முகநூலில் படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !

முகநூலில் படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !
தமிழிசைப்பண்கள்
**************************************************
உலகின் முதல் இசை
தமிழிசையே!!
***********************************************
இசைத்தமிழின் தொன்மை - 33
***********************************************
*************************************
பழந்தமிழிசையில் பண்கள்
**********************************

ஆற்றுப்படை நூல்கள்

சிறுபாணாற்றுப்படை
********************************************
நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பட்ட
சிறுபாணாற்றுப்படை
269 அடிகளைக் கொண்டுள்ளது.

ஓவியர் குடியில் பிறந்த நல்லியக்கோடன்
பாட்டுடைத் தலைவன் ஆவான்.

சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை,
நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

பெரும்பாணாற்றுப்படையை விட அளவால்
சிறியது என்பதால் இப்பெயர் பெற்றது என்பதும் பொருந்தும்.

இதில் சீறியாழின் உருவ அமைப்பு அழகான,
உவமைகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

நல்லியக்கோடன் நாட்டு வளமும், மக்கள் வாழ்வுச் சிறப்பும், விருந்தோம்பும் பண்பும் காட்டப்பட்டுள்ளன.

கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டிருத்தலும், மூவேந்தர் நாடுகள்
வருணிக்கப்பட்டிருத்தலும் இந்நூலின்
வரலாற்றுத் தன்மைக்குச் சான்றாகும்.

நல்லியக் கோடன், கடையெழு வள்ளல்கள் எழுவரும்
தாங்கிய ஈகையாகிய செவ்விய நுகத்தைத் தான் ஒருவனே தாங்கியதாகப் புலவர் புகழ்வார்.

பாணனுடைய வறுமை நிலை நெஞ்சை உருக்கும்
வகையில் விளக்கப்படுகிறது.

நல்லியக்கோடனைக் காண்பதற்கு முன், நாய் தான் அண்மையில் ஈன்ற குட்டிகள் பாலினை உண்ணுதலை தன் பசியின் மிகுதியால் பொறுக்கவியலாமல் குரைக்கின்ற புன்மையினையுடைய அடுக்களை;

அத்துடன் கூரையிலிருந்து இற்று சுவர்மீது வீழ்ந்து கிடக்கும் கழிகள்;

அச்சுவரில் தோன்றிய கறையான் அரித்துச் சேர்த்த புழுதியிடத்துக் காளான் பூத்துக்கிடக்கும் அட்டில்;

இத்தகைய வறுமைச்சூழலில், எங்களின் வயிற்றுப்பசியினைப் போக்க, இளைத்த உடலையுடைய கிணைமகள் குப்பையில் நின்ற வேளைக்கீரையைப் கிள்ளி வந்து உப்பில்லாமல் வேக வைத்துப் பார்ப்போர் பழிப்பர் என்று நாணிக் கதவடைத்து எம் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டோம்.

இப்படிப்பட்ட எம் கொடிய வறுமையினைப் போக்கி கொலைத்தொழில் மிக்க சிறுகண் யானையினையும்
பெரிய தேரினையும் பெற்று யாம் அந்நல்லியக்கோடன் அரண்மனையிலிருந்து வருகின்றோம் என்கின்றான்.
(சிறுபாண்.129-140)

பாணரின் அடுக்களையில் நாய்க்குட்டி ஈன்றுள்ளதையும்,
கண்ணும் திறவாத அதன் குட்டிகள் பாலில்லாத
வறுமுலையைப் பற்றி இழுத்ததனால்
துன்பம் தாளாது தாய் நாய் குரைத்தலையும் புலவர்
பதிவு செய்திருக்கின்றார்.

“திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்”

(குருளை = குட்டி ; நோனாது = பொறுக்காமல்;
புனிற்று = அண்மையில் குட்டியீன்ற;
புல்லென் = பொலிவு அற்ற; அட்டில் = அடுக்களை)

பாணர் குடும்பப் பெண் குப்பையில் முளைத்த
வேளைக் கீரையைக் கொய்து கொண்டு வந்து,
நீரை உலையாக ஏற்றி அதில் அதை வேகவைத்து,
அதனைப் பிறர் காணாது கதவை அடைத்துத்
தன் சுற்றத்தோடு உண்ணும் அவலத்தை,
புலவர் அழகாகப் படம் பிடித்துள்ளார்.

