிடமிருந்து தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் நூறு ஆண்டுகளாக அப்படியே இருக்கிறார்கள் என்று சொன்னால், மக்களும் அதே நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் பொருள். அதிகாரிகள் பதச்சோறாக இருக்கிறார்கள்; பொதுமக்கள் பொங்கல் பானையாக இருக்கிறார்கள்.”
நீங்கள் முன்பு தமிழரசு இதழில் ஒருமுறை அதிக பக்கங்ளைக் கொண்ட இலக்கிய மலர் குறைந்த விலையில் வெளிவரக் காரணமாக இருந்தீர்கள். அதன்பிறகு இன்றுவரை அப்படி ஒரு மலர் வரவேயில்லை. அது போன்ற முயற்சி திரும்ப வருமா?
“தமிழரசு’ இலக்கிய மலர் என்பது, அரசு மக்களுக்குச் சரியான இலக்கியத்தை அடையாளம் காட்ட வேண்டும் என்கிற கடமையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பரிசோதனை முயற்சி. அந்த முயற்சி பாராட்டப்பட்டிருந்தால் அதுபோன்ற மலர்களின் வரவு தொடர்ந்திருக்கும். ஆனால் அதுகுறித்து பெரிய அளவில் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இருந்தாலும் சமீபத்தில் ஒரு பதிப்பாளர் என்னைச் சந்தித்து அதனைத் தான் பிரசுரிக்க விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வேண்டுமென்றும் கேட்டார். முதல்முறையாக அரசு வெளியிட்ட ஒரு புத்தகத்தை தனியார் ஒருவர் பதிப்பிக்க அனுமதி கேட்பதே அம்மலருக்குக் கிடைத்த வெகுமதி என்று நினைக்கிறேன். தற்சமயம் ‘தமிழரசு’  இதழின் பொறுப்பில் நான் இல்லை. எனவே அப்படி ஒரு மலரைக் கொண்டுவருகிற பொறுப்பு என்னிடம் இல்லை.  இருந்தாலும், இதைக காட்டிலும் சிறந்த இலக்கிய மலர் ஒன்றைக் காலம் உருவாக்கித் தரும் என்று நம்புகிறேன்.”
நீங்கள் இதுவரை நிறைய எழுதியிருக்கிறீர்கள். அது உங்களுக்கு மனநிறைவைத் தந்திருக்கிறதா?
“இதுவரை நான் எழுதியவற்றில் ஆத்தங்கரையோரம், வாழ்க்கையே ஒரு வழிபாடு ஆகிய இரண்டு நூல்களைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். மற்றவை எல்லாம் பல்வேறு இடங்களில் நான் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு. இன்னும் மனநிறைவு ஏற்படுகிற அளவிற்கு நான் எழுதியதாகக் கருதவில்லை, மனநிறைவு ஏற்பட்டு விட்டால் எழுதுவதை நிறுத்திவிடுவேன்.”
முன்பெல்லாம் மருத்துவம், பொறியியல் போன்ற பட்டப் படிப்புகளுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு இலவச இருக்கை ஒதுக்கப்பட்டு வந்தது. இடையில் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அது புகழ், பணம் போன்ற வெளிச்சங்கள் இன்றி இயங்கிக் கொண்டிருந்த படைப்பாளிகளுக்குப் பேருதவியாக இருந்தது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீங்கள் அதைத் திரும்பக் கொண்டுவர முயற்சி செய்வீர்களா?
“தமிழ் எழுத்தாளர்களின் வாரிசுகளுக்கு இருந்த இடஒதுக்கீடு அரசால் தன்னிச்சையாய நிறுத்தப்படவில்லை. ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றக் குழு 1.11.2002 அன்று உடல் ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்களின் வாரிசுகள், படைவீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு மட்டுமே சிறப்பு இடஒதுக்கீடு வழங்க முடியும் என்றும்;  வேறுவகையினருக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியது. இப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இத்தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளது. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள பிரச்சினையின் மீது கருத்து கூறுவது, உங்களையும் என்னையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்துவிடும் என்பதால், இது பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது.”
தற்போதைய நவீன இலக்கியப் போக்குகள் குறித்து உங்கள் பார்வை என்ன?
“வெகுஜனப் பத்திரிகைகள்கூட தீவிர இலக்கியத்தை நாடுகின்ற அளவிற்குச் செறிவையும் ஆர்வத்தையும் நவீன இலக்கியம் ஏற்படுத்தியிருக்கிறது. புதிய புதிய சொல்லாக்கங்களும் சொற்றொடர்களும் தமிழுக்கு அவற்றால் கிடைத்திருக்கின்றன. தமிழின் வீச்சை அடுத்த கட்டத்திற்கு அவை அழைத்துச் சென்றிருக்கின்றன.”
