நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !

நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !

நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை: பேராசிரியர் முனைவர் .சந்திரா !
neraimathi@rocketmail.com

.வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.  பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.com

கோபுர நுழைவாயில்:
                     நேர்மறையும் எதிர்மறையும் இரு சக்கரங்களாக உருள, ஒன்றல்ல;இரண்டல்ல;மூன்று குதிரைகளைப்பூட்டி, மூடநம்பிக்கை என்னும் கடிவாளம் கொண்டு இறுக்கி ,பகுத்தறிவு பாதையில் விழிப்புணர்வு கொடி பறக்க இலக்கியத் தேரில் பயணிக்கின்றார் ஹைக்கூ சாரதியாம் கவி.இரா.இரவி.

 எல்லோரது இதயமும்' லப்-டப் '-என ஒலித்தால், கவி இரா.இரவியின் இதயம் மட்டும் ஒருவேளை ஹைக்கூ-ஹைக்கூ என ஒலிக்குமோ? அதன் நல்விளைவுதான் ஹைக்கூ முதற்றே உலகாக  இருக்குமோ?இவரது பதினைந்தாவது நூல்  முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அறிமுக உரையுடன்,தமிழ்த்தேனீ  இரா.மோகன் அணிந்துரையுடன் பாங்காக  வெளிவந்துள்ளது.இறையன்பு உரை இவரை ஒரு நல்மனிதராக இலக்கிய உலகிற்கு காட்ட,இரா.மோகன் உரையோ இவரை நல்லதொரு கவிஞனாக நூலை வாசிக்கும் அனைவரையும் எண்ணவைக்கின்றது!
எது முதல் எதுவரை?
                கலங்கரை விளக்கம் முதல் கையேந்திபவன் வரை.வள்ளுவ நூல் முதல் முகநூல்வரை,மிளகு முதல் மில்லியனர் வரை,புல்லுருவி முதல் பொக்ரான் வரை,காகம் முதல் காட்டு யானைவரை,கொம்புத்தேன் முதல் பீசா வரை,நாட்காட்டி முதல் ஈட்டிக்காரன் வரை என ஆதி முதல் அந்தம் வரை நாம் சர்வ சாதாரணமாக நினைக்கின்ற சின்னஞ்சிறு விஷயத்தையும் கூட கருவாகக் கொண்டு ஹைக்கூ ஒவ்வொன்றும் இரா,இரவி அவர்களால் இந்நூலில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.
நரம்போட்டம்:
              ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலை உற்று நோக்கி வாசிக்கும் வேளையில், பனைமரம் பக்குவமாய் தத்துவம் பகர்கின்றது!மலர்கள் வாசம் பரப்புவதோடு,நம் செவிக்கு அருகே வந்து சிற்சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்கின்றது! திருஷ்டி பொம்மைகூட தன் கண்களை உருட்டுவதை மறந்துவிட்டு அழகியல் பற்றி பேசுகின்றது!

இவரது
  ஹைக்கூவில் சீறும் சிங்கமும் உறுமும் புலியும் சிநேகம் கொள்கின்றன!வெங்காயம் கூட வெகுண்டெழுந்து வினா எழுப்புகின்றது!சுவற்றில் நகரும் பல்லி சற்றே கீழிறங்கி நூலை வாசிப்போர்க்கு பாடம் புகட்டிப்போகின்றது!
பழமொழியா?பழிமொழியா?
                பழமொழிகள் ஒவ்வொன்றும் கவியின் உள்மனதிற்குள் புகுந்து புதுமொழிகளாய் உருவெடுக்கின்றன.கூடவே பழிமொழிகளாய் மாறி சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி கொடுக்கின்றது!

மூட நம்பிக்கையோ கவிஞரால் முச்சந்தியில் போட்டு உடைக்கப்படுவதோடு,இதுவரை பின்பற்றி வந்தோர்களை முட்டிக்கு முட்டி தட்டவும் செய்கின்றது!புரட்சி என்னும் தலைப்பில் இரா.இரவி படைத்திருக்கும் ஹைக்கூ அனைத்தும் வாசிப்போர்க்கு மிரட்சியை ஏற்படுத்துகின்றது!அத்தோடு விளம்பர உலகம் பேசும் வெற்று நியாயத்தையையும்  பறைசாற்றுகின்றது!
உதாரணத்திற்கு ஒன்று!
          தம்பி உடையான்
          படைக்கு அஞ்சினான்!
          எதிரணியில் தம்பி! (.146)
சொல்மழையா?கல்மழையா?
            கவி இரா.இரவிக்கு ஒவ்வொரு சொல்லும் விதை நெல்லைப்போல என்றுகூறலாம். தன்னுள் தோன்றிய ஒரு சாதாரண சொல்லை சற்றே மாற்றி அமைத்து சமூக நடப்புக்களை புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுவது என்பது இவருக்கு கைவந்த கலை!எடுத்துக்காட்டிற்கு இதோ ஒன்று!
       "ஆடாதே மனிதா!
       ஆடி உணர்த்தியது
       மாலை!" (.46)
சொல்விளையாடல்:
       மாணவர்களை விரும்பியவர்!
       மாணவர்களும் விரும்பியவர்!
        கலாம்! (.23)
கல்வெட்டு கவிதை:
        மறைந்த தலைவர்கள்
        மறையாமல்  வாழுமிடம்!
        நூலகம்  (.126)
விடியுமா?அடையுமா?
           நாமெல்லாம்  நுனிப்புல் மேய்வதுபோல் வாசித்துவிட்டு அந்தப்பொழுதிலேயே மறந்துவிடும் நாளிதழ் செய்திகள்தான் கவியின் ஹைக்கூவிற்கு பெரும்பாலும் கருவாகின்றது!

தன்
புலமைவழி இந்த சமூகம் விழிப்புணர்வு
அடைந்துவிடாதா?  என்ற எண்ணம்தான் அவரை ஹைக்கூ படைக்கத் தூண்டுமோ? என்னவோ? இலக்கிய உலகில் கவி இரா.இரவி அவர்களின் இலட்சியம் நிறைவேற என் போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்