விறலியின் மேனியழகினை அழகிய உவமைகளால்
புலவர் பாராட்டுவது கற்போரைக் கவருகின்றது.

“தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை”
என்று மதுரையைப் பாராட்டுவார் புலவர்.

ஒய்மான் நாட்டை ( திண்டிவனம் ) உள்ளிட்ட,
தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக வேண்டும்
என்று எண்ணுகின்றனர்.

அவனுடைய ஆட்சிக்குள் மாவிலங்கை, எயிற்பட்டிணம்,
வேலூர், ஆமூர் போன்ற நகரங்கள் அடங்கியிருந்தன.

மாவிலங்கை இவனது தலைநகரம்.
நல்லியக்கோடன், ஒய்மான் நல்லியக் கோடன்
என்றும் இவன் பெயர் வழங்கப்படுகிறது.

“மாவிலங்கை என்னும் சிறந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு செங்கோல் செலுத்திய ஒவியங்குடி என்னும் சிறந்த அரசர் குடியிற் தோன்றி சிறப்பான அறிவும் நன்குடைமையும், பிறவும் உடைனவாய்த் திகழ்ந்தான்’’ என (207,217) என்ற அடிகளில் நல்லூர் நத்தத்தனார் இவ்வள்ளலின் அருமை பெருமைகளை நன்கு பாராட்டியுள்ளார்.

சங்க காலத்தில் ஈகை குணம் சிறக்கப் பெற்ற
ஏழு வள்ளல்களின் பெருமை பற்றி இந்நூல் வழி
அறிய முடிகின்றது.

மழை வளமுடைய, மலையின் பக்கத்திலே
கான மயிலொன்று கலாபத்தை விரித்து
ஆடிக் கொண்டிருந்தது.

அதைக் கண்டவுடன் குளிர் தாங்காமல்
நடுங்குகின்றது என்று எண்ணி, உடனே தனது
போர்வையை அதன் மீது போர்த்தினான்.

இவன் வலிமை வாய்ந்தவன்.
ஆசிரியர் குடியிலே பிறந்தவன் பேகன் என்னும்
பெயருடையவன். (84&87)

அரசியல் அறம் செங்கோல், முறைமை தவறாத
ஆட்சியினை உடையவன்,
கொடை, அளி, செங்கோல், குடியோம்பல்
ஆகிய நான்கும் உடையவனாய்த்
தான் பெறற்கு அரிய ஆறில் ஒரு பங்கு பொருளையும்
வறுமை நீங்கிய வழிக்கொள்ளல் வேண்டின்
அவ்வாறு கோடலும், கழித்தல் வேண்டின்
இழத்தலும் தளர்ந்த குடிகளைப் பேணலும்,
யாவர்க்கும் தலையளி செய்தலும்,
குடிகளைப் பிறர் நலியாது காத்துத்
தானும் நலியாது பேணுதலும்,
பிறவுமாகிய அரசியல் அறத்தை வழுவாது காப்பவன்.

“ஏரோர்க்கு நிழன்ற கோலினை’’ (233)
என்ற அடி பயின்று வரும் தொடரால் அறியலாம்.

இவன் தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநர்க்கும்,
புலவர்க்கும், அருமறை, பயின்ற அந்தணர்களுக்கும்
எப்பொழுதும் காட்சி தருவான்.

அவர்கள் வேண்டுவனவற்றை விருப்புடன் கொடுப்பான்.
இமயம் போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவு இவர்களுக்காக எப்பொழுதும் திறந்தேயிருக்கும்.

புறநானூற்றில் நன்னாகனார் இயற்றிய 176 ஆம் பாடலில் நல்லியக்கோடனின் கொடைத்தன்மை சுட்டப்படுகிறது.

சிறுபாணாற்றுப்படையில், கொடிய வறுமைக்குட்பட்டு
தம் சுற்றத்துடன் எதிர்நோக்கி வரும் பாணன் ஒருவனைப் பார்க்கின்றான் நல்லியக்கோடனிடம் பரிசு பெற்று வரும் பாணன்.

தான் பெற்ற பரிசினைப்போன்றே அவனும் பெறவேண்டும்
என்னும் நல்ல எண்ணத்தில் நல்லியக்கோடனைக் காணச்செல்லுவதற்கான வழியினையும்
அவன் பெருமைகளையும் எடுத்துரைக்கின்றான்.