திரைப்படத்தில் உங்களுக்கு இலக்கியத்தைப்போல ஈடுபாடு உண்டா?
“வெளிநாடுகளில் சிறந்த புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்படுவதுண்டு. திரைப்படமும் இலக்கியத்தைக் காட்சிப் படுத்துவதாக வங்காளம், ஹிந்தி போன்ற மொழிகளில் கலை நீட்சியாகப் பரிமளித்திருப்பதை அறிய முடியும். தமிழில் இலக்கியத்திற்கும், திரைப்படத்திற்குமான இடைவெளி பெரிதாக இருக்கின்றது. திரைப்படத்திற்கென்று கதை உருவாக்கப்படுகிதே தவிர கதையைத் திரைப்படமாக்குவது என்பது குறைந்து வருகிறது. நல்ல திரைப்படம் ஒரு புத்தகத்தை வாசித்த திருப்தியையும், கவிதையை நுகர்ந்த மகிழ்ச்சியையும், ஓர் ஓவியத்தைக் கண்ட நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதோடு, அதைக் குறித்தே ஒரு வாரமேனும் சிந்தித்திருக்கச் செய்யும் ஆற்றல் பெற்றதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திரைப்படங்களில் நான் அமிழ்ந்து போவதுண்டு.”
தற்கால நவீன கவிதை எழுதுபவர்களில் தங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?
“சிறப்பாக இருக்கும் எல்லாக் கதைகளும் நேசிப்புக்குரியன. முகம் தெரியாமல் கவிதைகளை நேசிக்க முடியும். இருந்தாலும் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு இயங்கி வருகின்ற வசந்த் செந்தில் நல்ல கவிதைகளை எழுதி வருகிறார். வேறொரு துறையில் இருந்து தமிழ் இலக்கியத்தின்மீது அவர் காட்டுகிற ஆர்வமும், அதறகுப் பங்களிப்பு செய்யவேண்டுமென்ற அவரின் முனைப்பும் பாராட்டுதலுக்குரியது.”
அரசாங்கத்தின் உயரிய பதவி வகித்தவர்கள் தங்களுடைய ஓய்வுக்குப்பின் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், தாங்கள் பதவி வகித்த காலங்களில் நடந்த முறைகேடுகளை பற்றியும் எழுதுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?
“ஓய்வு பெறுகிறவரை நாம் ஆற்றுகிற பணி அரசின் செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டதான பொருளையே முன்வைக்கும். ஒருவேளை அரசின் போக்கிற்கேற்ப செயல்படப் பிடிக்காமல் பணியிலிருந்து விலகினால்  அப்படிப்பட்ட விமர்சனத்தைக் குறிப்பிட்ட காரணங்கள் பின்னணி ஆகியவற்றுடன் முன்வைப்பது நியாயம். பதவி வகிக்கிற காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய பங்களிப்பையும் அதில் சேர்த்துவிட்டு, பிறகு சுதந்திர மனிதர்களாகச் சுற்றித் திரிவது சரியான கோட்பாடாக இருக்கமுடியாது. ஆனால், அதே நேரத்தில் பொதுவாக அரசு நடைமுறைகளை பற்றி Satire ஆகவோ, Parody ஆகவோ புனைவு இலக்கியம் படைத்தால் அதைக் குறை சொல்ல முடியாது”
எதிர்காலத்தில் படைப்பிலக்கியம் எழுதும் எண்ணமுண்டா?
“இனி படைப்பிலக்கியத்தில் தான் ஈடுபடுவது என்று நினைத்திருக்கின்றேன். ஒரு சிறுகதைத் தொகுப்பும், சாகாவரம் என்கிற நாவலும் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன”
இலக்கியவாதிகள், இதழியல் வாதிகள் எவ்வாறு வேறுபடுகிறார்கள்?
“இலக்கியவாதிகள் அடுத்தத் தலைமுறைக்காக எழுதுபவர்கள். இதழியல்வாதிகள் அன்றாட வாசகர்களுக்காக எழுதுபவர்கள். இதழியல் என்பது கால நெருக்கடியையும், பரபரப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. இதழியல் வாதிகள் பலர் இலக்கியவாதிகளாகவும் முகிழ்த்திருக்கிறார்கள்.”
சினிமா, தொலைகாட்சி ஊடகங்களால் வாசிப்புத் தன்மை குறைந்து வருகிறதா?
