ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. முது பெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர்,

ஹைக்கூ முதற்றே உலகு !


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் மதிப்புரை; 4.முது பெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர்,
நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை
மதுரை.,
 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.  பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.com
*****
       கையில் வாங்கியவுடன் படிக்கத் தூண்டும் நூல்கள் சில உண்டு.  அதில் ஒன்றாக எண்ணி, நான் ஆர்வத்தோடு படிப்பது இரா. இரவியின் கவிதைத் தொகுப்புகள்.  படித்ததின் பலனாக மேற்குறிப்பிட்ட “ஹைக்கூ முதற்றே உலகு” நூலுக்கு விமர்சனம் எழுதவில்லை.  நிதர்சனமான உண்மையை வெளிப்படுத்தி உள்ளேன்.  (எனக்குத் தெரிந்தவரை).

       மல்லிகைத் தோட்டத்திற்குள் நுழைந்தேன்.  எல்லா மலர்களிலிருந்தும் நறுமணம் வீசும் போது, அது எந்த மலரிலிருந்து தனித்து வீசியதென்று நான் எப்படிக் கண்டுபிடிப்பது?  இரா. இரவியின் கவித்துவமலர்கள் போல.

       அதிகாலை நேரம், பால் பிடித்த பருவத்தில் நெற்பயிர்கள், காற்று வீசும் போது, அலை போல படுத்து எழும்.  நெற்கொத்திலிருந்து வாசம் வீசியது.  உலகத்தில் எந்த ஒரு வாசனை திரவத்திற்கும் இல்லாத புது நறுமணத்தை நுகர்ந்தேன்.  இயற்கைக்கு முன்னே செயற்கை தோற்றுப் போனது.  இயற்கையாக, இயல்பாக, எளிமையான வார்த்தைக் கோர்வைகளால் படைக்கப்பட்ட வலிமையான கருத்தைச் சொல்லும் இரா. இரவியின் கவிதை வரிகள் போல, ஒரு புது நறுமணம் நுகர்ந்தேன்.

       இவர் படைப்புக்கள் எப்போதுமே ஒரு கேள்விக்குறி?  பகுத்தறிவுச் சிந்தனையோடு படித்தால், சிந்தித்தால், ஒரு ஆச்சர்யக் குறியாக நம் மனம் மாறுவதை நாமே உணர் முடிகிறது.  இது இவரது தனித்துவம்.

       மார்கழி மாதம், கருத்து மூடி நின்ற வானம் பொழிந்த மழைத்துளிகளின் கனம் தாங்காது, ஆற்றுப்படுகை ஓரம் நின்ற மூங்கில் முனை வளைந்து அதன் கூர் இலைகள், பாய்ந்து ஓடும் நதி நீரில் பட்டும், படாமலும் முத்தமிடும் போது ஏற்படும் சிலிர்ப்பினைப் போன்று, சில கவிதை வரிகளின் கருத்துக்கள் நம் உணர்வினைத் தூண்டி மெய்சிலிர்ப்பு அடையச் செய்கின்றன.

       கோபுர உச்சியில, சூரிய ஒளியில் மின்னுகின்ற கலசத்தைப் போல் சில வரிகள், ஆலயமணி ஓசை போல காதில் ரீங்காரமிடும் வரிகள் சில.  இப்படி இவரது படைப்புகள், மூவரிக் காவியமா? இல்லை அஜந்தா ஓவியமா என நம்மை திகைக்க வைக்கிறது.

       ஒரு கைதேர்ந்த நெசவாளி, மெல்லிய ஆனால் வலிமையான நூலில் நெய்த பொன்னாடையா இவரது கவிதைகள்!?

       தன்னம்பிக்கையை தாய்ப்பால் ஊட்டுவது போல, தமிழ்ப்பாலில் புகட்டியுள்ளார்.

       அரசமரத்தின் முற்றிய இலைகள், காற்றில் வேகமாக அசைந்து, ஒன்றோடொன்று உரசிக்கொண்டு பேரொளியாக சப்தத்தை எழுப்பி விட்டு, மீண்டும் காற்று நின்றதும் அமைதியாகி விடுவது போல, (காற்றின் வேகத்தில் சில சாய்ந்த, தேவையில்லாத இலைகள் தானாகவே உதிர்ந்து விடுவதும் உண்டு)  சப்த, நிசப்த வேறுபாடுகளை சில கவிதைகளில் குறியிட்டுக் காட்டியிருப்பது இவர் கவித்துவத்தின் சிலேடையான தனித்தன்மை.

       புரட்டிப் பார்த்தேன், ஒவ்வொரு கவிதையும் என்னைத் தட்டிப் போட்டது.  (நினைவில் மட்டுமல்ல, கனவில் கூட)  புரட்டிப் போட்டவற்றில் என்னால் முடிந்தவரை திரட்டிக் கொடுத்துள்ளேன்.

       கவிதைக் களத்தில் தனக்கென ஒரு தனித்துவம் காட்டி வரும் இனிய நண்பர் இரா. இரவிக்கு என் உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

       எந்த ஒரு கவிதையையும் மேற்கோள் காட்டவில்லை.  நீங்களே படித்துப் பாருங்கள், இக்கட்டுரையின் உண்மை உங்களுக்குப் புரியும்.

       ஹைக்கூ முதற்றே உலகு (எழுதிய)
       உங்கள் எழுதுகோல் முனை,
       கூர்மையான பறவையின் அலகு!

--

கருத்துகள்