இத்தகைய நல்லியக்கோடனின் கொடைச்சிறப்பினைச் சொல்லப்புகும் பாணன்,
சேர நாட்டின் சிறப்பினையும்,
பாண்டிய நாட்டின் பெருமையையும்,
சோழ நாட்டின் செழிப்பினையும் எடுத்துக்கூறி,
இவ்வளவு வளங்கள் கொண்டுள்ள
அரசுகளைப்பற்றி நீ பாடினாலும்
அவர்கள் கொடுக்கும் பரிசு
நல்லியக்கோடனின் பரிசுக்கு இணையாகாது
என்கின்றான்.

சேர, பாண்டிய, சோழர்கள் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ள நத்தத்தனார் நல்லியக்கோடனின் பெருமையினைப் பேசுவதற்காகவே இப்படியொரு உத்தியினைக் கையாண்டுள்ளார் என்று எண்ணத்தோன்றுகிறது.

இவர் வேறு எந்த மன்னனைப் பற்றியும் பாடவும் இல்லைப் பரிசுக்காக யாரையும் நாடிச்செல்லவுமில்லை.

இதனை, சிறுபாணாற்றுப்படையைத் தவிர இவர் பாடிய
பாடல்கள் எதுவும் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை எனலாம்.

கடையெழு வள்ளல்களின் கொடைச்சிறப்பினையும்
அவர்களின் நாட்டு வளம் மற்றும் வெற்றிச்சிறப்பினையும்
பாணன் மூலம் கூறும் நத்தத்தனார்,
பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி
ஆகிய எழுவரும் நடத்திய கொடையாகிய பாரத்தை
தான் ஒருவனே ஏற்று நடத்தும் வல்லமை படைத்தவன் நல்லியக்கோடன் என்கிறார்.

மூவேந்தர்களைவிட அஃறிணைகளின்மீதும் அக்கறைக் கொண்டு கொடை வழங்கியுள்ள கடையெழு வள்ளல்களை நத்தத்தனார் பெரிதும் மதித்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.

பாணன் சென்ற வழியில் பாலை, நெய்தல், முல்லை, மருத நிலவாழ் மக்களின் உணவு முறை பற்றியும்
பாணன் கூறுவதோடு அவ்வந்நில மக்கள் வழங்கிய உணவுகள் பற்றியும் கூறுகின்றான்.

நத்தத்தனார் பழந்தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று
ஐந்நில மக்களின் நாட்டின் வளம், செல்வச்செழிப்பு,
உணவுப்பழக்க வழக்கங்கள், போன்ற வாழ்வியல் செய்திகளை அறிந்து வந்துள்ளார் என உய்த்துணர முடிகிறது.

இவ்வாற்றுப்படை பாணர்களின் பெயரில் இயற்றப்பட்டிருந்தாலும் அவர்களின் வறுமைக்கோலத்தினை மட்டும் பேசி நல்லியக்கோடனின் பெருமையினை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.

நல்லியக்கோடனின் ஆட்சி சிறப்பினையும்,
கொடையுள்ளத்தையும் வரலாற்றில்
இடம்பெறச்செய்வதற்காகவே இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது
என்பதனை உணர முடிகிறது.

சங்க இலக்கியங்களில் எங்குபார்த்தாலும்
பாணர்களும் அவர்களின் சுற்றமும் வறுமை, பசி, கந்தலாடை, வாயில்களாக இருந்து செல்வச்சீமாட்டிகளான தலைவியரிடம் வசை வாங்கிக்கொள்ளுதலே பேசப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

கலை என்றபோது அழகுதானே வடிவம் கொள்ளும்?
அதற்கேற்ப இந்த இசைக் குழாம் பெண்களின் அழகினை
அடிமுதல் மிடிகாறும் அழகொழுகப் பாடக் காண்கின்றோம்.

சிறுபாணாற்றுப்படை: பாணர் நிலை
*******************************************************************************
சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன.

திருமுருகாற்றுப்படை முருகனின் அருளைப் பெறுவதற்காகவும்
பிற நான்கும் அரசனின் புகழ்பாடி அவன் கொடுக்கும் கொடைப்பொருளைப் பெறுவதற்காகவும் பாடப்பட்டுள்ளன.

(அடுத்த பதிவுகளில் தொடர்ந்து பார்ப்போம்)

***********************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
29/07/2016

--

.

கருத்துகள்