“திரைப்படம். தொலைக்காட்சி ஆகியவற்றைக் காட்டிலும் இணையம் அதிகமாக வாசிக்கும் தன்மையைக் குறைத்து வருகிறது. ஆனால் இவை தீவிர வாசகர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சராசரி வாசகர்கள் பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்கள். அவர்களுக்குப் படிப்பதைவிடப் பார்ப்பதே எளிது என்கிற காரணத்தால், இந்த ஊடகங்களின் ஆக்கிரமிப்பு அவர்களை எளிதில் வசப்படுத்திவிடுகிறது. இதனை அரசு கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் வாசகர் வட்டங்களை உருவாக்க வேண்டும். ஊர்கள்தோறும் புத்தகத் திருவிழாக்கள் மறுபடியும் கிராமந் தோறும் வாசக சாலைகள் ஏற்படுத்த வேண்டும். எல்லா ஊடகங்களிலும் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒரு மணிநேரம் புத்தகங்களைப் பற்றிப் பேசி, அலச நேரம் ஒதுக்க வேண்டும். இவற்றைச் செய்தால் வாசிப்பின் தன்மையும் எண்ணிக்கையும் அதிகமாகும்.”
ஆத்தங்கரையோரம் என்றொரு நாவல் எழுதினீர்கள். அந்தக் களம் நர்மதை ஆற்றின் கரையோர மக்களைப் பற்றியது. இந்த நாவலை எழுத உங்களைத் தூண்டிய சம்பவம் எது?அந்தச் சம்பவம் நடைபெறுமபோது நீங்கள் அங்கு இருந்தீர்களா?
“நர்மதை ஆற்றங்கரையில் இருக்கும் பழங்குடியின மக்களைப் பற்றி படிப்தற்கும், அவர்கள் இடம்பெயர்வது பற்றிய பிரச்சினைகளை குறித்து ஆய்வு செய்வதற்கும் 1988-ஆம் ஆண்டு, நவமபர் மாதம் நான் அங்கே சென்றிருந்தேன். மேதா பட்கர் போன்றவர்களிடமும், அக்ரானி, அக்கல்குவா, செந்தூர் ஆகிய கிராமத்தினருடனும் பழகுகிற வாய்ப்பும், அவர்களிடம் தங்கி அவர்கள் உணவையும். உணர்வையும் பகிர்ந்து கொள்கிற சூழ்நிலையும் எனக்குக் கிடைத்தன. சில பழங்குடியின மக்கள் அலிராஜ்பூர் பகுதியில் இருந்து இடம் பெயர்க்கப்பட்டு புதிய இடத்தில் குடிபெயர்ந்திருக்கிறார்கள். அந்த இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வசதிகளையும் நான் பார்க்க நேர்ந்தது. நர்மதை நதிக்கரையோரம் மிகப்பெரிய சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருந்ததையும், பரிசல் ஒன்றின் மூலமாக, பேரலைகளுக்கு நடுவே நர்மதையைக் கடந்த அனுபவமும் அப்போது எனக்கு ஏற்பட்டது. 2004-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு, அந்தப் பகுதிக்குத் தேர்தல் பார்வையாளராகப் பணியாற்றச் சென்றிருந்தபோது அந்த கிராமங்கள் எதுவும் என் கண்ணில் தென்படவில்லை. அவை அனைத்துமே அணை கட்டப்பட்டதால் நீரில் மூழ்கிவிட்டன. இடம் பெயர்த்துக் கட்டப்பட்டிருந்த சிவன் கோவிலுக்குச் சென்றேன். அணைக்கட்டுப் பகுதிக்கும் சென்றேன். அந்த அணையின் நீர்மட்டம் உயர என் கண்ணீர்த் துளியும் காரணமாக இருந்தது. அங்கே செந்தூரில் எனக்குப் பரிச்சயமான ஒருமுகம் கூடத் தென்படவில்லை. நாகரிகச் சூழலில் சிக்கி அவர்கள் எங்கே காணாமல் போனார்கள் என்ற சுவடுகூடத் தெரியாமல் அந்தப் புதிய அணை உயரமாக எழும்பி நின்றிருந்தது.”
தங்கள் இலக்கிய பயணத்தின் நோக்கம் குறித்து?
“மேன்மையான மனிதர்களையும், கம்பீரமான சூழலையும், சுயநலமற்ற கடும் உழைப்பாளிகளையும் படைத்துக் காட்டுவதும்; அவற்றை வாசிப்பவர்கள் மனதில் தாங்களும் அதைப்போல் ஓரளவேனும் மாறவேண்டும் என்கின்ற உத்வேகத்தை ஏற்படுத்துவதும்; சமூகத்தில் இன்னும் கறைபடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற மகத்துவம் பெற்ற கண்ணியவான்களைக் குறியீடுகளாக்கி, அவறின்மூலம் வாழ்வில் நம்பிக்கை ஏற்படச் செய்வதும்; ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் இருக்கின்ற அழுக்குகளை அகற்றிவிட்டு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு தீவிரமாக நடைபோட வைப்பதும்; ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீக உணர்வுளைக் கிளர்ந்தெழச் செய்வதும்தான் என்னுடைய இலக்கியப் பயணத்தின் நோக்கம்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !